“ஸ்டாலினுக்கு தகுதியே இல்லை.. தன்னைத் தானே புகழ்ந்துகொண்ட போலி விவசாயி”.. எடப்பாடி பழனிசாமி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழக விவசாயிகளுக்கு புதிதாக எந்தத் திட்டத்தையும் கொண்டுவராமல் தன்னைத் தானே புகழ்ந்துகொண்ட போலி விவசாயி ஸ்டாலின்" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "3 வேளாண் சட்டங்களை நாம் எதிர்த்தபோது அதனை ஆதரித்து கையெழுத்திட்டவர்கள் அதிமுகவினர். தோளில் பச்சை துண்டு போட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயிகள் நாங்கள் அல்ல. விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக துணை நிற்பவன் நான்தான்.

EPS Slams Stalin as Fake Farmer Says No New Schemes for Tamil Nadu Farmers

பயிர்களுக்கு இடையே வளரும் களைகளைப்போன்று தான் கடந்த அ.தி.மு.க ஆட்சி இருந்தது. எல்லா வகையிலும் விவசாயத்திற்கு துரோகம் செய்த ஆட்சிதான் கடந்த கால ஆட்சி." எனக் காட்டமாகப் பேசி இருந்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி பதிலடி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளித்து டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க முயற்சித்த; விவசாயிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பாய்ச்சிய குறுவை சாகுபடிக்கு காப்பீடு வழங்காத, போலி விவசாயி திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறைக்கு அருகில் 11.6.2025 அன்று நடைபெற்ற அரசு விவசாய கண்காட்சி விழாவில், விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாக ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும், என்னைப் பற்றியும் பேசியுள்ளார்.

தலைவாசலில் சுமார் 1100 ஏக்கர் நிலத்தில் சுமார் ரூ. 1,025 கோடி மதிப்பீட்டில், தென் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்காவை துவக்கி வைத்து, அதில் ஒரு பகுதியினை 22.2.2021 அன்று திறந்து வைத்தேன். இத்திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் கலப்பின பசு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டு அதிக பால் தரும் பசு உருவாக்கப்பட்டு அதன்மூலம் பால் உற்பத்தி அதிகரித்திருக்கும். நாட்டுக் காளைகள் இனம் காக்கப்பட்டிருக்கும். கலப்பின ஆடு ஆராய்ச்சி மையம், கோழி இன ஆராய்ச்சி மூலமும், மீன் வளர்ச்சி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, இன்று விவசாயிகளின் வருவாய் உபதொழில்கள் மூலம் பல மடங்காக உயர்ந்திருக்கும்.

வயிற்றில் அடித்த அரசு

இவ்வாறு விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் தென் ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா திட்டத்தை நிறைவேற்றாமல், விவசாயிகள் உபதொழில்கள் மூலம் வருவாய் ஈட்டுவதைத் தடுத்து, அவர்களின் வயிற்றில் அடித்துள்ளது விவசாயிகளுக்கு எதிரான ஸ்டாலின் மாடல் அரசு.

மீத்தேன்- ஹைட்ரோ கார்பன் ஆய்வுத் திட்டங்களுக்கு கையெழுத்திட்டு, அனுமதி வழங்கி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்குவதற்கு திமுக மேற்கொண்ட முயற்சியினைத் தடுத்து நிறுத்தி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, டெல்டா விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது எனது தலைமையிலான அம்மாவின் அரசு.
அம்மாவின் அரசில் காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு காவிரியில் நமது உரிமை பாதுகாக்கப்பட்டது.

அத்திக்கடவு அவினாசி திட்டம் - சுமார் 80 சதவீத பணிகள் முடிவடைந்திருந்த நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, சுமார் 35 மாத தாமதத்திற்குப் பிறகு நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி திறந்த போலி விவசாயி ஸ்டாலின், 11.6.2025 அன்று நடந்த கூட்டத்தில் மேற்கு மண்டல மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக நாடக வசனம் பேசியுள்ளார். இந்தத் திட்டத்தை மாநில நிதியிலேயே நிறைவேற்றியது எனது தலைமையிலான அம்மாவின் அரசு என்பதை மேற்கு மண்டல மக்கள் நன்கு அறிவார்கள். மேலும், ஸ்டாலின் மாடல் அரசு அத்திக்கடவு- அவினாசி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதை மக்கள் அறிவார்கள்.

மேட்டூரில் காவிரியின் உபரி நீர், நீரேற்றுப் பாசனம் மூலம் நீரேற்றப்பட்டு, கால்வாய்கள் மூலம் வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பப்பட்டு, பிறகு சரபங்கா நதியில் கலக்கும் இத்திட்டத்தின் பணிகள் எங்கள் ஆட்சியில் சுமார் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு. சுமார் 50 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் முழுமை பெறவில்லை.

விவசாயிகள் மறக்கமாட்டார்கள்

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மூன்று ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு காப்பீடு வழங்காத போலி விவசாயி ஸ்டாலின், நேற்றைய விழாவில் 4 ஆண்டுகளில் பயிர்க் காப்பீடாக பெற்றுத் தந்த தொகை 5 ஆயிரத்து 720 கோடி ரூபாய் என்று மார்தட்டிப் பேசியுள்ளார். 2017-18 முதல் 2021 வரை, 4 ஆண்டுகளுக்கு பயிர்க் காப்பீடாக சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாயை எனது தலைமையிலான அம்மாவின் அரசுதான், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக அளவு பயிர்க் காப்பீட்டை பெற்றுத் தந்து, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்ந்தது.

தமிழக விவசாயிகளுக்கு புதிதாக எந்தத் திட்டத்தையும் கொண்டுவராமல் தன்னைத் தானே புகழ்ந்துகொண்ட போலி விவசாயி ஸ்டாலின், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிக நிவாரணம் வழங்கியதாகவும் பேசியுள்ளார். ஸ்டாலின் அவர்களே, விவசாயிகள் எதையும் மறந்துவிட மாட்டார்கள். நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு சுமார் 25 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தினீர்கள்.

ஆனால், முதலமைச்சர் ஆனவுடன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 13,500 மட்டுமே வழங்கினீர்கள். தேசிய பேரிடர் நிவாரண மீட்பு நிதி 2023-ஆம் ஆண்டு முதல் ஹெக்டேருக்கு ரூ. 13,500-லிருந்து 17,000-மாக உயர்த்தியதைக்கூட ஸ்டாலின் மாடல் அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தரவில்லை. மேலும், டெல்டா மாவட்டங்களில் 2021 முதல் 2024 வரை, 4 ஆண்டுகள் உரத் தட்டுப்பாடு நிலவியது. இதையெல்லாம் விவசாயிகள் இன்றும் மறக்கவில்லை. முத்தாய்ப்பாக, 2016 (ரூ. 5,319 கோடி) மற்றும் 2021 (ரூ. 12,110 கோடி) 5 ஆண்டுகளில் இரண்டு முறை விவசாயக் கடன் தள்ளுபடி செய்த அரசு அம்மாவின் அரசு.

வறட்சியின் போது அம்மாவின் அரசு 2016-17ஆம் ஆண்டு 2,247 கோடி ரூபாயை வறட்சி நிவாரணமாக வழங்கியது. சிறப்பு குறுவை மற்றும் சம்பா சாகுபடிகளுக்கு, சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு, தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலத்தடி நீர் மூலம் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. இதனால், தமிழகம் தொடர்ந்து மத்திய அரசின் 'கிர்ஷி கர்மான்' விருதைப் பெற்றது.

போலி விவசாயி ஸ்டாலின்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ச்சிய போலி விவசாயி ஸ்டாலினை வேளாண் பெருமக்கள் மறந்துவிட மாட்டார்கள். நாங்கள் 1.4.2021 முதல் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்தோம். அதையும் கிடப்பில் போட்ட அரசு விடியா ஸ்டாலின் மாடல் அரசு. 2021, திமுக தேர்தல் அறிக்கையில் கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்து, இன்றுவரை இந்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையில், நேற்றைய கூட்டத்தில் டன் ஒன்றுக்கு 3,500 ரூபாய் வழங்குவதாக பெருமையடித்துக் கொண்டுள்ளார் போலி விவசாயி விளம்பர முதல்வர் ஸ்டாலின்.

100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்றும்; சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்கள். ஆனால், தற்போது முழுமையாக 100 நாட்கள் வேலை வழங்குவதுமில்லை; சம்பளமும் உயர்த்தப்படவில்லை. 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏரி, குளங்கள் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார்கள்; அது அறிவிப்போடு நிற்கிறது.

எங்கள் ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம், புதிய தடுப்பணைகள், விவசாயிகளுக்கு இலவச வண்டல் மண் என்று ஏராளமான திட்டங்களைத் தீட்டியதன் காரணமாக தமிழகமெங்கும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. 83 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை, எங்கள் ஆட்சியில் தூர் வாரப்பட்டது.

அம்மா ஆட்சியில் சுமார் 2,136 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது. ஆனால், விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், போதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்காத காரணத்தால், விவசாயிகள் தாங்கள் வியர்வை சிந்தி விளைவித்த நெல் மழையில் நனைந்து வீண் ஆனதை விவசாயிகள் மறந்துவிடவில்லை. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கும் உடனுக்குடன் பணம் வழங்கப்படுவதில்லை. இன்றுவரை நெல் மூட்டைகள் மழையில் நனைவது தொடர்கதையாக உள்ளது.

எனக்கு சர்ட்டிபிகேட் கொடுக்க நீங்க யார்?

தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் ஒரு விவசாயி என்பதை பெருமையாகக் கூறுவதோடு, இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன். விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் கஷ்டத்தையும், வியர்வையையும், வேதனையும் அறியாத ஒரே முதலமைச்சர், விளம்பரம் மூலம் ஆட்சி புரியும் ஸ்டாலின் மட்டுமே. 'நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா? நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.

தமிழக மக்கள் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என்பதையும், தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்ட அம்மாவின் அரசை மனதில் நிறுத்தியும், இன்று சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள், போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் இந்தியாவிலேயே அதிக அளவு கடன் வாங்கி முதலிடத்தைப் பெற்றிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினையும், தமிழக மக்கள் மனதில் சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் போது தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+