கூட்டணி ஆட்சி சலசலப்புக்கு நடுவே.. மோடியை ஜூலை 26-ல் சந்திக்கும் எடப்பாடி.. ஆலோசிக்கப்போவது என்ன?
சென்னை: பிரதமர் மோடி வரும் 26 ஆம் தேதி தமிழகம் வருகை தருகிறார். இந்த நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்களையும் மோடி சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடியும் கூறி வரும் நிலையில் எடப்பாடி மோடி சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், பாமகவையும் இந்த கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால் பாமகவிலேயே தந்தை மகன் மோதல் முடிவுக்கு வராததால் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அப்படியே உள்ளன.

இதற்கிடையே தான் பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழகம் வருகிறார். வரும் 26 ஆம் தேதி இரவு தூத்துக்குடி வருகை தருகிறார். மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு விமானம் மூலமாக 26 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வருகை தர உள்ளார். இதன்பின் தூத்துக்குடியில் இரவு 8.30 மணிக்கு நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கும் மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிப் பேசவுள்ளார்.
இதன் பிறகு தூத்துக்குடியில் விமானம் மூலமாகத் திருச்சி செல்கிறார் பிரதமர் மோடி. பின்னர், 27ஆம் தேதி திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் செல்ல இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன்பிறகு திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி 5 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பயணங்கள் மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் வரும் 26 ஆம் தேதி மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.
தூத்துக்குடி வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில் கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக பேசப்படலாம் என தெரிகிறது. இதேபோன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிற கட்சி தலைவர்களையும் அன்றைய தினம் மோடி சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடியும் கூறி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி - மோடி சந்திப்பு கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications