பட்டா.. நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு.. அரசு நிலங்களில் வீடுகள்.. 162 ஏக்கர் ஏரி நிலைமை? ஹைகோர்ட் நறுக்
சென்னை: தமிழகம் முழுவதும் நீர்நிலைகள், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள நீர்நிலைகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இது தொடர்பாக கடந்த 2004ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது..

ஆக்கிரமிப்புகள்: 3 குழுக்கள் அமைத்து பணிகள் நடப்பதாக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்ட நிலையில், குழுக்கள் அமைத்திருந்தாலும், இன்னும் எத்தனை ஹெக்டேர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது? எத்தனை ஹெக்டேர் பரப்பு நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன? லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், அரசு குழுக்களால் என்ன பயன்? குழுக்கள் முறையாக கண்காணிக்கிறதா என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியிருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையும் துரிதமாகி, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளும் வேகம் எடுத்திருந்ததை மறுக்க முடியாது. அதுபோல, தமிழகத்தில் எங்கு ஆக்கிரமிப்புகள் என்றாலும் அதில் நீதிமன்றம் தலையிட்டு, அது தொடர்பான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.
விசாரணை: அந்தவகையில், இந்நிலையில், சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள கோலடி ஏரியை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், இந்த விவ காரம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், அந்த பகுதியில் 20வருடங்களுக்கு மேல் மக்கள் வாழ்ந்து வருவதாகவும் கூறினார்.
நீர்நிலைகள்: அப்போது குறுகிட்ட நீதிபதிகள், "20 ஆண்டுகள் இல்லை சோழர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், 162 ஏக்கரில் இருந்த ஏரி தற்போது 112ஆக சுருங்கிவிட்டது" என்றனர்.
இதையடுத்து, அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ம.கவுதமன் "உரிய பட்டாவோடு மக்கள் வீடுகளை கட்டி வாழ்ந்துவருவதாகவும் அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
விசாரணை ஒத்திவைப்பு: அப்போதுநீதிபதிகள், "கடும் மழை காலத்தில் அந்த பகுதி மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை கருத்தில் கொண்டே தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்துள்ளோம், இந்த வழக்கில் அவர்களையும் இணைக்க வேண்டும்.. இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரத்தை நியமிக்கிறோம்" என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications