மாஜிக்கள் எஸ்கேப்? எடப்பாடிக்கு பறந்த சீக்ரெட் ’உளவு’ தகவல்! மா.செ.க்களுக்கு அவசர அவசரமாக உத்தரவு!
சென்னை: தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு அவரது சொந்த ஊரான கோபியில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை பிரமாண்ட வரவேற்பு அளித்த நிலையில், இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் செங்கோட்டையுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 36 பேரில் 12 பேர் மீண்டும் அதிமுகவிற்கு திரும்ப இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. காரணம், சில முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையனுடன் தொடர்பில் இருப்பதாக பேசப்படும் நிலையில், அதனை பொய்யாக்கும் வகையில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என எடப்பாடி உத்தரவு பெற்றுள்ளதாக சொல்கின்றனர்.
ஈரோடு மாவட்டத்தின் கோபி இன்று அரசியல் ரீதியாக அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று (நவம்பர் 30) மாலை 6 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம், அங்கு ஏற்கனவே கொந்தளிப்பான நிலையில் இருக்கும் அதிமுக-தவெக மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம்-கோபி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத் திடலில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. குறிப்பாக இந்த பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கே தனி அரசியல் வரலாறு உண்டு. 1980-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தின் போது எம்ஜிஆர் இங்கேயே உரையாற்றிய போது, "நான் என்ன தவறு செய்தேன்? என் ஆட்சியை ஏன் கலைத்தார்கள்? மக்களே, சொல்லுங்கள்..." என்று உணர்ச்சியுடன் பேசியதைக் கட்சித் தொண்டர்கள் இன்னும் பெருமையாக நினைத்துக் கொள்கிறார்கள்.

செங்கோட்டையன்
அதே மேடையில் இன்று எடப்பாடி பழனிசாமி பேசவிருக்கிறார் என்பதால், "எம்ஜிஆர் பேசிய இடத்தில் மீண்டும் எங்கள் தலைவன்... இதுவே அதிமுக எழுச்சியின் தொடக்கம்" என்ற உணர்வில் உள்ளனர். இதுதொடர்பாக பேசிய அதிமுகவினர்," எம்ஜிஆர் இங்கிருந்து பிரசாரம் தொடங்கி மீண்டும் முதலமைச்சர் ஆனதுபோல், அதே வரலாறு எடப்பாடி பழனிசாமிக்கும் திரும்ப வாய்ப்புள்ளதாக நம்புகிறோம். கோபி, ஈரோடு முழுவதும் உற்சாகத்துடன் ஏற்பாடுகள் செய்து வருகிறோம் என்கிறார்கள்.
செங்கோட்டையன்
செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அதிமுக தொடர்ச்சியாக அதிர்ச்சிகளை சந்தித்த நிலையில், கோபியில் இன்று நடைபெறும் இந்த பொதுக்கூட்டம் 'அதிமுக இன்னும் சிதறவில்லை; மாறாக வலுப்பெறுகிறது' என்பதை நிரூபிக்கும் மேடையாக மாறுமென அதிமுகவினர் நம்புகிறார்கள். செங்கோட்டையனுடன் தவெகவுக்கு சென்ற முன்னாள் அதிமுக நிர்வாகிகள் 32 பேரில், 12 பேர் மீண்டும் அதிமுகவில் இணையத் தயாராக இருப்பது எடப்பாடி பழனிசாமி அணிக்கு பெரிய ஊக்கமாக உள்ளது.
எடப்பாடி கூட்டம்
கோபியில் செங்கோட்டையனுக்கு பெரிய செல்வாக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமிக்குத்தான் இங்கு ஆதரவு அதிகம். இன்றைய கூட்டம் அதைக் காட்டித் தரும் என அதிமுகவினர் கூறுகிறார்கள். ஆனால், செங்கோட்டையனும் குறைந்து போகவில்லை. அவருக்கு வெள்ளிக்கிழமை கோபியில் தவெகா சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு தவெகவின் நம்பிக்கையை உயர்த்தியிருந்தாலும், அதே ஊரில் நடைபெறும் எடப்பாடியின் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் யார் செல்வாக்கு அதிகம்? என்ற கேள்வியைக் கிளப்பியுள்ளது.
கட்சி ஒற்றுமை
மேலும், சில முன்னாள் அமைச்சர்கள் இன்னும் செங்கோட்டையனுடன் தொடர்பில் உள்ளார்கள் என்ற தகவல்கள் பரவியதைத் தடுக்க, மாநிலம் முழுவதும் உள்ள முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கோபி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அதிமுக ஒருங்கிணைந்துள்ளது என்ற செய்தியை வெளியில் காட்டும் முயற்சி உள்ளதாகவும் பேசப்படுகிறது. கூட்டம் ஆரம்பிக்குவதற்குமே முன்னர் கோபி அரசியல் களமே களைகட்டியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இன்றைய உரை என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications