Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உத்தரப் பிரதேசம், குஜராத் பரவாயில்லை.. தமிழகம் மோசம்! பட்ஜெட் மீது எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் நடப்பாண்டு பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களை விட பின்தங்கி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இந்த விடியா தி.மு.க. அரசு நான்காவது முறையாக தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையால் மக்களுக்கு எதிர்பார்த்த பயன் இல்லை. 2024-2025ஆம் ஆண்டு பட்ஜெட்டை வார்த்தை ஜாலங்களால் நிரப்பி, மக்களின் கவனத்தை திசை திருப்பி, ஏமாற்றும் முயற்சியாக இருந்ததே தவிர, எந்த நீண்டகால வளர்ச்சித் திட்டங்களோ, நிதிநிலையை சீராக்கும் முயற்சிகளோ இந்த நிதிநிலை அறிக்கையில் தென்படவில்லை.

Edappadi Palaniswami comments that Tamil Nadu is lagging behind Uttar Pradesh in terms of economic development

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அதிக கடன் வாங்கி, வருவாய் செலவினங்கள் மேற்கொள்வதாக குறை கூறிய திமுக, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆதாரத்தைப் பெருக்கி வருவாய்ப் பற்றாக்குறையை அறவே நீக்கிவிடுவோம் என்று வாய்ஜாலம் பேசி, மக்களை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்தது. விடியா திமுக அரசு உறுதி அளித்தபடி நிதிநிலையை மேம்படுத்தியதா? என்றால் இல்லை.

எங்களுடைய ஆட்சிக் காலத்தில் கொரோனா பாதித்த 2020-2021ம் ஆண்டைத் தவிர, மற்ற ஆண்டுகளில் வருவாய் பற்றாக்குறை கட்டுக்குள்தான் இருந்தது. ஆனால், விடியா திமுக ஆட்சியில் 2021-22ஆம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.46,538 கோடி. 2022-23 திருத்த மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறையை ரூ.30,476 கோடியாகக் குறைத்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டது விடியா திமுக அரசு. ஆனால், இப்போது 2022-23க்கான கணக்குகள்படி அது ரூ. 36,215 கோடியாக உயர்ந்துள்ளது.

2023-24ல் வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ. 37,540 கோடியாக இருக்கும் என்று கூறினீர்கள். ஆனால், அது திருத்த மதிப்பீட்டில் ரூ. 44,906 கோடியாக உயர்ந்துவிட்டது.

2024-2025ஆம் ஆண்டிற்கு திட்ட மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ. 49,278 கோடியாக உயரும் என காட்டப்பட்டுள்ளது. இதுவும் திருத்த மதிப்பீட்டில் எவ்வளவு உயரும்; இறுதி கணக்குகள்படி எவ்வளவு உயரும் என்பது கேள்விக்குறியே.

எனவே, வருவாய் பற்றாக்குறையை முழுமையாக அகற்றுவோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆண்டுதோறும் வருவாய் பற்றாக்குறையை உயர்த்திக்கொண்டே செல்கிறது விடியா திமுக அரசு.

இதில், விடியா திமுக அரசு கூறியபடி நிதி மேலாண்மைத் திறன் எங்கே உள்ளது? அதேபோல், நிதிப் பற்றாக்குறை 2021-22ல், ரூ.60,481 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை, 2024-25ல் ரூ.1,08,681 கோடியாக உயர்ந்துவிட்டது. கடனை குறைப்போம் என்று சொன்ன விடியா திமுக அரசு அதையும் குறைக்கவில்லை.

ஒரே ஆண்டில், அதாவது 2021-22ம் ஆண்டில் ரூ. 84,747 கோடி நிகரக் கடனாகவும்; 2022-23ம் ஆண்டு ரூ.73,957 கோடி நிகரக் கடனாகவும் பெறப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டு ரூ.90,369 கோடி நிகரக் கடன் பெற உள்ளதாக திருத்த மதிப்பீடு கூறுகிறது. அதே நிகரக் கடனாக 2024-25ல் ரூ.1,04,318 கோடி பெறப்பட உள்ளது.

ஆக, விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நான்கு ஆண்டுகளுக்கு (மார்ச், 25) ரூ.3,53,391 கோடி கடன் சுமை தமிழக மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ளது. 2024-25ஆம் ஆண்டு இறுதியில் நிகர கடன் அளவு ரூ. 8,33,362 கோடியாக உயரும் என்று விடியா திமுக அரசு கூறி உள்ளது.

அனேகமாக, விடியா திமுக ஆட்சி 5 ஆண்டுகள் முடிவடையும்போது தமிழகத்தின் கடன் தொகை ரூ. 5 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துவிடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆக, நாங்கள் விட்டுச்சென்ற போது தமிழக அரசு அதுவரை பெற்ற கடன் அளவை, ஐந்தே ஆண்டுகளில் இரட்டிப்பாக ஆக்கப்பட்டுள்ளது. இதுதான் விடியா திமுக அரசின் நிதி மேலாண்மைக்குச் சான்று.

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பெறப்பட்ட கடன் மூலதன செலவிற்கு செலவிடாமல், வருவாய் செலவினத்திற்கு செலவிடப்படுகிறது என்று திமுக குறை கூறியது. ஆனால், விடியா ஆட்சியில் பெறப்படுகின்ற கடன், மூலதன செலவிற்கு மட்டுமா செலவிடப்படுகிறது?

2021-2022ல், பெறப்பட்ட நிகரக் கடன் ரூ. 84,740 கோடி. ஆனால், விடியா திமுக அரசு மேற்கொண்ட மூலதனச் செலவு ரூ. 37,010 கோடிதான்.
2022-23ல் பெறப்பட்ட நிகரக் கடன் ரூ. 73,957 கோடி. ஆனால், திமுக அரசு மேற்கொண்ட மூலதனச் செலவு ரூ. 39,529 கோடிதான்.
2023-24ல் திருத்த மதிப்பீட்டில் பெறப்பட்ட நிகரக் கடன் ரூ. 90,369 கோடி. ஆனால், விடியா திமுக அரசு மேற்கொண்ட மூலதனச் செலவு ரூ. 42,531 கோடிதான்.
2024-25ல் மூலதனச் செலவு 47,681 கோடி. ஆனால், பெறப்படும் கடனோ 1,04,318 கோடி. இதில் மீதி செலவை வருவாய் செலவினங்களுக்குத்தானே செலவிடப்படுகிறது. இதில் என்ன நிதி மேலாண்மை?

இந்த ஆண்டு (2024-25) நிதிநிலை அறிக்கையில் மூலதனச் செலவு 2025-26ல் ரூ. 66,753 கோடி என்றும், 2026-27ல் 96,793 கோடி என்றும் கணித்துள்ளீர்கள். இது சாத்தியமா?

நிதிப் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து 2021-22ல் ரூ. 60,481 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை 2024-25ல் 1,08,689 கோடியாக உயர்ந்துள்ளது. இதுதான் விடியா திமுக அரசின் திறமையான நிதி மேலாண்மையா?

முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் உரையின் மீது பதில் அளிக்கும்போது, தனது அரசின் சாதனைகளாக 10 சாதனைகளைக் குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் தமிழ் நாட்டின் சாதனையாகச் சொல்லலாமே தவிர, விடியா திமுக அரசின் திராவிட மாடல் சாதனை என்று சொல்ல முடியாது. உதாரணமாக;

