விடிய விடிய தூக்கம் போச்சு.. மாத சம்பளம் வாங்குவோருக்கு பெரிய ஆபத்து வெயிட்டிங்? இதோ முழு ரிப்போர்ட்
சென்னை: இன்றைய உலகில் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தைத் தீர்மானிப்பது அவனது அறிவோ அல்லது பண்போ கிடையாது.. அவனது வங்கி கணக்கிலிருந்து ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் தானாகவே வெளியேறும் இஎம்ஐ (EMI) தொகைகள் தான்... இந்த வசதி, மேலோட்டமாக பார்த்தால் வரப்பிரசாதமாக தோன்றலாம். ஆனால் உண்மையில், இது நடுத்தர வர்க்கத்தினரை ஒரு நீண்ட காலப் பொருளாதார சிறைக்குள் தள்ளிவிடுவதாகவே தெரிகிறது.. எப்படி??
இஎம்ஐ வாழ்க்கையை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் வாதம் மிகவும் முக்கியமானது... கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து ஒரு வீட்டையோ அல்லது காரையோ வாங்க பல ஆண்டுகள் ஆகும்; அதற்குள் முதுமை வந்துவிடும். அதனால் இப்போதே அனுபவிப்போம்" என்பதே அவர்களின் நிலைப்பாடு.

வாதத்துக்கு ஓகே.. ஆனால்?
இது தர்க்கத்துக்கு சரியாக தோன்றினாலும், இதற்காக அவர்கள் செலுத்தும் மனரீதியான விலை ரொம்பவே அதிகம். மாதத்தின் முதல் வாரத்திலேயே சம்பளத்தின் பெரும்பகுதி வங்கிக் கடன்களுக்காக சென்றுவிடுவதால், எஞ்சிய நாட்களை கடத்துவதே ஒரு பெரும் போராட்டமாகிவிடுகிறது.
இத்தகைய வாழ்க்கை முறையில், வேலையில் ஒரு சிறு நெருக்கடி ஏற்பட்டாலோ அல்லது எதிர்பாராத மருத்துவச் செலவுகள் வந்தாலோ ஒட்டுமொத்தக் குடும்பத்தின் நிம்மதியும் நிலைகுலைந்து போகிறது... அத்துடன் அடைக்க வேண்டுமே என்ற கிலியும், பிடிக்காத வேலையில் கூட பலரை அடிமையாக இருக்க செய்கிறது.
மறுபுறம் கடன் இல்லாத வாழ்க்கை என்பது ஒரு தனித்துவமான சுதந்திரம். இவர்களிடம் நவீன ரக கார்களோ அல்லது ஆடம்பரமான அப்பார்ட்மெண்ட்களோ இல்லாமல் இருக்கலாம்.
கோடி தந்தும் கிடைக்காத பொக்கிஷம்
ஆனால் மாத இறுதியில் அவர்களுக்கு இருக்கும் அந்த மன நிம்மதி கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷம். "யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை, என் உழைப்பின் ஊதியம் எனக்குத்தான்" என்ற அந்த கிளாரிட்டி அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கையைத் தருகிறது.
இவர்கள் ஆடம்பரத்தை விட அவசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பவர்கள். கையிலுள்ள பணத்திற்கு ஏற்ப தங்கள் ஆசைகளை சுருக்கி கொள்வதால், பொருளாதார மந்தநிலை அல்லது திடீர் வேலை இழப்பு போன்ற அபாயங்கள் இவர்களைப் பெரிதாகப் பாதிப்பதில்லை.
நிஜமான சுகம் எங்கே?
உண்மையான சுகம் என்பது எதில் இருக்கிறது? இஎம்ஐ மூலம் வாங்கப்பட்ட ஏசி ரூமில் கடன் சுமையை நினைத்துத் தூக்கம் வராமல் அவஸ்தை படுவதிலா அல்லது சாதாரண ஃபேன் காற்றில் கடன் தொல்லை இல்லாமல் நிம்மதியாக தூங்குவதிலா? நடுத்தர வர்க்கத்தின் மிகப்பெரிய பலவீனமே மற்றவர்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதுதான்.
பக்கத்து வீட்டுக்காரர் ஒரு பொருளை வாங்கிவிட்டார் என்பதற்காக, தகுதிக்கு மீறிய கடனை தலையில் ஏற்றிக் கொள்வதுதான் பல குடும்பங்களின் வீழ்ச்சிக்கு தொடக்கமாக அமைகிறது. கடன் வாங்கி பொருள் சேர்ப்பது என்பது, நிஜமாகவே உங்கள் எதிர்காலத்தின் மகிழ்ச்சியை இன்றே அடகு வைப்பதற்குச் சமம்.
EMI தேவையா? தேவையில்லையா?
வீடு போன்ற வாழ்நாள் அத்தியாவசிய தேவைகளுக்குக் கடன் வாங்குவது தவிர்க்க முடியாததுதான். ஆனால், செல்போன், டிரஸ், டூர் போவது என தேவையற்ற விஷயங்களுக்குக் கூட இஎம்ஐ என்றால் முறையை, அது ஒரு தீராத சுழலுக்குள் நம்மைத் தள்ளிவிடும்.
ஆகவே, கடன் இல்லாத மனிதனே தன் வாழ்நாளில் அதிக நாட்கள் நிம்மதியாகச் சிரிக்கிறான். இஎம்ஐ என்பது ஒரு அழகான போதை போன்றது, அது ஆரம்பத்தில் இனிக்கும், ஆனால் காலம் போக போக கசக்கத் தொடங்கும். தன்னுடைய வருமானத்திற்குள் வாழ்க்கையைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்பவனே இன்றைய ஓட்டத்தில் உண்மையான வெற்றியாளனாகத் திகழ்கிறான். நிம்மதியான உறக்கம் வேண்டுமா அல்லது தற்காலிக ஆடம்பரம் வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய தருணம் இது.,.!!












Click it and Unblock the Notifications