"ஜெய்பீம் பார்த்தேன், உள்ளம் உலுக்கியது"னு சொன்னீரே! இப்ப என்னாச்சு? முதல்வருக்கு எடப்பாடி கேள்வி
சென்னை: ஜெய்பீம் படம் பார்த்தேன், உள்ளம் உலுக்கியது என ரிவ்யூ கொடுத்த முதல்வர் ஸ்டாலின் திருப்புவனத்தில் இளைஞர் மரணம் குறித்து என்ன சொல்ல போகிறார் என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் என்பவர் பெண் பக்தரின் காரில் இருந்த ஒன்பதரை பவுன் நகையை திருடி விட்டதாக வந்த புகாரை அடுத்து, திருபுவனம் காவல்துறை அஜித் குமாரை கைது செய்து விசாரணை செய்ததாகவும், அச்சமயத்தில் காவலரின் தாக்குதலால் அஜித் குமார் மரணம் அடைந்து விட்டதாகவும் அவரின் உறவினர்கள் இறந்த அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

"ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா Review எழுதிய விடியா அரசின் முதலமைச்சர் எங்கே இருக்கிறார்? @mkstalin
விக்னேஷ் லாக்கப் மரணத்தின் போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதே போல் பொய் தான் பதிலாக வருமா?
தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமே தவிர, சட்டத்தை தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது.
தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக் கூட நிர்வகிக்கத் தெரியாத பொம்மை முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
திருபுவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணம் அடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளி கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயிலில் அதே பகுதியை சேர்ந்த பாலகுருவின் மகன் அஜித் குமார் (27) காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன் தினம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமியும் அவரது மகள் நிகிதாவும் கோயிலுக்கு வந்தனர். காரில் வந்த சிவகாமிக்கு நடக்க முடியாததால் காவலாளி அஜித்குமார், சக்கர நாற்காலி கொடுத்து உதவியுள்ளார்.
அப்போது நிகிதா, காரை ஓரமாக நிறுத்துமாறு அஜித்குமாரிடம் தெரிவித்த போது தனக்கு கார் ஓட்ட தெரியாது. வேறு யாரையாவது வைத்து நிறுத்த சொல்லுங்கள் என்றார். கோயிலில் வழிபாடு முடித்துவிட்டு காரில் ஏறிய போது பின் சீட்டில் பெட்டியில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகையை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகாமியும் நிகிதாவும் இதுகுறித்து அஜித்குமாரிடம் கேட்ட போது, அவர் தனக்கு எதுவுமே தெரியாது என சொன்னதை அடுத்து திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அஜித்குமாரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது திடீரென அஜித் குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். இதை அறிந்த உறவினர்கள் திருப்புவனம் காவல் நிலையம் முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அஜித் குமாரின் உடலை வாங்க மறுத்து போராட்டமும் நடத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications