ஓபிஎஸ் அதிமுகவே அல்ல- தனிக்கட்சி நடத்தி வருகிறார்- ஹைகோர்ட்டில் இபிஎஸ் தரப்பு அதிரடி
ஓபிஎஸ் தனிக்கட்சி நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அல்ல; அவர் தமக்கு என தனிக்கட்சி நடத்தி வருகிறார்; எடப்பாடி பழனிசாமிதான் இடைக்கால பொதுச்செயலாளர் என உலகத்துக்கே தெரியும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அன்றைய தினமே, பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி, ஓபிஎஸ் தரப்பிலும், அவரது ஆத்ரவாளர்கள் தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், அவசர வழக்காக எடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விசாரித்தது. அப்போது, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்காதபட்சத்தில், தேர்தல் முடிவுகளை அறிவிக்க மாட்டோம் என அதிமுக தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி குமரேஷ்பாபு, பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கையும் சேர்த்து இன்று விசாரிப்பதாக கூறினார். அதுவரை, பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஓபிஎஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார் ஆஜராகி வாதிட்டார். கடந்த ஆண்டு ஜூன் 23-ல் நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் அழைப்பு விடுத்தனர். பொதுக்குழு உறுப்பினர்கள் சிலர் இரட்டை தலைமையை மாற்றி ஒற்றைத் தலைமை கொண்டு வர வலியுறுத்தினர். அதனால் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்குகள் தொடரப்பட்டன. பொதுக்குழுவுக்கு அனுமதி வழங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட தீர்மானங்கள் தவிர வேறு எந்த முடிவும் எடுக்க கூடாது என உத்தரவிட்டது. அதனால் அன்றைய தினம் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்க கோரும் தீர்மானம் ஜூன் 23- ல் நடந்த பொதுக்குழுவில் முன்வைக்கப்படாத நிலையில், அப்பதவிகள் காலாவதியாகி விட்டதாக எப்படி கூற முடியும்? இரு பதவிகளும் காலாவதியாகி விட்டதாக உச்சநீதிமன்றமும் கூறவில்லை. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. கட்சியின் அடிப்படை விதிகளின் திருத்தம் தொடர்பான கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான முடிவை விசாரணை நீதிமன்றம்தான் எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரண்டு பதவிகளும் காலாவதி ஆகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை.
எனவே இந்த தீர்மானம் செல்லாது. எந்த வாய்ப்பும் அளிக்காமல், எந்தவித காரணமும் கூறாமல் கட்சியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கியுள்ளனர். இது தன்னிச்சையானது. நியாயமற்றது. கட்சியில் இருந்து ஓபிஎஸ்ஸை நீக்கியும், பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வரவும் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக, நிதி அமைச்சராக பதவி வகித்துள்ளார். 1977 முதல் கட்சியில் இருக்கிறார். பொருளாளர், ஒருங்கிணைப்பாளர் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரங்களில் கட்சிக்காக முக்கிய பணியாற்றியுள்ளார். அவரது ஒருங்கிணைப்பாளர் பதவி 2026 வரை நீடிக்கிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைக்கும் முடிவு தன்னிச்சையானது. ஜெயலலிதாவை நிரந்தர பொதுச் செயலாளர் என அறிவித்த நிலையில், அந்த பதவியை மீண்டும் கொண்டு வந்தும், அப்பதவிக்கு போட்டியிட தகுதி நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை உள்ளதாக கூறி, எந்த முடிவும் எடுக்க முடியும் எனக்கூறி முடிவெடுத்துள்ளனர். இந்த முடிவுகள் கட்சி நிறுவனரின் நோக்கத்துக்கு விரோதமானது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய தீர்மானத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரித்துள்ளது. 2021 ல் நடந்த தேர்தலில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள், அடிப்படை உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. தற்போது பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர்கள்.

பொதுச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பெறுவதற்காகவே முக்கிய பதவி வகித்த ஓபிஎஸ்ஸை திட்டமிட்டு நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசியல் கட்சி என்பது ஜனநாநயகம் தொடர்புடையது. உள்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூற முடியாது. கட்சி ஒன்றும் கிளப்போ அல்லது சங்கமோ கிடையாது. இது ஜனநாயக கொள்கை தொடர்பானது. ஓபிஎஸ்க்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் எதேச்சை அதிகாரமானது.
திமுகவுடன் நெருக்கமாக இருந்து கொண்டு கட்சிக்கு துரோகம் செய்ததாக ஒரு காரணத்தை எளிதாக கூறி, ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். தகுதி நீக்கம் செய்து விட்டு பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதை எப்படி சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிமை உள்ளதாக எம்.ஜி.ஆர். விதிகளை வகுத்த நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் இருக்கையில் அமர்வதற்காக தற்போது அப்பதவிக்கு போட்டியிட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்களும், கட்சியினரும் விரும்புகின்றனர் எனக்கூறி பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவதாக கூறுகின்றனர். அதற்கு எந்த பு ள்ளி விவரங்களும் இல்லை. பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது தொடர்பாக கட்சியினரிடம் எந்த கருத்துக்கணிப்பும் நடத்தவில்லை. பொதுக்குழு அதிகாரம், கட்சி விதிகளின்படி வரையறை செய்யப்பட்டுள்ளது. ஒற்றை தலைமை மக்கள் விரும்புகின்றனர். கட்சி அடிப்படை தொண்டர்கள் விரும்புகின்றனர் எனக்கூறி தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். எம்ஜிஆரின் விருப்பம் தொண்டர்களின் முடிவின்படி செயல்பட வேண்டும் என்பது தான். பொதுக்குழுவில் தீர்மானம் கொண்டு வந்து இரட்டை பதவியை ஒழிக்க முடியாது. 6-12-21 அன்று முதல் 5 ஆண்டுகள் வரை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் உள்ளது. அந்த பதவி காலம் இருக்கும் போதே, அதற்கு இணையாக பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கியுள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அதிகாரத்தை முற்றிலும் பறித்து விட்டனர். கட்சியின் முக்கிய நிர்வாகியை, தொண்டர்களின் செல்வாக்குள்ள ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியை விட்டு வெளியேற்றி விட்டனர். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. பொதுச் செயலாளர் பதவிக்கான நிபந்தனைகளை நீக்கினால், தேர்தலில் போட்டியிட ஓபிஎஸ் தயாராக உள்ளார். இவ்வாறு ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மனோஜ் பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் அப்துல்சலீம் ஆஜராகி வாதிட்டார். அவர், கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பு நோட்டீஸ் கொடுத்து விளக்கம் கேட்கவில்லை. குற்றச்சாட்டுகள் என்னவென்று கூறப்படவில்லை. இது இயற்கை விதிக்கு மாறானாது. ஜூலை 11-ல் ந்டந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தன்னைத்தானே இடைக்கால பொதுச் செயலாளர் என அறிவித்துக் கொண்டுள்ளார். அதற்கு தேர்தல் எதுவும் நடத்தப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து இபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிஎஸ் வைத்தியநாதன் ஆஜரானார். அவர் தமது வாதத்தின் போது, ஓபிஎஸ் தனிக்கட்சி நடத்தி வருகிறார். அதிமுக நிர்வாகிகள் பலரையும் நீக்கிவிட்டு தமக்கான நிர்வாகிகளை தொடர்ந்து நியமித்து வருகிறார். அதிமுகவில் விளக்கம் கேட்காமல் நீக்கிவிட்டதாக சொல்கிறார் ஓபிஎஸ்; ஓபிஎஸ் சகோதரரே விளக்கம் கேட்காமல்தான் அதிமுகவில் இருந்துநீக்கப்பட்டார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
அத்துடன் அதிமுகவுக்கு அவ்வப்போது சிலர் உரிமை கோரித்தான் வருகின்றனர்; ஆனால் தேர்தல் ஆணையத்தில், மக்கள் மன்றத்தில் அதனை நிரூபிக்க வேண்டும். மக்கள் செல்வாக்கும் பொதுக்குழு உறுப்பினர் செல்வாக்கும் யாருக்கு என்பதுதான் மிக முக்கியமானது என்றார்.
அதேபோல், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் குரலை ஒடுக்கும் வகையில் ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அதிமுக என்ற கட்சியின் கட்டமைப்பின் முக்கிய அம்சமே பொதுக்குழுதான் அதிகாரம் மிக்கது என்பதாகும். பொதுக்குழு தீர்மானங்களே மிக முக்கியமானதும் இறுதியானதும் ஆகும் எனவும் சிஎஸ் வைத்தியநாதன் வாதிட்டார்.
-
அதிமுக அஸ்திவாரத்தில் கை வைத்த பாஜக.. அமித்ஷா புள்ளி வைக்க.. தினகரன், அன்புமணி கோலம் போட.. என்னாச்சு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications