அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இப்போதைக்கு தேர்தல் ரேசில் முன்னணியில் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் வேலைகளை ஆரம்பித்த திமுக இன்னும் கூட்டணி பேச்சு வார்த்தைகளை முழுமையாக முடிக்கவில்லை. இன்னும் தொகுதி பங்கீடு, எந்தெந்த தொகுதிகளில் போட்டி? வேட்பாளர் தேர்வு என பல வேலைகள் இருக்கிறது. ஆனால் தாமதமாக தொடங்கினாலும் தொகுதி பங்கீட்டை முடித்துள்ள எடப்பாடி தற்போது பிரச்சாரத்தையே தொடங்கிவிட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் தகிக்க தொடங்கி இருக்கிறது. இதுவரை இல்லாத அளவு ஐந்து முனைப்போட்டி இந்த தேர்தலில் நிலவுகிறது. ஆளும் திமுக கூட்டணி எதிர்க்கட்சியான அதிமுக பாஜக கூட்டணி, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ் சசிகலா அணி என ஐந்து அணிகள் இந்த தேர்தலில் களம் காண்கின்றன.
திமுக கூட்டணியை பொறுத்தவரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள் அணிவகுகின்றன.

தற்போதைக்கு அந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு மட்டுமே முடிந்திருக்கிறது. அதிலும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகள் கடும் போராட்டத்திற்கு பிறகு இடங்களை பெற்றன. மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அறிவித்த நிலையில் கூட்டணியில் இருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேறிவிட்டது. அதே நேரத்தில் எதிர் முகாமான அதிமுகவில் பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இருக்கின்றன.
நாம் தமிழரும், தமிழக வெற்றிக் கழகமும் தனித்து போட்டியென அறிவித்துவிட்டன. தற்போதைய சூழலில் நாம் தமிழர் தனித்துப் போட்டி என்பதால் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கி விட்டார் சீமான். தமிழக வெற்றி கழகத்தை பொறுத்தவரை விஜய் நாளை தான் வேட்பாளர்களை அறிவிப்பார் எனவும், நாளை மறுநாள் முதல் பிரச்சாரத்தை தொடங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க இந்த ரேசில் முன்னணியில் இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தான். தேசிய கட்சியான பாஜக, மாநில கட்சிகள் ஆன பாமக, புநீக, புப, தமமுக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளை வைத்துக்கொண்டு தொகுதி பங்கிட்டை எந்தவித சிக்கலும் இன்றி முடித்திருக்கிறார். பாஜகவுக்கு 27 பாமகவுக்கு 17, அம்முகவுக்கு 11 என கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டதோடு எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதையும் அறிவித்து விட்டார்.
மேலும் அதிமுகவின் 23 வேட்பாளர்களையும் அறிவித்துவிட்ட எடப்பாடி பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டார். ஆனால் எதிர் முகாமில் இருக்கும் திமுக ஆட்சியை தொடரும் அமைப்பில் பல்வேறு சமரசங்களுக்கு இடம் கொடுத்து தான் வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தை காரணம் காட்டி கூடுதல் தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது, வாக்கு வங்கி இல்லாத தேமுதிகவுக்கு 10 சீட்டுகள், விடுதலை சிறுத்தைகள் அதிருப்தி என பல்வேறு சிக்கல்கள் எழுந்த சூழலில், தற்போதைக்கு எத்தனை தொகுதிகள் என்பது மட்டும்தான் முடிவு பெற்றிருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் ஏப்ரல் ஆறாம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் அவகாசம் நிறைவடைகிறது. அதற்குள் எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் போட்டியிடுகிறது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கட்சியும் 10 முதல் 40 தொகுதிகளை விருப்பத்தொகுதிகளாக தேர்வு செய்திருக்கிறது. சாதகமான தொகுதிகளில் தாங்களும் வெற்றி பெற வேண்டும், கூட்டணி கட்சிகளை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது திமுகவின் எண்ணம். ஆனால் திமுக பலமாக உள்ள அல்லது ஏற்கனவே தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்ட தொகுதிகளை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேட்பதாக சொல்லப்படுகிறது. இது திமுகவுக்கு ஒரு நெருக்கடி தான்.
அதே நேரத்தில் எடப்பாடி பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வலுவான வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு வரும் திமுக அதற்கு முன்னர் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications