கொடியை பயன்படுத்த அதிமுக கடும் எதிர்ப்பு.. "சசிகலா பயன்படுத்துறாங்களே" பாயிண்டை பிடித்த ஓபிஎஸ் அணி
சென்னை: ஒபிஎஸ் அணி அதிமுக கொடியை பயன்படுத்தினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக நிர்வாகிகள் கூறி வரும் நிலையில், சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தியதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்களே அது என்ன ஆனது என்று கு.ப கிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் இருந்து ஓரங்கட்டபட்டுள்ள ஓ பன்னீர் செல்வம் திருச்சியில் வரும் 24 ஆம் தேதி மாநாடு நடத்துகிறார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால், ஒ பன்னீர் செல்வம் தனது மாநாட்டிற்கு அதிமுக பெயரையும் கொடியையும் பயன்படுத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எச்சரித்து வருகின்றனர்.

எனினும் ஓ பன்னீர் செல்வம் அணியினர், நாங்கள் அதிமுக கொடியை பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று கூறி வருகின்றனர். மாநாட்டிற்கு இன்னும் இரண்டு தினங்களே இருப்பதால் மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முழு வீச்சில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர். ஓ பன்னீர் செல்வம் அணியின் மூத்த நிர்வாகியான வைத்திலிங்கம் டெல்டாவில் இருந்து மொத்தமாக ஆட்களை இறக்க திட்டமிட்டு இருக்கிறாராம்.
அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தும் பெருமளவு ஆட்களை திரட்டிக் கொண்டு வர ஓபிஎஸ் நிர்வாகிகள் ஆயத்தமாகி வருவதாக சொல்லப்படுகிறது. முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான கு.ப.கிருஷ்ணன் தான் மாநாடு பணிகளை மும்முரமாக கவனித்து வருகிறார். கு.ப கிருஷ்ணன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக கொடியை பயன்படுத்துவதை தடுப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. எந்த நீதிமன்றமும் இந்த கொடியை பயன்படுத்த தடை எதுவும் விதிக்கவில்லை. நாங்கள் புதுக்கட்சியை துவங்குவதற்கு என்ன காரணம் உள்ளது? எங்களுக்கு என்று ஒரு கட்சியை தலைவர் கொடுத்து இருக்கிறார். இந்தக் கட்சியை காப்பாற்றுவதற்கு வலிமையையும் ஆற்றலையும் ஜெயலலிதா கொடுத்து இருக்கிறார்.
இந்த கட்சியை காப்பாற்றுவதற்கான வல்லமை எங்களுக்கு இருக்கிறது. வேறு கட்சியை நாடுவதற்கோ துவங்குவதற்கோ நாங்கள் இல்லை. அதிமுக கொடியை பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக நிர்வாகிகள் இன்பதுரை உள்ளிட்டோர் கூறுகிறார்களே அது பற்றிய உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இக்கேள்விக்கு பதிலளித்த கு.ப. கிருஷ்ணன், "சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வந்த போது அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று அவர்கள் (இபிஎஸ் தரப்பு) நீதிமன்றத்திற்கு போனார்கள். இன்று வரை வழக்கு என்ன ஆனது. பயன்படுத்தக்கூடாது என்று எதுவும் வந்துள்ளதா.. இல்லையே.. தேசியக் கொடியை தவிர எந்தக் கொடியையும் அரசியல் சாசனத்தில் எழுதப்படவில்லை.
இந்தக் கொடியை பயன்படுத்துவதை எடுத்து செல்ல தடை விதிக்க எவருக்கும் உரிமை இல்லை. கொடி விவகாரத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் அதனை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications