பிரேமலதாவுக்கு எடப்பாடி வைத்த “செக்”.. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. ‘பலே’ தேர்தல் கணக்கு!
சென்னை: தேமுதிகவுக்கு 'செக்' வைத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 2026 ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட் கொடுப்பதாக உறுதி அளித்திருந்தாலும், இந்த அறிவிப்புக்குப் பின்னால் கூட்டணி கிடுக்கிப்பிடி போட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பி-க்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் திமுகவின் எம். சண்முகம், எம்.எம். அப்துல்லா, பி. வில்சன், மதிமுகவின் வைகோ, அதிமுகவின் என். சந்திரசேகர், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

ராஜ்யசபா தேர்தல்
6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வருகின்ற ஜூன் 19 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூன் 9 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கும் என்றும், வேட்பு மனுவைத் திரும்பப் பெற ஜூன் 12 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை பதவிக்கு போட்டி நடைபெறும் பட்சத்தில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 19 மாலை 5 மணிக்கு எண்ணி முடிவு அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திமுக சார்பில் அண்மையில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுக சார்பில் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுக கொடுத்த வாக்குறுதியின்படி தேமுதிகவுக்கு ஒரு சீட் கொடுப்பது அதிமுகவின் கடமை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி இருந்தார்.
அதிமுக வேட்பாளர்கள்
இந்நிலையில் அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத் தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ தனபால் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை ஆகியோர் அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேமுதிகவுக்கு இப்போது சீட் ஒதுக்கப்படவில்லை.
தேமுதிகவுக்கு 2026ல் சீட்
அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க தொடரும். 2026-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலின்போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அதிமுக வழங்கும் என்று எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதலோடு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
'செக்' வைத்த எடப்பாடி பழனிசாமி
தங்களுக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என பிரேமலதா தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், அண்மையில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தே இதுதொடர்பாக கேட்டிருந்தார். இதுவரை தேமுதிக சார்பில் யாருமே எம்.பி ஆகியிராத நிலையில் எம்.பி சீட் தங்களுக்கு வேண்டும் என வலியுறுத்திக் கேட்டனர்.
ஆனால், இப்போது சீட் இல்லை என மறுத்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த ஆண்டு நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் 1 சீட்டை தேமுதிகவுக்கு தருவதாகச் சொல்லி இருக்கிறார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், திமுகவை கூட்டணியில் தொடர வைக்க வேண்டும் என்பதற்காக இதன் மூலம் செக் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
அடுத்த ஆண்டு தேர்தல் நேரத்தில்
2026 ஆம் ஆண்டு ஏப்ரலில் திமுகவின் என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், திருச்சி சிவா, கனிமொழி சோமு, அதிமுகவின் தம்பிதுரை, தமாகா தலைவர் வாசன் ஆகிய 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிகாலம் முடிவடைகிறது. அந்த 6 இடங்களுக்கான தேர்தல் 2026 மார்ச் மாதம் அறிவிக்கப்படக்கூடும்.
ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்பதால், மார்ச் மாதவாக்கில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருக்கும். அந்த சமயத்தில் திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் 2 பேரையும் ராஜ்யசபா வேட்பாளராக வெற்றி பெறவைக்க முடியும். அதில் ஒரு இடம் தேமுதிகவுக்கு என்றுதான் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கூட்டணியில் தேமுதிக கட்டாயம்
ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்படும் நேரத்தில் சட்டசபை தேர்தலுக்கு கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கும். அப்போது அதிமுக வழங்கும் சீட் வேண்டுமெனில் அப்போது தேமுதிக அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இப்போது சீட் கொடுத்திருந்தால், தேமுதிக அடுத்த ஆண்டு அதிமுக உடனான கூட்டணியை விட்டு விலகக்கூட வாய்ப்பு உள்ளது.
ஆனால் அடுத்த ஆண்டு இந்த சீட் கொடுக்கும்போது, சட்டமன்றத் தேர்தலுக்கு கூட்டணி உறுதி செய்யப்பட்டிருக்கும். எனவே, தேமுதிகவால் கூட்டணி விவகாரத்தில் சுதந்திரமான முடிவை எடுக்க முடியாது. ஒருவேளை அதிமுக கூட்டணியை விட்டு விலகும் முடிவை எடுத்தால் அதன்பிறகு ராஜ்யசபா சீட்டையும் அவர்களிடம் கேட்க முடியாது. இப்படியான நெருக்கடியா சூழலுக்கு பிரேமலதாவை தள்ளி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications