திமுக கோட்டையில் கைவைக்கும் எடப்பாடி.. அடித்து ஆடும் அதிமுக.. டெல்டா விசிட்டின் பின்னணி இதுதான்!
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்டா மாவட்டங்களில் விசிட் அடித்திருப்பது திமுக தலைமையை ஆட்டம் காண செய்திருக்கிறது. திமுக எப்படி கொங்கு மண்டலத்தில் வெற்றிபெற ஆர்வம் காட்டி வருகிறதோ, அதேபோல் அதிமுக தரப்பில் டெல்டா மாவட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடித்து ஆடத் தொடங்கி இருக்கிறார். கரூர் விவகாரம் காரணமாக தவெக தலைவர் விஜய் அமைதி காக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சட்டசபையிலேயே கிட்னிகள் ஜாக்கிரதை, அல்வா என்று வித்தியாசமாக கவனத்தை ஈர்த்தார்.

தற்போது திடீரென தஞ்சாவூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடப்பாடி பழனிசாமி விசிட் அடித்து ஷாக் கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் டெல்டா விசிட்டிற்கு பின் சில கணக்குகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. எப்படி 2021 சட்டசபைத் தேர்தலின் போது கொங்கு மண்டலத்தில் திமுக வாஷ் அவுட் என்று சொல்லும் அளவிற்கு தான் செயல்பட்டது.
கொங்கு மண்டலத்தை அதிமுகவின் கோட்டையாக எடப்பாடி பழனிசாமி மாற்றினார். ஆனால் இந்த தேர்தலில் கொங்கு மண்டலத்தில் குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் குறியாக இருக்கிறார். அதற்காகவே செந்தில் பாலாஜி தலைமையில் திமுக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் பாதி தொகுதியை வென்றாலே, அது திமுகவுக்கு மிகப்பெரிய சாதகத்தை உருவாக்கும் என்று திமுக தலைமை கணக்கு போட்டது. அதே ஸ்டைலில் திமுகவின் கோட்டையான டெல்டா மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சில கணக்குகளை போட்டிருக்கிறார். சில வாரங்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமியின் கைகளுக்கு வியூக வகுப்பாளர்கள் சில டேட்டாவை கொடுத்துள்ளனர்.
அந்த டேட்டாவில் கடந்த சட்டசபைத் தேர்தலின் போது டெல்டா மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த தொகுதி தொடர்பான தகவல்கள் இருந்துள்ளன. இதனால் டெல்டா மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளார்.
கடந்த தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் இருந்து அதிமுக 3 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது. திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுகவால் கொடி நாட்ட முடியவில்லை. இந்த மாவட்டங்களில் உள்ள நாகை, மயிலாடுதுறை, பூம்புகார் உள்ளிட்ட தொகுதிகளில் 3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே அதிமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
இதனால் அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த அக்கட்சி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். அதேபோல் உள்ளூர் நிர்வாகிகளை அனுசரித்து செல்ல மாவட்டச் செயலாளர்களுக்கும், முக்கிய நிர்வாகிகளை அரவணைத்து இயங்கவும் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அணுகுமுறை திமுக தலைமைக்கும் கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications