இன்று தொடங்குகிறது பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங்.. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று!
சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு இன்று கவுன்சிலிங் நடைபெறுகிறது. இணைய வழியில் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் வீடுகளில் இருந்தும், அரசு அமைத்துள்ள மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

பி.இ படிப்புகளுக்கு இந்த ஆண்டு 1,87,693 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 1,78,959 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கல்லூரிகளை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாக மாணவ, மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்புப் பிரிவில் வரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளது.
சிறப்பு பிரிவில் விளையாட்டுப் பிரிவில் 38, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில் 11, மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 579 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 261 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். இதனால், இன்று கவுன்சிலிங்கில் பங்கேற்கும் அனைவருக்குமே அவர்கள் விரும்பும் இடங்கள் கிடைக்கவுள்ளன.
மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இரவு வெளியிடப்படும். அதற்கு மறுநாள் மதியம் 3 மணிக்குள் ஒப்புதல் அளித்து உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
இதைத் தொடர்ந்து இதர சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் 27-ம் தேதி வரை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன்பின் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜூலை 28ஆம் தேதி தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறும். அந்தந்த பிரிவில் வரும் மாணவர்கள் அவர்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்யவேண்டும்.












Click it and Unblock the Notifications