நீட்: ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிசாமியே பொறுப்பு.. "பிள்ளையை கிள்ளிவிட்டு.." - மா.சு பதிலடி!
சென்னை : நீட் தேர்வால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்று வாய்ச் சவடால் விட்டது தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டு, மாணவர்களின் இறப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் எனச் சாடியிருந்தார் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைக்கு, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வந்தது எனக் கூறியுள்ளார் மா.சுப்பிரமணியன்.
மேலும், நீட் தேர்வு முடிவுகளை இரவு நேரத்தில் வெளியிட்டதும், மாணவர்கள் தவறான முடிவுகளை எடுப்பதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் இரவு வெளியிடப்பட்டன. நடந்து முடிந்த நீட் தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த 1.34 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில், 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாததால், சென்னையைச் சேர்ந்த லக்ஷனா ஸ்வேதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதி அளித்துவிட்டு, மாணவர்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார்.

வாய்ச் சவடால்
எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி அமைந்த பின்னர் இரண்டு முறை நீட் தேர்வு நடத்தப்பட்டது. அதிமுக அரசால் உருவாக்கப்பட்ட பயிற்சி மையங்கள் முறையாக செயல்படுத்தப்படாததால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததோடு, தற்கொலை சம்பவங்களும் அதிகரிப்பது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட்டை ஒழிப்போம் என்று வாய்ச் சவடால் விட்டது தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டு, மாணவர்களின் இறப்புக்கு திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் எனச் சாடியிருந்தார்.

தேர்ச்சி விகிதம்
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வில் வெறும் 39 % மாணவர்கள் தான் தேர்ச்சியடைந்து இருந்தனர். இன்று 51.29 சதவிகிதமாக அது உயர்ந்து இருக்கிறது. நீட் தேர்வுக்கான பயிற்சி எல்லா பள்ளிகளிலும் நடைபெற்று வருகிறது. கூடுதலாக மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதியதால், தேர்ச்சி விகிதம் குறைவு போல தெரிகிறது எனத் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பு
மேலும் பேசிய மா.சுப்பிரமணியன், "எடப்பாடி பழனிசாமி நீட் தேர்வால் மரணமடைந்த பெண் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து இருப்பது அபத்தமானது. இது பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல விந்தையாக இருக்கிறது. அவர்கள் ஆட்சியில் தான் நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வந்தது. நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் எடப்பாடி பழனிசாமி தான் பொறுப்பேற்க வேண்டும்.

இரவு நேரத்தில் ரிசல்ட்
மத்திய அரசின் தேர்வு குழுமம், இரவு நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருப்பது குறித்து கவனித்து இருக்க வேண்டும். இதனால் மாணவ மாணவிகள் அனைவரும் இரவு நேரத்தில் முடிவுகளை பார்க்கும்போது, ஆதரவுக்கான நபர் அருகில் இல்லாத சூழல் கூட நிலவி இருக்கலாம். மத்திய அரசு இதனை கவனித்து இருக்க வேண்டும். ஏன் இவ்வாறு செய்தார்கள் என தெரியவில்லை. நாங்கள் மரணித்த மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று எங்கள் சார்பில் ஆறுதல் தெரிவிக்க உள்ளோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications