சென்னையில் கிண்டி, வேளச்சேரி உள்பட முக்கிய பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தம்
சென்னை: சென்னையில் கிண்டி, வேளச்சேரி உள்பட முக்கிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரைமின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கோடை வெயில் கடுமையாக உள்ள காரணத்தால் மக்கள் பரிதவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மற்ற ஊர்களை ஒப்பிடும் போது வெயிலின் தாக்கம் குறைவாகவே உள்ளது. அதேநேரம் மரங்களே இல்லாத காங்ரீட் காடு என்பதால் இப்போது வரும் வெப்பம் தாங்க முடியாத அளவிற்கு இருக்கிறது.

பலரும் பகலிலும் ஏசி போட்டு தான் வீட்டிற்குள் இருக்கிறார்கள். ஏசி இல்லாத வீடுகளை விரைவில் விரல்விட்டு எண்ணும் நிலை சென்னையில் வரலாம். அந்த அளவிற்கு ஏசி பயன்பாடு சென்னையில் அதிகரித்துள்ளது. சென்னையில் பெரும்பாலான கடைகளில் ஏசி பயன்பாடு உள்ளது. ஓட்டல்கள் தொடங்கி சலூன் கடைகள் வரை ஏசி பயன்பாடு இல்லாத கடைகள் மிக குறைவு. வெப்பத்தில் இருந்து தப்பிக்க சென்னை மக்களுக்கு உள்ள ஒரே வழி ஏசி என்றாகிவிட்டது.
இந்த சூழலில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட அடுத்த ஐந்து நாட்களுக்கு அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனிடையே மின்வாரியம் இடைவிடாமல் மின்சாரம் வழங்கும் பணியினை செய்து வருகிறது. பராமரிப்பு பணிகளையும் குறைத்துவிட்டது. அதேநேரம் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளைத்தான் செய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கிண்டி, வேளச்சேரி உள்பட முக்கிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் இரண்டு மணி வரைமின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் 30.04.2024 செவ்வாய் அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை 33 கி.வோ. தில்லைகங்கா நகர் துணை மின் நிலையத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கூடுதல் 16MVA உயரழுத்த மின்மாற்றியினை இயக்கத்திற்கு கொண்டு வரும் பணியின் காரணமாக கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்படும்.
தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் ஒரு பகுதி, பழவந்தாங்கல், ஜீவன் நகர், சஞ்சய் காந்தி நகர், வேளச்சேரி. ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், வாணுவம்பேட்டை, பிருந்தாவன் நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரத்தின் ஒரு பகுதி, ஏஜிஎஸ் காலனி (வேளச்சேரி மேற்கு), இபி காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் நியூ காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும். 2 மணிக்கு பிறகு மின் விநியோகம் தரப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications