11 ஆயிரம் ஊழியர்கள்.. மாண்டஸ் புயலை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயார்.. அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: தமிழகத்தில் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் மின் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
வங்க கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 270 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டிருக்கிறது. இப்புயல் இன்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளது.
மணிக்கு 15 கி.மீ.வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த மாண்டஸ் புயல் தற்போது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணிக்குள் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ்: காற்றின் வேகத்தால் தலைமைச் செயலகத்தில் சேதமடைந்த தேசியக் கொடி.. மெட்ரோ ரயில்கள் இயங்குமா?

பல்வேறு இடங்களில் கனமழை
மாண்டஸ் புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மாண்டஸ் புயலின் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழக அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்கள் அவசியம் இன்றி வெளியே பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் பேரிடர் மேலாண்மை துறையினரும் நிலைமைய உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.

செந்தில் பாலாஜி பேட்டி
கரையை கடந்த 3 மணி நேரத்தில் மாண்டஸ் புயல் வலுவிழக்கும் என்றும் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே, மாண்டஸ் புயலை எதிர்கொள்ள மின்சார வாரியம் தயாராக இருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

11 ஆயிரம் மின் ஊழியர்கள்
மாண்டஸ் புயலை எதிர்கொள்ள 11 ஆயிரம் மின் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். 2 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. கடந்த ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் 44 ஆயிரம் பழுதடைந்த மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளது. கோவையை தமிழக முதல்வர் புறக்கணிப்பதாக ஒரு சிலர் கூறி வருகின்றனர். கோவையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை முதல்வர் செய்து வருகிறார்.

மார்ச் மாதத்துக்குள் முடியும்
முதல்வரின் நடவடிக்கை காரணமாக கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் 90 சதவீதம் அளவுக்கு முடிந்துள்ளது. மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைப்பதற்காக 211 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக 138 சாலைகளை சீரமைக்க சுமார் 20 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாநகராட்சிக்கு மட்டும் ரூ.200 கோடி சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் மார்ச் மாதத்தில் முடிந்துவிடும்" என்றார்.