மின்சார வாரியம்.. பல எதிர்ப்புகளுக்கு நடுவே மாறி ஒலித்த "கார்த்தி" குரல்.. இனி கரண்ட் பில் குறையுமா?
சென்னை: கரண்ட் பில் உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று சிறுதொழில் அதிபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.. அனைத்து தரப்பிலிருந்தும் மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புகள் வரும்நிலையில், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சொல்லியிருக்கும் கருத்தானது கவனம் பெற்றுள்ளது.
தமிழகத்தில் வீடு உட்பட அனைத்து பிரிவுகளுக்குமான மின் கட்டணம், 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.. மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்ட நிலையில், அரசு மானியம் போக, நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகை குறித்தும் அரசு தெரிவித்திருந்தது.

அதன்படி, 100 யூனிட் பயன்படுத்தும் வீட்டிற்கு முற்றிலும் மின் கட்டணம் இலவசம் என்பதால், 480 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
கரண்ட் பில்: 200 யூனிட் உள்ள வீடுகளில் முதல் 100 யூனிட் இலவசம், அடுத்த, 100 யூனிட்டிற்கு, 245 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல் முதல், 500 யூனிட் வரை மானியம் வழங்கப்படுகிறது. 500 யூனிட் மேல் உள்ள வீடுகளில், முதல், 100 யூனிட் மட்டும் இலவசம்; மீதியுள்ள யூனிட்களுக்கு, அதற்கு ஏற்ப நிர்ணயித்துள்ள மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்.. என்று தெரிவித்திருக்கிறது.
இந்த திடீர் கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்..அந்தவகையில், மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என சிறுதொழில் அதிபா்கள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது.
திரும்ப பெற வேண்டும்: மேட்டூா் அணை சிறு தொழிலதிபா்கள் சங்கத் தலைவா் ஏ.மாதப்பன் இதுகுறித்து கூறும்போது, "தமிழ்நாடு மின்சார வாரியம் ஜூலை 15-ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே அறிவித்த மின் கட்டண உயா்வை சமாளிக்க முடியாமல் தொழில்கள் நலிவடைந்து வரும் நிலையில், மீண்டும் 4.83 சதவீத கட்டண உயா்வால் யூனிட்டுக்கு 35 காசுகளும், நிலைக் கட்டணம் கிலோவாட்டுக்கு ரூ. 7-ம் உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்கள் மேலும் நலிவடைந்து தொழில்கள் அழியும் அபாயம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மின் கட்டண உயா்வை குறைக்க வலியுறுத்தி தமிழ்நாட்டிலுள்ள சிறுதொழில் சங்கங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் இன்றுவரை குறைக்கப்படவில்லை. தற்போது மேலும் மின்கட்டணத்தை உயா்த்தியிருப்பது சிறுதொழில்புரிவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுதொழில் வளர்ச்சி: எனவே, தமிழ்நாடு மின்வாரியம் உயா்த்தியுள்ள மின்கட்டண உயா்வை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்று சிறுதொழில் வளா்ச்சிக்கு உதவ வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, கடந்த 2022-ல் சுமார் ரூ.31,500 கோடிக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தன.. இப்போது எப்படியும் கரண்ட் பில் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகளை களையாமல் மின்சாரக் கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்தப்பயனும்இல்லை, இதனால் மின்சார வாரியத்தில் ஊழல் அதிகரிக்கவே வகை செய்யும் என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
மின்சார கட்டணம்: ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுபோக தொழில் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் புதிய கட்டண உயர்வு ஏழை மக்களையும், தொழில் நிறுவனங்களையும் கடுமையாக பாதிக்கும் வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், சொல்லாத மின் கட்டண உயர்வை மட்டும் திமுக அரசு செய்துவருவதாகவும் குற்றஞ்சாட்டி வருகின்றன.. எனவே, இந்த கட்டண உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டங்களையும் அறிவித்து வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்தானது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது..
கார்த்தி சிதம்பரம்: காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், "தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.. மின்வாரியத்தின் கடன் சுமையை குறைத்தால் தான் மின் கட்டணத்தை குறைக்க முடியும். 25 ஆண்டுகளாகவே எந்த அரசும் இதை செய்யவில்லை. அப்படியிருக்கும்போது, இந்த அரசால் மட்டும் தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்று சொல்ல முடியாது" என்றார் கார்த்தி சிதம்பரம்.


Click it and Unblock the Notifications
