8 அடி தாவும் ஓபிஎஸ்..16 அடி பாயும் இபிஎஸ்! டெல்லியில் முகாமிடும் முக்கிய ‘மாஜி’! பொங்கலுக்கு கச்சேரி
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் திடீரென அரசியல் நகர்வுகளை ஓ.பன்னீர்செல்வம் முடுக்கிவிட்டிருக்கும் நிலையில், அவர் பொதுக்குழு கூட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பொங்கலுக்கு ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க தயாராகி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஆரம்பத்தில் அதிரடியாக செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென அமைதி காத்தார். அமைதியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதிரடி அரசியலுக்கு திரும்பி இருக்கிறார். இதனால் அதிமுகவினரே மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார்கள்.
சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் ஜெயக்குமார் பற்ற வைத்த நெருப்பு கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கும் மேலாக அதிமுக உட் கட்சி அரசியலில் புயலை கிளப்பி வருகிறது.

அதிமுக விவகாரம்
பொதுக்குழு கூட்டம், நீதிமன்றம், காவல்துறை என பல கட்ட நிகழ்வுகள் கடந்து இருக்கும் நிலையில் தற்போது இரு தரப்பும் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பாஜக தலைமையுடன் நெருக்கம் காரணமாக இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் திடீரென மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி இருப்பது பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. நாளை கூட்டத்தில் எந்த மாதிரியான முடிவுகள் எடுக்கப்படும் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி
இது ஒரு புறம் இருக்க பாஜக தலைமையுடனான அதிருப்தி காரணமாக எடப்பாடி பழனிச்சாமியும் அந்த கட்சியை வெளிப்படையாகவே விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். இதன் காரணமாகவே ஓபிஎஸ் பொது குழுவை கூட்ட வேண்டும் என பாஜக தலைமை உத்தரவிட்டதாகவும் அதற்கு முன்னேற்பாடாக தான் நாளை நடைபெற இருக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்கின்றனர். நாளைய கூட்டத்தில் கட்சி சார்பாக சடங்குக்கு ஒரு சில நிகழ்வுகளை அறிவித்துவிட்டு அதற்கு பிறகு பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்காக எல்லாம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாவட்டச் செயலாளர்களை அறிவுறுத்தவே இந்த கூட்டம் என்கின்றனர்.

பொதுக்குழு கூட்டம்
தற்போது அரசியல் ஆலோசகராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரனை அந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவை தலைவராக நியமனம் செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பது போல தானும் அதிமுகவில் ஒரு அணிதான் தன் பக்கமும் அவைத்தலைவர், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் என ஒரு அணியே இருக்கிறது எனக் கூறுவதற்காகவே இந்த ஏற்பாடு என்கின்றனர். தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஓரம்கட்டப்பட்ட அல்லது அவர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளை வைத்தே இந்த புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலானது தயாரிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களும் அதிமுக உறுப்பினர்கள் தான் எனவே நாங்கள் தனி அணியாக செயல்படுகிறோம் எனக் கூறி தேர்தல் ஆணையத்தில் முறையிட ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டு இருக்கிறது.

எல்லாம் தெரியும்
எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முரண்டு பிடித்தால் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் சின்னமான இரட்டை இலையை முடக்குவதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்கின்றனர். இதனால் வரும் காலங்களில் எடப்பாடி பழனிச்சாமி விட்டுக் கொடுக்க வாய்ப்புள்ளதாக பாஜக தலைமை நினைக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இது போன்று நடக்கும் என தெரிந்தே பாஜகவையும் ஓபிஎஸ்ஸையும் எதிர்க்க எடப்பாடி தயாரானார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதாவது பாஜக தலைமையுடன் முதல் போக்கை கையாண்டால் விசாரணை அமைப்புகள் மூலம் நெருக்கடி, தேர்தல் ஆணையத்தின் மூலம் சிக்கல் ஏன் சொந்த ஆதரவாளர்கள் கூட சிலர் தனக்கு எதிராக திரும்பலாம் என அனைத்தையும் அறிந்தவராகவே இருக்கிறார்.

ஏற்பாடுகள் தீவிரம்
இதனையெல்லாம் கடந்து போராட்டம் நடத்தி எப்படியும் இரட்டை இலையை மீட்டு விடலாம் . மேலும் ஜனவரி மாதம் அதிமுக பொது குழு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது எனவே அப்போது உச்ச நீதிமன்றத்தில் தனக்கு சாதகமான தீர்ப்பு வரும். இதனால் அதிமுக மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் வரும் என நினைக்கும் எடப்பாடி அதற்கான ஏற்பாடுகளை மட்டும் செய்ய வேண்டும் என கூறியிருக்கிறார். மேலும் அரசியல் நிகழ்வுகளை கண்காணிக்கவும் துரிதப்படுத்தவும் ஏதுவாக தன்னுடைய தரப்பிலிருந்து முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சிவி சண்முகம் ஜெயக்குமார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளையும் வழக்கறிஞர்கள் அணியையும் இம்மாத கடைசியில் டெல்லிக்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதிமுக தொடர்பான அனைத்து விவகாரங்களும் முடித்த பிறகு அவர்கள் மீண்டும் தமிழகம் வர வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர் அவரது தரப்பு ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications