அடுக்குமாடி கட்டடங்களில் ஒவ்வொரு மாடியிலும் தனி மின் மீட்டர் இனி கட்டாயம்.. ஏன் தெரியுமா?
சென்னை: அடுக்குமாடி கட்டடங்களுக்கு புதிதாக திட்ட அனுமதி பெற விண்ணப்பிக்கும் போது, 49 மீட்டர் அதாவது, ஐந்து மாடிக்கு மேற்பட்ட கட்டடங்கள் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் 'பஸ்பார் டிரங்கிங்' முறையில் மின்சார மீட்டரும், மெயின் பாக்சும் அமைக்க வேண்டும் மின் ஆய்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அடுக்குமாடி கட்டடங்களில் மின்சார மீட்டர்கள், மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் போன்றவை ஒட்டுமொத்தமாக, தரைதளம் அல்லது அடித்தளத்தில், ஒரே இடத்தில் அமைப்பார்கள். அப்படி அமைத்தால் தான் எளிதாக மின் கணக்கு எடுக்க முடியும் என்பதால் அப்படி அமைத்தார்கள்..

அதேநேரம் புதிதாக கட்டடங்களில் தளங்களை அதிகரித்தாலோ அல்லது வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, மின்சார இணைப்பு எண்ணிக்கை அதிகரிக்கும்.. ஒவ்வொரு தளத்திலும் உள்ள அடுக்குமாடி வீடுகளுக்கு தனித்தனியாக மின் இணைப்பை பிளாட்டின் உரிமையாளர் அல்லது கட்டிடத்தில் உரிமையாளர் தன் பெயரில் வாங்கியிருப்பார்.
ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால், ஒரே இடத்தில 50 முதல், 100 இணைப்புகளுக்கான மீட்டர்கள், மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்கள் அமைக்கப்படுகிறது. அப்படி ஒரே இடத்தில் அமைக்கப்படுவதால் பல்வேறு பிரச்னைகள் கட்டிடங்களில் ஏற்படுகின்றன. சில நேரங்களில் அடுக்குமாடி கட்டிடங்களில் பெரிய அளவில் தீ விபத்து கூட ஏற்படுகின்றன.
அண்மையில் மும்பையில் ஏற்பட்ட விபத்துக்கு, கட்டடத்தின் அடித்தளத்தில், ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மீட்டர்கள் மற்றும் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்களை அமைத்ததே காரணம் என்று புகார் எழுந்தது. இதையடுத்து, தேசிய மின் ஆய்வு ஆணையம், 49 அடி அதாவது 5 மாடிகள், அதற்கு மேற்பட்ட கட்டடங்களில், ஒரே இடத்தில் மெயின் ஸ்விட்ச் பாக்ஸ்களை வைக்க கூடாது என்றும், ஒவ்வொரு தளத்திலும் மின் மீட்டர்கள் அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, மின் ஆய்வுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது: "அடுக்குமாடி கட்டடங்களில் ஒவ்வொரு மாடியிலும் 'பஸ்பார் டிரங்கிங்' முறையில், மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் மீட்டர்களை அமைக்க வேண்டும். அதிக உயரமுடைய அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவோர், இந்த புதிய நடைமுறையை பின்பற்ற துவங்க வேண்டும்.
பொது கட்டட விதிகளின்படி, தமிழகத்தில், 60 அடி உயரம் அதாவது, ஆறு மாடிக்கு மேற்பட்டவையே, அடுக்குமாடி கட்டடங்களாக வகைபடுத்தப்படுகின்றன. ஆனால், தேசிய கட்டட விதிகளின்படி, 49 மீட்டர் அதாவது, ஐந்து மாடிக்கு மேற்பட்ட கட்டடங்களே அடுக்குமாடிகளாக வகைபடுத்தப்படுகிறது. ஆகவே 49 அடிக்கு மேற்பட்ட உயரம் உள்ள கட்டடங்களில், தள வாரியாக, 'பஸ்பார் டிரங்கிங்' முறையில் மின்சார மீட்டர், மெயின் பாக்ஸ் அமைக்க வேண்டும். இதில் ஏற்கனவே, திட்ட அனுமதி பெற்ற கட்டடங்களை மட்டும் விடுத்து, புதிய கட்டடங்களில் இந்த விதி அமலாக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..
அடுக்குமாடி கட்டிடங்களுக்கு அண்மை காலங்களில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், நிலத்தின் பிரிக்கப்படாத பங்கான யுடிஎஸ் பத்திரம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்தம் தனியாகவும் பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால், பணி நிறைவு சான்றிதழ் பெற்ற குடியிருப்புகளில், வீடு விற்பனையின்போது, யுடிஎஸ் பத்திரத்தில் வீட்டின் பரப்பளவையும், மதிப்பையும் குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இதேபோல் குடியிருப்பில் வீடு வாங்குபவர்களுக்கு பதிவு கட்டணம் 2 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 25 லட்சம் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு 1.15 லட்சம் வரை பதிவு கட்டணம் வசூல் செய்யப்பட்ட நிலையில் இனிமேல் ரூ.2.25 லட்சம் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அண்மையில் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுக்குமாடி கட்டிடங்களில் இனி ஒவ்வொரு தளத்திலும் மின் மீட்டர் பாக்ஸ் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. தமிழகத்தில், 60 அடி உயரம் அதாவது, ஆறு மாடிக்கு மேற்பட்டவையே, அடுக்குமாடி கட்டடங்களாக வகைபடுத்தப்படுகின்றன. எனவே அதன்படியே 6 மாடிக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு மட்டுமே இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications