கல்வியும் மருத்துவமும் திமுக அரசின் இரு கண்கள்! மருத்துவத்துறை மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சென்னை: கல்வியும் - மருத்துவமும் திமுக அரசின் இரு கண்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நோயைக் குணப்படுத்துதல் என்பது மருந்து, மாத்திரைகளோடு முடிந்து விடவில்லை என்றும் அதனைத் தாண்டியும் பல்வேறு விஷயங்கள் இருப்பதாக முதல்வர் பேசினார்.
சென்னையில் நடைபெற்ற மருத்துவத்துறை மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். மேலும், அந்நிகழ்வில் அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

கல்வி மருத்துவம்
கல்வியும் - மருத்துவமும் இந்த அரசினுடைய இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்வுத் துறை, மகத்தான துறையாகச் இன்றைக்கு செயல்பட்டு வருகிறது. மகத்தான வகையில் செயல்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கக்கூடிய நம்முடைய அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களையும், துறையினுடைய செயலாளர் செந்தில்குமார் அவர்களையும், துணைநின்று பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

முதல்வர் நம்பிக்கை
ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்- வட்ட மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள்- அரசு மருத்துவக் கல்லூரிகளோடு இணைந்த மருத்துவமனைகள் - ஆகியவற்றின் செயல்பாடுகளைச் சீரமைப்பதற்கான முதல் மாநாடாக இந்த மாநாட்டை கூட்டியிருப்பதை அறிந்து உள்ளபடியே நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அரசினுடைய நோக்கத்தை முழுமைப்படுத்துவதற்கு இந்த மாநாடு உதவிகரமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

குக்கிராமத்தில்
ஊரகப் பகுதிகளில், குக்கிராமத்தில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மக்களின் நோயையும் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அவர்களுக்கு தரமான மருத்துவச் சிகிச்சை இலவசமாகவும் உடனடியாகவும் கிடைக்க வேண்டும் என்பதே நமது அரசினுடைய குறிக்கோள். கலைஞர் அவர்களால் ஏழை எளிய மக்களுக்காக கண்ணொளி காப்போம் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டம் போன்ற எண்ணற்ற சுகாதாரத் திட்டங்கள் நாட்டில் முன்னோடித் திட்டங்களாகக் கொண்டுவரப்பட்டு, இன்றளவும் இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கலைஞரின் பாதை
கலைஞரின் பாதையில்தான் நமது அரசினுடைய நல்வாழ்வுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்களுக்கு அவர்களின் வாழும் இடங்களிலிலேயே மருத்துவ சேவை வழங்கிட வேண்டும் என்பதற்காகத் தான் 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் பயனடைந்தோர் எண்ணிக்கை விரைவில் ஒரு கோடி நபர்கள் என்ற எண்ணிக்கையை அடைய இருக்கிறது.

பொன்னான நேரம்
சாலை விபத்தினால் ஏற்படக்கூடிய இறப்பைக் குறைப்பதற்கும், பொன்னான நேரம் (Golden Hour) என்று சொல்லப்படும் முதல் 48 மணி நேரத்திற்குள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவர்களுக்கு உயர்சிகிச்சை அளிக்க ஒரு இலட்சம் ரூபாய் வரை இலவசமாக வழங்கப்படும் 'இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48' திட்டம் 18.12.2021 முதல் செயல்படுத்தப்படுகிறது.

வருமுன் காப்போம்
நோயைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வகைசெய்யக்கூடிய வகையிலே 'கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்' மீண்டும் செயல்படுத்தப்படுகிறது. இதுவரை 17 லட்சத்து 16 ஆயிரம் நபர்கள் பரிசோதனை செய்திருக்கிறார்கள். இந்த மூன்று திட்டங்களும், நான் பெருமையோடு சொல்கிறேன், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை. இவற்றைச் சிறப்பாக செயல்படுத்தி மக்கள் பயன்பெற நீங்கள் அனைவரும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

மருந்து, மாத்திரைகள்
நோயைக் குணப்படுத்துதல் என்பது மருந்து, மாத்திரைகளோடு முடிந்து விடவில்லை. அதனைத் தாண்டிய பல்வேறு விஷயங்கள் இருக்கிறது. அது குறித்தும் நாம் ஆராய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அந்த வகையில் இந்த மாநாடு, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறையின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும்; அமைய வேண்டும் என்று விரும்பி என் உரையை நிறைவு செய்கிறேன்.












Click it and Unblock the Notifications