இந்திய பொருளாதாரத்திற்கு 9 சதவீத பங்களிப்பை தமிழ் நாடு தருவதாகவும், அதை தனது அரசின் சாதனையாகக் கூறுகிறார். தமிழ் நாடு பல ஆண்டுகளாக இந்திய பொருளாதாரத்திற்கு சுமார் 9 சதவீத பங்கைத் தருகிறது. அதில் இந்த மூன்று ஆண்டுகளில் ஏதேனும் அதிகரித்துள்ளதா என்றால் இல்லை. எனவே, இது தமிழ் நாட்டின் சாதனை என்று சொல்லலாமே தவிர, திமுக அரசின் சாதனை என்று கூற முடியாது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் தமிழ் நாடு இரண்டாம் இடத்தில் இருப்பது இந்த மூன்று ஆண்டில் நடந்த சாதனை அல்ல. தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த மூன்று ஆண்டுகளில் என்ன சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது? இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 7.24 சதவீதம் என்று இருக்கம்போது தமிழ்நாட்டின் வளர்ச்சி 8.19 சதவீதம் என்று கூறியுள்ளார். ஓரிரு ஆண்டுகளை தவிர கடந்த பல ஆண்டுகளில் தமிழ் நாட்டின் வளர்ச்சி
இந்திய வளர்ச்சியைவிட அதிகமாகத்தான் உள்ளது.

இதே திமுகவின் ஆட்சிக் காலமான 2021-2022ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதம். ஆனால், தமிழ் நாட்டின் வளர்ச்சி 7.92 சதவீதம்தான். எனவே, தொடர்ச்சியாக தமிழ் நாட்டின் வளர்ச்சி எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும். அதுவும், நமக்குப் போட்டியாக உள்ள மாநிலங்களை ஒப்பிடும்போது எப்படி உள்ளது என்பதைப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக, நம்மைவிட முன்னேற்றம் அடைந்துள்ள மகாராஷ்டிராவின் வளர்ச்சி விகிதம் 2021-2022ல் 9.13 சதவீதம். நமது இடத்தைப் பிடிக்க போட்டியாக அடுத்த நிலையில் உள்ள உத்தரப் பிரதேச வளர்ச்சி விகிதம் 10.20 சதவீதம். குஜராத் மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 10.56 சதவீதம். கர்நாடகாவின் வளர்ச்சி விகிதம் 10.96 சதவீதம். ஆனால். தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் அந்த ஆண்டில் 7.92 சதவீதம்தான். அதனால்தான் நான் கூறினேன், இந்த மாநிலங்களைக் காட்டிலும் அதிக வளர்ச்சியை நாம் பெற்றால்தான், நமது இரண்டாவது இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

பணவீக்கம் இந்திய அளவில் 6.65 சதவீதம் என்றும், தமிழ் நாட்டில் 5.97 சதவீதம் என்றும் குறிப்பிட்டு, அதை 4-ஆவது சாதனையாகக் கூறுகிறார். பொதுவாக, பணவீக்கம் மத்திய அரசின் கொள்கைகளைச் சார்ந்தது. தமிழ் நாட்டில் பணவீக்கம் எப்போதும் பிற மாநிலங்களைவிட குறைவாகவே இருக்கும். இது, ஸ்டாலின் அரசின் சாதனை என்று கூறிக்கொள்ளும் அளவிற்கு, அவர் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஏதாவது செய்தாரா என்பதுதான் கேள்வி?

கல்வியில் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தியது ஒரு சாதனை என்று கூறுகிறார். அதற்கு, இவர் மட்டுமா காரணம் ? கடந்த 3 ஆண்டுகளில் இந்நிலையை எட்டிவிட்டாரா? தமிழ் நாட்டை 10 ஆண்டுகள் ஆட்சி செய்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் கொள்கைகளும், திட்டங்களும், கல்வி வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்பதை வசதியாக மறைத்துவிட்டார்.

இப்படி பிறருடைய சாதனைகளை, குறிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசின் திட்டங்களுக்கு விடியா திமுக அரசு பெயர் சூட்டிக்கொள்வதும், நாங்கள் போட்ட திட்டங்களை செயல்படுத்தி இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதும், விடியா திமுக அரசுக்கு வாடிக்கையான ஒன்று.

இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம்:

2021 சட்டமன்றத் தேர்தலின்போது அள்ளி வீசிய, இதுவரை நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. (கல்விக் கடன் ரத்து, கேஸ் சிலிண்டர் மானியம், 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்துதல், டீசல் மானியம், கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் கொண்டுவருதல், பழைய ஓய்வூதியம் என, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்)

எங்கள் ஆட்சியில் செயல்படுத்திய தாலிக்குத் தங்கம், விலையில்லா மடிக் கணினி, இருசக்கர வாகன மானியம் போன்ற பல மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு, அத்தொகையை இதர திட்டங்களுக்கு மடை மாற்றி உள்ளார்கள்.

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. இப்படி, நாங்கள் செயல்படுத்திய பல திட்டங்களுக்கு விடியா திமுக அரசு புதிய பெயர் சூட்டி உள்ளது. உதாரணமாக, சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், ஆதிதிராவிட குடியிருப்பு அடிப்படை வசதிகள் திட்டம், பள்ளிகளுக்கான அடிப்படை கட்டமைப்புத் திட்டம், மகளிர் விடுதி திட்டம் என, பல திட்டங்களைக் கூறலாம். இவையெல்லாம் கழக அரசின் திட்டங்களுடைய தொடர்ச்சியே என்பதில் மகிழ்ச்சிதான்.

வட சென்னை வளர்ச்சித் திட்டம்: கடந்த நிதிநிலை அறிக்கையிலேயே அறிவித்துள்ளார்கள். மூன்று ஆண்டுகளில் 1000 கோடி என்பதை இந்த நிதிநிலை அறிக்கையிலும் சொல்லி உள்ளீர்கள் என்றால், கடந்த ஆண்டு விடியா திமுக அரசு அறிவித்தபடி இந்தத் திட்டத்தை செயல்படுத்தவில்லையா?

அதேபோல், தற்போது சென்னையில் புறநகர் பகுதிகளை மேம்படுத்த 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி போதாது. ஏனெனில், சென்னையில் அனைத்து சுற்றுப்புறங்களிலும் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. போக்குவரத்து நெரிசலால் அனைவரும் அவதியுறுகின்றனர்.

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் எங்கள் ஆட்சியில், நான் கோயம்பேட்டில் திறந்து வைத்தேன். இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ளது எங்களது திட்டத்தின் ஒரு பகுதிதான். மற்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களும், பணிகளும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை (CRRT)-ன்கீழ் நாங்கள் திட்டமிட்டவைகள்தான்.

அதேபோல், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூரில் நதிகள் சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டப் பணிகளை மேற்கொள்ள ஆய்வுப்
பணிகள் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாங்கள் அறிவித்த நடந்தாய் வாழி காவேரி திட்டத்தைப் பற்றி எந்தவிதமான குறிப்பும் இல்லை. அது என்ன
ஆனது?

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: நெமிலியில் நாங்கள் அடிக்கல் நாட்டி செயல்படுத்திய திட்டம். அந்தத் திட்டம் விரைவில் செயலாக்கத்திற்கு
வருவது மகிழ்ச்சி. இதுபோல், நீண்டகால வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.

இயந்திரவழி கற்றல், செயற்கை நுண்ணறிவு, இயற்கை மொழிச் செயலாக்கம், போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு 5 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'யானைப் பசிக்கு சோளப்பொறி' போன்றது. இது, பொருளாதார வளர்ச்சியில் முதன்மைத் துறைகளின் வளர்ச்சி முக்கியமானது.

அதனால்தான், நாங்கள் அதிக மக்கள் நம்பியுள்ள விவசாயம், கால்நடை, மீன் நலம் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். கடந்த சில ஆண்டுகளாக முதன்மைத் துறையின் வளர்ச்சியிலேயே கால்நடைத் துறையின் வளர்ச்சி அதிக பங்கு வகிக்கிறது. தொலைநோக்குப் பார்வையோடு எங்கள் ஆட்சிக் காலத்தில் தலைவாசலில் தொடங்கப்பட்ட ஆய்வு மையம் கேட்பாரற்றுக் கிடக்கிறது. எந்த வளர்ச்சித் திட்டங்களும் இந்தத் துறைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த அறிக்கையில் கால்நடைத் துறை பற்றி கோடிட்டுக் காட்டிவிட்டுச் சென்றிருப்பது இந்தத் துறைக்கு அரசு எந்த முக்கியத்துவமும் தர விரும்பவில்லையோ என்று தோன்றுகிறது.

பேரிடர் மேலாண்மை என்ற குறிப்பில்; இந்த ஆண்டு ஏற்பட்ட பேரிடர் பற்றியோ; அதற்கு எவ்வளவு தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றியோ; எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்பது பற்றியோ; அதில் எவ்வளவு தொகையை நாம் மத்திய பேரிடர் நிதியில் பெறத் தகுதியிருந்தும், மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பது பற்றியோ குறிப்பிடாதது, விடியா திமுக அரசு இந்தத் தகவலை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்ய முயற்சி செய்கிறதோ என்று தோன்றுகிறது.

அதேபோல், இந்த அரசு வெளிப்படைத் தன்மையற்றது என்பதற்கு இன்னொரு உதாரணம், தொழில் துறையில் பெறப்பட்ட முதலீடுகள், உருவாக்கப்பட்ட வேலைகள் பற்றி எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை. இந்த அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு, வெளிநாட்டுப் பயணங்கள் ஆகியவற்றில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எத்தனை? பெற உத்தேசிக்கப்பட்டுள்ள முதலீடுகள் எவ்வளவு? உருவாகும் வேலைவாய்ப்புகள் எவ்வளவு? என்ற எந்தக் குறிப்பும் இல்லை.

ஆனால், முதலமைச்சர் அவர்கள் இதுவரை 8.25 லட்சம் கோடி முதலீடுகள் பெறப்பட்டதாகவும், 30 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும், 440 தொழிற்சாலைகள் புதிதாகத் தொடங்கப்பட்டதாகவும் பொதுவெளியில் குறிப்பிட்டார். தொழில்துறை அமைச்சர் வேறொரு புள்ளி விவரத்தைக் கொடுத்தார். இதில் உண்மையாகவே பெறப்பட்ட முதலீடு எவ்வளவு ? உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் எவ்வளவு ? இவை தொழிற்சாலைகள் வாரியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று நான் ஆளுநர் உரையில் பேசியிருக்கிறேன். அதுபற்றிய எந்தக் குறிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லாதிருப்பது ஒரு ஏமாற்றத்தையே தருகிறது. இந்த விவரங்களை கணினி வாயிலாகவே வெளியிடலாம். அதில் என்ன தயக்கம்?

இந்த நிதிநிலை அறிக்கையில் இதுபோன்று இன்னும் பல ஏமாற்றங்கள் உள்ளன. அவைகளை குறிப்பிட்டுக்கொண்டே போகலாம். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் வெளியிடுவதற்கு முன்பே கலால் வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, அனைத்து பதிவுத்துறை கட்டணங்களும் உயர்வு என்று அரசின் வருவாயை உயர்த்திவிட்டு, பிறகே நிதிநிலையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்வது இந்த அரசின் சாதனையாக உள்ளது. அதே சாதனையை இந்த ஆண்டும் செய்துள்ளது.

எனவே, நான் மேற்கண்ட தலைப்பில் கூறியவாறு வார்த்தை ஜாலங்களால் மக்களின் கவனத்தை திசை திருப்பி மக்களை ஏமாற்றும் விடியா திமுக அரசின் நான்காம் ஆண்டு பட்ஜெட் "கானல் நீர் பட்ஜெட்" என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+