எடப்பாடியை நெருங்கும் கொடநாடு வழக்கு? சசிகலா தலைமையில் அதிமுக? நாஞ்சில் சம்பத் தரும் அப்டேட்!
சென்னை: அதிமுகவின் தலைமையை சசிகலா கைப்பற்றுவாரா?, கொடநாடு கொலை வழக்கில் அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பது பற்றி நாஞ்சில் சம்பத் விரிவாகப் பேசியிருக்கிறார்.
ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிலிருந்தவர் நாஞ்சில் சம்பத். இவருக்கு இனோவா கார் வழங்கி, கட்சியில் ஒரு முக்கியமான இடத்தை வழங்கியிருந்தார் ஜெயலலிதா. அதனால் அரசியல் வட்டாரத்தில் இனோவா சம்பத் என இவரை சில கிண்டலாக அடைமொழி போட்டு அழைத்து வந்தனர். அதன்பின்னர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் டிடிவி தினகரன் அணிக்கு தாவினார். அதிமுகவை மீட்கும் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார். ஒரு கட்டத்திற்குப் பிறகு அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. எனவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை டிடிவி தினகரன் தொடங்கிய போது, கட்சியின் பெயரில் அண்ணாவையும் திராவிடத்தையும் புறக்கணித்துவிட்டார் எனக் கூறி அரசியல் வாழ்க்கையிலிருந்தே ஒதுங்கினார் சம்பத்.
இப்போது அரசியல் விமர்சகராக மேடைப் பேச்சாளராக வலம் வர ஆரம்பித்திருப்பதுடன் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அதிமுக மீண்டும் ஒன்றிணைவது பற்றியும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் கட்சி படுதோல்வி அடைந்து வருவது பற்றியும் ஒரு யூடியூப் தளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார்.
அதில் சம்பத், "அதிமுக ஒரே அணியாக ஒன்று சேர வேண்டும். அதிமுக காப்பாற்றப்பட வேண்டும். அதற்கான எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி நல்லது. அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்ற கட்சி அது. ஆகவே, ஒன்று சேருவதற்காக எடுக்கப்பட்டு வரும் முற்சி வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். எடப்பாடி பழனிசாமி தலைமை ஏற்ற பிறகு இதுவரை 10 தடவை தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
விக்கிரவாண்டியில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் 6 ஆயிரம் வாக்குகள் தான் வித்தியாசம். ஆளும் கட்சியை மிகக் கடுமையாக எதிர்த்துப் போட்டியிட்டால், அதிமுக வெற்றி பெறக்கூடும். ஆனால், அதைச் சோதித்துப் பார்க்கக் கூட எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை. ஒரு பாசிச சக்தி தமிழ்நாட்டில் காலூன்றிவிடலாம் எனக் கணக்குப் போட்டு வருகிறது. அதைத் தரைமட்டமாக்கும் படி திமுக தனது வியூகங்களை வகுத்துக் களமாடி வருகிறது. ஆனால், அதைப் புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்குச் சாமரம் வீசி வருகிறார். பாஜகவுடன் அவருக்கு எந்த மோதலும் இல்லை. அண்ணாமலை மாநிலத் தலைவராக இருக்கக்கூடாது என்பது தான் எடப்பாடியின் விருப்பம். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி சொல்கிறார். பாஜகவின் எந்தக் கொள்கையை அல்லது திட்டத்தை எடப்பாடி பழனிசாமி இதுவரை வலிமையாக எதிர்த்து இருக்கிறார் என்று சொல்ல முடியுமா?
இப்போது குற்றவியல் சட்டத்தை மத்திய அரசு மாற்றி இருக்கிறது. அதை எதிர்த்துப் போராடினாரா? அல்லது கட்சி வழக்கறிஞர் அணியை அழைத்து விவாதித்தாரா? வெறும் அறிக்கைவிட்டுவிட்டால் போதுமா? இவர் விடும் அறிக்கையை எவன் படிக்கிறான் சொல்லுங்கள்? விரைவில் இவர் சிறைக்குப் போவார். அப்போது கட்சி மீண்டும் ஒன்றாக இணையும்.
அதிமுக ஒரே அணியாக இணைந்துவிட்டால் மட்டும் கட்சி வெற்றி பெற்றுவிடாது. ஏனென்றால், தமிழ்நாட்டில் அரசியல் களம் மாறி வருகிறது. புதிய தலைமுறை வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள். அவர்களைக் கவரும் அளவுக்கு அதிமுகவின் கொள்கை இல்லை. கட்சி வலிமையாக இருக்கும் என்பதனால் இந்த ஒருங்கிணைப்பு தேவை என்கிறேன்.
பன்னீர்செல்வத்தைப் பார்த்து எடப்பாடி துரோகி என்கிறார். நான் உலகத்தில் உள்ள பல துரோக வரலாற்றைப் படித்திருக்கிறேன். எடப்பாடியைப் போல ஒரு துரோகம் செய்தவரை நான் படித்ததே இல்லை. சிறைக்குச் செல்வதற்கு முன்பு முதலமைச்சர் பதவியை சசிகலா எடப்பாடிக்குக் கொடுத்துவிட்டுப் போனார். அவர் சிறைக்குப் போக பிறகு அவரையே கட்சியை விட்டு நீக்கினார். இப்படி ஒரு துரோகத்தை அனுபவித்தவர்களுக்குத் தான் புரியும். சசிகலா அந்த வலியை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி வலிமையான தலைவர் ஒன்று இல்லை. அவரை விட செங்கோட்டையன் வலிமையான தலைவர். வேலுமணி, தங்கமணி வலிமையான தலைவர்கள். கட்சியின் நலன் கருதி எடப்பாடியை எதிர்த்துப் பேசாமல் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் ஒரு மாவட்டச் செயலாளராவது வேட்பு மனுத் தாக்கல் செய்தாரா? சீட்டு கேட்டு நின்றாரா? ஏன் ? தோற்று விடுவோம் என்ற பயம். கட்சி எடப்பாடியின் கண்ணுக்கு முன்னாலேயே கரைந்து கொண்டிருக்கிறது. நாம் ஏன் மூழ்கும் கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்று பலரும் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டார்கள். அதுதானே உண்மை.
ஆகவே, அதிமுகவுக்கு வலிமையான தலைவர் தேவை. அது சசிகலா வந்தால் செய்ய முடியும். அதற்கு எடப்பாடி சம்மதிக்கவில்லை என்றால் விரைவில் அவரது தலைமையைத் தூக்கி எறிவார்கள். கொடநாடு வழக்கில் என்ன நடைக்குப் போகிறது எனப் பொறுத்திருந்து பாருங்கள். எடப்பாடி விசாரணை வளையத்திற்கு வருவார். அதற்கு முன்பே கட்சிக்குள் யுத்தம் இப்போது தொடங்கி விட்டது" என்கிறார் சம்பத்.












Click it and Unblock the Notifications