சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட்
சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தியிருந்த அதிமுக உட்கட்சி மோதல் தற்போது சமரச பாதையை நோக்கி நகர்ந்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அணிகள் இன்று மீண்டும் இணைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த சந்திப்பில் சி.வி. சண்முகம் பங்கேற்காதது புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிவி சண்முகம் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு, தவெக அரசுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில் அதிமுகவில் கடும் உட்கட்சி பிரச்சனை உருவானது. குறிப்பாக, எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரின் தலைமையில் இருந்த எம்.எல்.ஏக்கள் குழு, சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது.

இது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக குற்றம்சாட்டி, எஸ்.பி. வேலுமணி அணியை சேர்ந்த பலரின் கட்சிப் பொறுப்புகளை இபிஎஸ் தரப்பு பறித்தது.
அதிமுக உட்கட்சி மோதல்
மேலும், இரு அணிகளும் தனித்தனியாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்களை சந்தித்து மனு அளித்திருந்தன. இந்த அரசியல் இழுபறிக்கிடையே, எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த 5 எம்.எல்.ஏக்கள் மீண்டும் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம், மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்தனர்.
எஸ்பி வேலுமணி
இந்த சூழலில், தற்போது எஸ்.பி. வேலுமணி தரப்பில் உள்ள 16 எம்.எல்.ஏக்களும் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இணக்கப்பாதைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதில் தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.சி. வீரமணி, கே.பி. அன்பழகன், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒன்றிணைந்த அதிமுக
இந்த சந்திப்பு மூலம் அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணையும் சூழல் உருவாகியுள்ளது என கட்சியினர் மத்தியில் பேசப்பட்டது. மேலும், சட்டப்பேரவைத் தலைவரிடம் இரு அணிகளும் முன்பு அளித்திருந்த புகார்களை வாபஸ் பெறவும் முடிவு செய்யப்பட்ட நிலையில், சட்டசபைக்கு சென்ற சி.விஜயபாஸ்கர் தான் அளித்திருந்த மனுக்களை வாபஸ் பெற்றார்.
சிவி சண்முகம்
ஆனால், இந்த முக்கிய சந்திப்பில் சி.வி. சண்முகம் மட்டும் பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, இன்று காலை வரை சி.வி. சண்முகம் அலுவலகத்தில்தான் எஸ்.பி. வேலுமணி தரப்பின் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இறுதி சந்திப்பில் அவர் இல்லாதது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்
இதற்கிடையே, சி.வி. சண்முகம் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, பின்னர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணையக்கூடும் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் வேகமாக பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை சி.வி. சண்முகம் தரப்பிலிருந்தோ அல்லது தவெக தரப்பிலிருந்தோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில், அதிமுகவில் தொடர்ச்சியாக சில எம்.எல்.ஏ.க்கள் சிவி சண்முகத்தை பின்பற்றி தங்கள், பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணையப் போவதாக அதிமுக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications