தமிழ்நாட்டில் என்டிஏ "கூட்டணி ஆட்சி" அமையும்.. எடப்பாடியை அருகில் வைத்து பியூஷ் கோயல் பேட்டி!
சென்னை: ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை வீழ்த்தி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வீட்டில் காலை உணவு அருந்திய பியூஷ் கோயல், தமிழக மக்களின் நலனுக்காக திமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார்.
என்டிஏ கூட்டணியில் அமமுக இணைந்துவிட்ட சூழலில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தனது வீட்டில் எடப்பாடி பழனிசாமி காலை விருந்து அளித்தார். இதன் மூலமாக அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு உள்ளிட்டவை முடிவடைந்துவிட்டதாக விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல் நாளை நடக்கவுள்ள என்டிஏ பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் மேடையேற உள்ளனர்.

இந்த நிலையில் காலை விருந்துக்கு பின், பியூஷ் கோயல் மற்றும் இபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பியூஷ் கோயல் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் காலை உணவு அருந்தினேன். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகன் கூட்டணி ஆட்சிக்கு வரும். திமுக ஆட்சியில் தமிழக மக்களின் நலனுக்காக எதுவும் செய்யப்படவில்லை.
ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை முழுமையாக வீழ்த்தி அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வரும். எடப்பாடி பழனிசாமி என்னுடைய நீண்ட கால நண்பர். என்டிஏ கூட்டணி நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு எதிர்காலத்திற்கான சிறந்த வளர்ச்சியை கொண்டு வரும். நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.
திமுக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள். ஏற்கனவே பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாளை பிரதமர் மோடியின் பங்கேற்கும் பொதுக்கூட்டம் மிகப்பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது என்று தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பாக பேசப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் டெல்லியில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போதே இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications