எடப்பாடி பழனிசாமியிடம்.. அண்ணாமலை அறிவிப்பு பற்றி கேட்டதுமே.. அவரது "ஒற்றை" பதிலை பாருங்க.. ஆஹா
சென்னை: திமுகவின் ஊழல் மற்றும் சொத்து பட்டியல் இன்று வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ள நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாடு அரசு மீது அண்ணாமலை ஏராளமான புகார்களை முன்வைத்து வந்தார். எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி கூட முன்வைக்காத விமர்சனத்தை அண்ணாமலை அசால்ட்டாக முன்வைத்திருந்தார். இதனை திமுக தலைவர்கள் பெரியதாக கண்டுகொள்ளாவிட்டாலும் கூட சில அமைச்சர்கள் மட்டும் இதற்கு பதிலளித்து வந்தனர். குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையின் கருத்துக்கு கடுமையாக எதிர்வினையாற்றினார்.

கொங்கு மண்டலத்தில் யார் கோலோச்சுவதென இருந்த மோதலில் இந்த கருத்து மோதலும் அதிகரித்தது. இப்படியாக ரஃபேல் வாட்ச் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது அண்ணாமலை கையில் கட்டியிருக்கும் வாட்ச் வெளிநாட்டு நிறுவனத்தினுடையது எனவும், இது லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடையது எனவும் விமர்சிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, இந்த வாட் ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களில் செய்யப்பட்டது என்று கூறினார். இதனையடுத்து இதை வாங்கியதற்கான 'பில்' பஞ்சாயத்து பெரியதாக வெடித்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி பில் கேட்க.. பில்லுடன் சேர்த்து அமைச்சர்களின் சொத்து மற்றும் ஊழல் பட்டிலும் வெளியிடப்படும் என்று அண்ணாமலை அறிவித்தார். இதனையடுத்து தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. ஏப்ரல் 14ம் தேதி காலை 10.30 மணியளவில் கமலாலயத்திலிருந்து இந்த பட்டியல் வெளியிடப்படும் என்று அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நேற்று அவர் பதிவிட்டிருந்த ட்வீட் பேசுபொருளானது.
அதாவது, "முன்னாள் முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன், செல்வி, மு.க.முத்து, மு.க.அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதிமாறன் ஆகியோரின் படங்களுடன் வீடியோவை வெளியிட்டு, நாளை (ஏப்.14) காலை 10.15 மணிக்கு 'திமுக ஃபைல்ஸ்' வெளியிடப்படும்" என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் 'ஆருத்ரா' வழக்கு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதில் விரைவில் பாஜக நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36 ஆயிரம் வட்டியாக கிடைக்கும் என ஆருத்ரா நிறுவனம் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதனை நம்பி சுமார் 1,09,255 பேர் ரூ.2438 கோடி வரை முதலீடு செய்தனர். ஆனால் அவர்களுக்கு வட்டியும் கிடைக்கவில்லை, அசலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசாருக்கு பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தன.
அதாவது ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநர்கள் பாஜகவில் பல முக்கிய பதவிகளை வகித்து வந்துள்ளனர். இதனையடுத்து அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்த நிலையில் விரைவில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில்தான் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறியுள்ளார். தன் மீதான நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுகிறாரா? அல்லது ஊழல் பட்டியலை வெளியிடுவதால் காவல்துறை ஆருத்ரா வழக்கில் தீவிரம் காட்டுகிறதா? என பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
அதேபோல இந்த ஊழல் பட்டியலை வெளியிடுவது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வியெழுப்பியதற்கு, "அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு தெரியாது" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே பாஜக-அதிமுக மோதல் போக்கு டெல்லி தலைமை தலையீட்டின்படி முடித்து வைக்கப்பட்ட நிலையில், ஈபிஎஸ்ஸின் கருத்து தற்போது அனைவரின் கவனத்திற்கும் உள்ளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications