அசல் பத்திரத்தை திருடிட்டார்.. பீரோவில் இருந்த பணமும் கொள்ளை.. போலீசில் சி.வி.சண்முகம் பரபர புகார்!
சென்னை : அதிமுக தலைமை அலுவலக பத்திரங்கள், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாக ஓ.பன்னீர்செல்வம் மீது எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ஜூலை 11ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் புகுந்து ஆவணங்கள், விலை உயர்ந்த பொருட்களை திருடிச் சென்றதாக ஈபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டியிருந்தனர்.
காணமால் போன பொருட்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட ஈபிஎஸ் தரப்பினர், இன்று அதுதொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதிமுக தலைமைக் கழகம்
கடந்த ஜூலை 11ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றபோது, ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் கடும் சேதங்கள் ஏற்பட்டன. இருதரப்பினரும் மாறி மாறி நடத்திய கல் வீச்சில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அதிமுக அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தார்.

ஈபிஎஸ் பொறுப்பில் சாவி
இந்த சீலை அகற்றி அலுவலகத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் இருதரப்பினரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து, அலுவலக சாவி, தலைமைக் கழக மேலாளரும், ஈபிஎஸ் ஆதரவாளருமான மகாலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அறைகளுக்குள் சென்று
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், மகாலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் அலுவலகத்திற்குள் சென்று ஒவ்வொரு அறையாகப் பார்வையிட்டனர். அலுவலகத்தின் அறைக் கதவுகள் உடைக்கப்பட்டு, ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என்றும் கணினிகளின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட பொருட்களும் காணவில்லை என அதிமுகவினர் தெரிவித்தனர்.

விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு
அலுவலகத்தில் இருந்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்களை காணவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு காலகட்டங்களில் நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட செங்கோல், வெள்ளி வேல் ஆகியவற்றையும் திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார்.

போலீசில் புகார்
இந்நிலையில், ஓபிஎஸ், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். இன்று அதிமுக ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகம் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரில், அசல் பத்திரங்கள் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துச் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அசல் பத்திரம் காணவில்லை
அந்தப் புகாரில் அதிமுக அலுவலகத்தில் இருந்த பொருட்கள், ஆவணங்களை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அதிமுக தலைமை அலுவலக அசல் பத்திரங்களை காணவில்லை, சபையர் தியேட்டர் இடத்தின் பத்திரங்களைக் காணவில்லை, அதிமுகவுக்குச் சொந்தமான 37 மோட்டார் வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்களையும் காணவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

31 ஆயிரம் ரொக்கப் பணம்
மேலும், தலைமைக் கழக பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.31,000 ரொக்கப்பணம், 2 வெண்கல குத்துவிளக்கு ஆகியவற்றையும் காணவில்லை என்றும் சி.வி.சண்முகம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓபிஎஸ் உள்ளே நுழைந்தபோது அவரது ஆதரவாளர்கள் அலுவலகத்தை சூறையாடியது தொடர்பான வீடியோ காட்சிகளின் பென் டிரைவ்களையும் புகார் மனுவோடு இணைத்து கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications