Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருமகனை காப்பாற்ற ஸ்டாலின் யார் காலை பிடித்தாலும் கவலையில்லை.. ஆனால்.. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : சர்வதேச போதை மருந்து கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய தன் மகன், மருமகளைக் காப்பாற்றவும்; புகார்களில் சிக்கியுள்ள தன் மருமகன் மற்றும் சில மந்திரிகளைக் காப்பாற்றவும் ஸ்டாலின் யார் காலை பிடித்தாலும் கவலையில்லை என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் திருமணவிழாவில் பேசியதற்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலின் திருமண விழாவில் பேசியதற்கு பதிலடி கொடுத்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது "'பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வர வேண்டும் தோழா' என்று, நம்மை எல்லாம் ஆளாக்கிய புரட்சித் தலைவர் கூறியிருக்கிறார்.நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த மு.க. ஸ்டாலின், பணிவு என்றால் கிராம் என்ன விலை என்று கேட்பதோடு, அசட்டுத் துணிச்சலோடு வாய் வீரம் காட்டிக்கொண்டு மமதையின் உச்சியில் அலைகிறார்.

edappadi palaniswami mk stalin kalaignar coin

'Go Back Modi' என்றும், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று மேடைக்கு மேடை பேசினாரோ, அந்த பொம்மை முதலமைச்சர், மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், தன் ஆட்சியைக் காப்பாற்ற பா.ஜ.க-வின் மூத்த மத்திய அமைச்சர் ஒருவரை அழைத்து விழாவை நடத்தியுள்ளார்.

இதுகுறித்தும், காங்கிரஸ் தலைவர்களை ஏன் அழைக்கவில்லை என்றும் நான் கேட்டதற்கு ஸ்டாலின் ஏன் இவ்வளவு எரிச்சல்பட வேண்டும்? ஸ்டாலின் 19.8.2024 இன்று திருமண விழாவில் பேசும்போது:- கருணாநிதி நாணய வெளியீட்டு விழா, திமுக நிகழ்ச்சி அல்ல, மத்திய அரசின் நிகழ்ச்சி என்றும், மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுல் காந்தியை அழைக்க அவசியமில்லை என்றும், பா.ஜ.க-வுடன் ரகசிய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்றும் பயத்தில் உளறியிருக்கிறார்.

எங்களைப் பார்த்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுக இரங்கல் கூட்டம் நடத்தியிருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கலைவாணர் அரங்கில் ரூ.100 நாணயம் வெளியிட்ட நிகழ்ச்சி தமிழ் நாடு அரசு நடத்திய அரசு விழா. அழைப்பிதழில் எந்த இடத்திலும் மத்திய அரசுத் துறையின் பெயர் இடம்பெறவில்லை. மேலும், அழைப்பிதழ் கலைஞர் 100 என்று இலச்சினையுடன், தமிழ் நாடு அரசு இலட்சினைதான் இடம் பெற்றுள்ளது. அனைத்துக்கும் மேலாக, அழைப்பிதழில் அனைவரையும் அழைத்தவர் தமிழ் நாடு அரசு தலைமைச் செயலாளர். எனவே, ராகுல் காந்தி அல்லது அவரது தாயார் சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களைக் கூட இந்நிகழ்ச்சிக்கு அழைத்திருக்கலாம். கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மேடையில் இடம் இல்லை.

கழக நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களைப் பற்றி பேசுவதற்கு சிறிதும் தகுதி இல்லாத ஒருவர் உள்ளார் எனில் அது ஸ்டாலின் அவர்கள்தான். ஆடு நனைகிறதே என்று ஓநாய் ஓலமிட்ட கதையாக உள்ளது இவரது வெற்றுப்பேச்சு. மாண்புமிகு அம்மா அவர்கள் மறைவிற்குப் பிறகு, அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாகவும், கடற்கரையில் அழகிய நினைவிடமும் அமைத்து, ஒவ்வொரு ஆண்டும் அம்மா அவர்களது நினைவாக மவுன அஞ்சலி செலுத்தி வருகிறோம். மறைந்த எங்களது இருபெரும் தெய்வங்களை, எங்களது ஒவ்வொரு செய்கையிலும் நாங்கள் நினைவில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஆட்சியில் சென்னை உயர்கல்வித்துறை வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களது முழு உருவச் சிலையை நிறுவினோம். ஆண்டுதோறும் அம்மா அவர்களின் உருவச் சிலைக்கு மரியாதை செய்திட வேண்டும் என்று அரசாணை வெளியிட்டோம். கடற்கரைச் சாலையில் இருந்து அம்மா அவர்களின் சிலைக்குச் செல்ல ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சிலையைப் பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைந்தவுடன், அறிஞர் அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரது நினைவிடங்களுக்கு அருகாமையில் அம்மாவின் இறுதிச் சடங்குகளைச் செய்ய கோடிக்கணக்கான தொண்டர்களாகிய நாங்கள் முனைந்தபோது, கடற்கரையில் நினைவிடம் அமைக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க விஞ்ஞான ரீதியில் சிலரைத் தூண்டிவிட்டது யார்? பூனைக்குட்டி வெளியே வந்த கதையாக, இதற்கு பதில் கருணாநிதி மறைந்தவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. கருணாநிதி மறைந்த அன்று இரவோடு இரவாக, கலைஞர் நினைவிட வழக்கு விசாரிக்கப்பட்டபோது, அம்மா நினைவிடத்தை எதிர்த்துப் போட்ட வழக்குகள் இரவோடு இரவாக வாபஸ் வாங்கப்பட்டது.

மேலும், கர்ம வீரர் காமராஜர் மறைந்தபோது, கடற்கரையில் நினைவிடம் கட்ட கோரிக்கை எழுந்தபோது, 'முன்னாள் முதலமைச்சர்களுக்கெல்லாம் கடற்கரையில் நினைவிடம் கிடையாது' என்று கோப்புகளில் எழுதி கையெழுத்திட்ட அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு, நாங்கள் அதே வசனத்தைத் திருப்பிப்போட்டு, இரவோடு இரவாக கருணாநிதி நினைவிடத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க முடியும். ஆனால், நாங்கள் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி வழி வந்தவர்கள். உங்களைப் போல் உள்ளே ஒன்று, வெளியே ஒன்று என்று வேஷம் போடுபவர்கள் அல்ல என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

பொம்மை முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், பிறகு 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரையிலும், இந்தி எதிர்ப்பு என்ற நாடகத்திற்கும், திராவிட மாடல் ஆட்சி என்று வசனம் பேசி, தமிழக மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் திராவக மாடல் ஆட்சிக்கும், இப்போதுள்ள கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஊறுகாயாக தேவைப்பட்டன. தொட்டுப்பார், கட்டிப்பார், வெட்டிப்பார், இந்தி தெரியாது போடா என்றெல்லாம் மத்திய அரசைப் பார்த்து வறட்டு சவால்களை தானும் விட்டு, கூட்டணிக் கட்சியினரையும் விட்டு வசைபாடச் செய்தார். அந்நாடகத்தை தொடர்ந்து நடத்தினார். இனி கூட்டணிக் கட்சியினரின் தயவு தேவையில்லை, குடும்ப நலன் முக்கியம் என்றவுடன் தனது சுயரூபத்தை வெளிக்காட்டியுள்ளார்.

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு 'நிதி ஆயோக்' கூட்டத்தில் கலந்து கொண்டு தேவையான நிதியைப் பெற வக்கில்லாமல், தன் அப்பாவின் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு, மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. தலைவர்களை வருந்தி வருந்தி அழைத்து, நிகழ்ச்சி நடத்திவிட்டு, அதை நாகரீகமாக சுட்டிக்காட்டிய என் மீது பாய்ந்து குதறியிருக்கிறார்.

சர்வதேச போதை மருந்து கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய தன் மகன், மருமகளைக் காப்பாற்றவும்; புகார்களில் சிக்கியுள்ள தன் மருமகன் மற்றும் சில மந்திரிகளைக் காப்பாற்றவும் ஸ்டாலின் யார் காலை பிடித்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எந்த கவலையும் இல்லை. தன்னுடைய கபட நாடகம் என் மூலம் வெளிப்பட்டுவிட்டதே என்ற கோபத்தில் வானத்திற்கும், பூமிக்கும் தாவி குதித்திருக்கிறார்.

புரட்சித் தலைவர் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவிற்கு மத்திய அரசில் உள்ளவர்களை நான் அழைத்ததாகவும், ஆனால், மத்திய அரசு என்னை மதிக்கவில்லை என்றும் தார்பாயில் வடிகட்டிய பொய் மூட்டை ஒன்றை 'நா நயம் மிக்கவரின் மகன்' அவிழ்த்து விட்டிருக்கிறார். புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவையொட்டி எனது தலைமையிலான அம்மா அரசில், மாவட்டந்தோறும் கோடிக்காணக்கான ரூபாய் மதிப்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினோம்.

மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களது பெயரைச் சூட்டினோம். மேலும், புரட்சித் தலைவர் நினைவாக ரூ.100 நாணயம் வெளியிட்டோம். எங்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நாணயம் வெளியிட்டது, விழாவை நாங்களே நடத்தினோம் - என் தலைமையிலான தமிழக அரசு நடத்தியது.

மத்தியில் பதவி சுகம் அனுபவிக்க வேண்டும், அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக நம்பிய கட்சிகளுக்கு துரோகம் செய்வதே தி.மு.க-வின் வாடிக்கை என்பது மக்களுக்கு நன்கு தெரியும். 2004 முதல் 2013 வரை மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து ஆட்சி சுகத்தை அனுபவித்தவர்கள் திமுக-வினர். தமிழ் நாட்டில் 2006 முதல் 2011 வரை காங்கிரஸ் கட்சியின் தயவால் திமுக ஆட்சி நடத்தியது. அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை தற்போது மறந்தவர் ஸ்டாலின் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.

பா.ஜ.க-வுடன் கள்ள உறவு என எங்களைப் பார்த்து, மீண்டும் மீண்டும் முதலமைச்சர் சொன்ன போது அவருக்கு இனித்தது. இப்போது, அவர்களைப் பார்த்து மீண்டும் மீண்டும் அல்ல, ஒரு முறை சொன்னதற்கே மூளை இருக்கிறதா எனக் கேட்கிறார். அப்படி என்றால், நாங்கள் எத்தனை முறை விடியா தி.மு.க. முதலமைச்சருக்கு மூளை இருக்கிறதா? என்று கேட்க வேண்டும். டெல்லிக்கு காவடி எடுத்து தப்பிவிடலாம் என்று நினைத்தால் புத்திசாலிகளான தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்" இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+