என்னங்க.. அரசியலில் பாஜக போடுற கேஸுக்கு எல்லாம் பயந்தா முடியுமாங்க? 'அட்வைசரை' அலறவிட்ட எடப்பாடி
சென்னை: பாஜகவுடனான கூட்டணியை அதிமுக உறுதியாக இருப்பதாகவும் அமலாக்கத்துறையின் வழக்குகளுக்காக அஞ்சவில்லை எனவும் தம்மை சந்தித்த 'அட்வைசர்'களிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் தொடர் விமர்சனங்கள், அதிமுகவினரை கொந்தளிக்க வைத்தது. 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என அண்ணாமலை கூறியது அதிமுகவினரை கடும் கோபமடைய செய்தது.

இதனைத் தொடர்ந்தே பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்து கொள்வதாக அறிவித்தது. இந்த அறிவிப்பில் அதிமுக திட்டவட்டமாக இருந்தாலும் திமுக கூட்டணி கட்சிகள் சந்தேகத்தை எழுப்பி விமர்சித்தன. இதற்கு பதிலடி தரும் வகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி பாஜகவுடன் கூட்டணி இல்லவே இல்லை என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பின்னர் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கேபி முனுசாமியும் திட்டவட்டமாக, பாஜக கூட்டணி இல்லை என உறுதிபடத் தெரிவித்தார்.
மெகா கூட்டணி குறித்து ஆலோசனை: தற்போது அதிமுக தலைமையில் மெகா கூட்டணியை அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம், டெல்லி பாஜக தலைமை அதிமுகவை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் படுதீவிரமாக இருக்கிறது. இந்த நிலவரம் தொடர்பாக தமக்கு மிக நெருக்கமான அரசியல் ஆலோசகர்களை அழைத்து எடப்பாடி பழனிசாமி விவாதித்திருக்கிறார்.
வழக்குகளில் தொடர்பு இல்லையாம்: இந்த சந்திப்புகளின் போது பல்வேறு விஷயங்களை மனம் விட்டு பேசியிருக்கிறார். குறிப்பாக தம்மை சுற்றிய சில வழக்குகளைக் குறிப்பிட்டு, அந்த வழக்குகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை. காலச் சூழல்தான் என்னை அப்படியாக சந்தேகிக்க வைக்கிறது என விவரித்திருக்கிறார்.
எடப்பாடியின் சர்வே ரிப்போர்ட்: இதன் பின்னர், அதிமுக தரப்பில் 'சுடச் சுட' எடுக்கப்பட்ட ஒரு சர்வே ரிப்போர்ட்டை ஆலோசகர்களிடம் காட்டி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதில், பாஜகவுடனான உறவுக்குப் பிந்தைய அதிமுகவுக்கான முஸ்லிம்கள் ஆதரவு குறித்த புள்ளி விவரங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த புள்ளி விவரங்கள்தான் பாஜகவுடனான கூட்டணியை முறித்தாக வேண்டும் என்பதில் ஆணித்தரமான நிலைப்பாட்டை தொடர்ந்து அதிமுக கடைபிடிக்க காரணமாகவும் சொல்லப்படுகிறது.
அரசியலில் கேஸ் எல்லாம் சகஜம்: அப்போது, பாஜகவுடனான கூட்டணியை முறித்ததால் வழக்குகள் அடுத்தடுத்து பாயலாம் அல்லவா? என சில ஆலோசகர்கள் கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு மிகவும் சிரித்த முகத்துடன், ஏங்க.. அரசியல்னு வந்துட்டா கேஸ், ஜெயில் இதுக்கு எல்லாம் பயந்தா முடியுமாங்க.. எல்லாம் வரனும்.. கேஸ் எல்லாம் வரலைன்னாதான் சிக்கல்.. அதை எல்லாம் சமாளிக்க முடியாதுன்னா எதுக்கு அரசியலில் இருக்கனும்? என மிகவும் அசால்ட்டாக பதிலளித்தாராம் எடப்பாடி பழனிசாமி. இந்த விவகாரங்களை தற்போது மீடியாக்களில் அரசியல் ஆலோசகர்கள் கசியவும் விட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications