7 மணி நேரம்! ஒரே ரூமில் விசாரிக்கப்பட்ட பொன்முடி.. ரெக்கார்ட் ஆன வாக்குமூலம்! இன்று மீண்டும் விசாரணை
சென்னை: அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோர் மீண்டும் இன்று மாலை அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதால் அவர் மீதான விசாரணை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தப்பட்டது.

காலை 7 மணிக்கு தொடங்கிய ரெய்டு இரவு 12 மணி வரை தொடர்ந்தது. இன்னொரு பக்கம் 9 மணி அளவில் ரெய்டுக்கு இடையே பொன்முடி விசாரணை நடத்தப்படுவதற்காக அழைத்து செல்லப்பட்டார். கைது செய்யப்பட்டார் என்று கருதப்பட்ட நிலையில் அவரை விசாரணை செய்வதற்காக என்று மட்டும் அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர்.
கடந்த 2012ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்படுவது தெரிய வந்துள்ளது. 11 ஆண்டுகள் கழித்து ரெய்டு நடத்தப்படுவது பழிவாங்கும் நடவடிக்கை என்று அரசியல் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் கூட்டம் பா.ஜ.க.வுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலங்களில் செய்தது போல, தமிழ்நாட்டிலும் அமலாக்கத்துறை மூலம் பா.ஜ.க. அதன் நடவடிக்கையை தொடங்கி உள்ளது.
அதன்படி பொன்முடி மகன் கவுதம சிகாமணி செய்த முதலீடு ஒன்றுதான் ரெய்டுக்கு காரணம் என்கிறார்கள். இவர் ஆர்பிஐ ஒப்புதல் இன்றி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகர்தாவில் முதலீடு செய்துள்ளார். அங்கே இருக்கும் பிடி எக்செல் மெகிண்டோ என்னும் நிறுவனத்தில் கடந்த 2008ல் முதலீடு செய்துள்ளார்.
சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு பங்குகளை இவர் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில் கருப்பு பணத்தை அவர் வெள்ளையாக்கியதாக அமலாக்கத்துறை சந்தேகம் கொண்டுள்ளதாம். இதற்கான ஆதாரங்கள் அடிப்படையில்தான் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதேபோல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் விதமாக 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அவர் முதலீடு செய்ததாகவும் புகார் வைக்கப்பட்டு உள்ளது.
இதில் அமைச்சராக அப்போது இருந் பொன்முடிக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் கீழ் இந்த ரெய்டு நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மொத்தம் 7 மணி நேரம் அவரிடம் அமலாக்கத்துறை விடிய விடிய விசாரணை செய்துள்ளது. விடாமல் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
இதில் பொன்முடி எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பல்வேறு முக்கிய பண பரிமாற்றங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணையில் கேள்வி எழுப்பப்பட்டது. அவரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. நேற்று ரெய்டின் போது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவர் வீட்டில் சோதனை நடந்தது. அமைச்சர் பொன்முடி மகன் கவுதம சிகாமணி எம்பி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.
விழுப்புரத்தில் உள்ள அமைச்சரின் வீட்டிலும் சோதனைகள் நடைபெற்று வந்தன. இந்த ரெய்டுக்கு பின்னர்தான் அதை பற்றி வாக்குமூலம் வாங்க அமலாக்கத்துறை அவரை அழைத்து சென்றது. இரவு முழுக்க 7 மணி நேரம் அவரிடம் செய்யப்பட்ட விசாரணை இன்னும் முடியவில்லை. அதன்படி அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோர் மீண்டும் இன்று மாலை அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதால் அவர் மீதான விசாரணை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications