Election Exclusive: இருந்தாலும் ஸ்டாலின் ரொம்ப ஸ்ட்ரிக்ட்..அடம் பிடித்த காங்.ஐ அடக்கிய அறிவாலயம்! டீலுக்கு பணிந்த டெல்லி
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளை திமுக நடத்தி வருகிறது. 40 தொகுதிகள், ராஜ்யசபா சீட் என காங்கிரஸ் கோரிக்கை வைத்த நிலையில் முடியவே முடியாது என ஸ்ட்ரிக்ட்டாக மு.க ஸ்டாலின் சொன்னதாக சொல்லப்படுகிறது. இனி அடம் பிடித்தால் ஆகாது சரண்டர் ஆகி விட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு காங்கிரஸ் தலைமை வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
25 முதல் 27 தொகுதிகள் வரை காங்கிரஸுக்கு ஒதுக்கப்படலாம் எனவும், உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் பங்கு வழங்கப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்த நிலையில் அதற்கு காங்கிரஸ் ஒப்புக் கொண்டுள்ளது. விரைவில் இரு தரப்பு நேரில் சந்தித்து தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. பங்கீடு பேச்சுவார்த்தையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் 'ஸ்ட்ரிக்ட்' நிலைப்பாடு எடுத்ததால், காங்கிரஸ் தரப்பில் சமரச முயற்சிகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல்
கூட்டணிக்குள் பதற்றத்தை உருவாக்கிய முக்கிய காரணமாக காங்கிரஸ் தலைவர்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி முன்வைத்த "ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள்" என்ற கோரிக்கையே சுட்டிக் காட்டப்படுகிறது. அவர்களது இந்த கருத்துகள் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் அமைப்புப் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பின்னர் விளக்கம் அளித்து, அது கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடு அல்ல எனத் தெரிவித்தார். இருந்தாலும், அவர்கள் பேசியபோது ஏற்பட்ட மனக்கசப்பு முழுமையாக சரியாகவில்லை என கூறப்படுகிறது.
திமுக காங்கிரஸ் கூட்டணி
இந்த சூழலில் கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தொடங்கியபோது, காங்கிரஸைத் தவிர்த்து மற்ற கட்சிகளுடன் முதலில் ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையில் சென்னை வந்த கே.சி. வேணுகோபால், முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தரப்பில் ஆரம்பத்தில் இருந்து அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் நிலவியது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
அதேவேளை தேசிய அரசியல் சூழல் மற்றும் சிறுபான்மை வாக்குகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சோனியா காந்தியுடன் நேரடியாக பேசி கூட்டணியைத் தொடர விருப்பம் இருப்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது. இந்தப் பின்னணியில் தான் கே.சி. வேணுகோபால் அவசரமாக சென்னை வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் 39 தொகுதிகள் மற்றும் மாநிலங்களவை இடங்கள் குறித்தும் எதிர்பார்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மு.க ஸ்டாலின் நிலைப்பாடு
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், வரும் தேர்தல் மிக முக்கியமானது என்றும், புதிய கட்சிகள் கூட்டணியில் சேர்ந்துள்ளதால் தொகுதி ஒதுக்கீட்டில் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் காங்கிரஸுக்கு கவுரவமான அளவில் தொகுதிகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேச்சுவார்த்தை முடிவில், கூட்டணி தர்மத்தை மதிக்க வேண்டிய அவசியம் குறித்து ஸ்டாலின் நேரடியாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ்
இதனால் உடனடி முடிவு எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தொடரும் நிலை ஏற்பட்டது. திமுக தரப்பின் நிலைப்பாட்டை புரிந்துகொண்ட காங்கிரஸ் மேலிடம், அடுத்த கட்டமாக கிரிஷ் சோடங்கர்வை சென்னைக்கு அனுப்பியது. அவர், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியை சந்தித்து பேசியபோது, ஏற்பட்ட மனஸ்தாபங்களைத் தாண்டி பேச்சுவார்த்தையை விரைந்து முன்னேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு கனிமொழி, முதல்வருடன் ஆலோசித்து சமாதான முயற்சி மேற்கொள்வதாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொகுதிகள் எண்ணிக்கை
இரு தரப்பும் கூட்டணியைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், தொகுதிகள் எண்ணிக்கையில் இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. மாநிலங்களவை மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவாதங்கள் சுமுகமாக இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் இரு தரப்பின் பேச்சுவார்த்தைக் குழுக்கள் மீண்டும் சந்தித்து முடிவு எடுக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.












Click it and Unblock the Notifications