“வாரிசு அரசியலை தமிழக மக்கள் ஏற்கவில்லை! முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார்கள்!”-எடப்பாடி பழனிசாமி
சென்னை: வாரிசு அரசியல் குறித்து, திமுக மீது பாஜக கடும் விமர்சனங்களை அடுக்கியிருந்தது. இதற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்களுக்கு அரசியல் குறித்து எச்சரிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது குறித்து பேசியிருந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வாரிசு அரசியலை தமிழக மக்கள் ஏற்கவில்லை முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
திமுக மீது வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்றுதான் வாரிசு அரசியல். திமுகவில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தார். அதன் பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக உள்ளார். தற்போது இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக இருக்கிறார்.

இந்நிலையில் இது குறித்து என்டிடிவி செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, "இந்தியா ஜனநாயக நாடு. அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை, குறிப்பாக திமுகவை பொறுத்தவரை அந்த குடும்பத்தை சேர்ந்தவர்தான் அக்கட்சிக்கு தலைவராக முடியும்.
ஆட்சியில் இருக்கும்போது, முதலமைச்சராகவும் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே ஆக முடியும். மாநிலத்தில் உள்ள மக்கள் இந்த குடும்ப அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறார்கள். மத்தியில் ஒரு காலத்தில் பிரதமராக நேருவும், அவரது வாரிசுகளான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் பிரதமராக இருந்தபோது அதை வாரிசு அரசியல் என்று விமர்சித்தனர். இன்று திமுகவில் குடும்ப அரசியல் இருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
குடும்பத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தில் இருந்தால், ஊழல் நடக்கத்தான் செய்யும். எனவே ஊழல் ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.
முன்னதாக, வாரிசு அரசியல் விமர்சனத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்திருந்தார். அவர் பேசியதாவது, "திமுக பற்றி ஏராளமான பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர். அதில் வாரிசு அரசியலை தான் முதலில் சொல்கிறார்கள்.. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அவர்கள் மக்கள் முன் நின்று வாக்கு வாங்கினால் மட்டுமே வெல்ல முடியும். திமுகவை களத்தில் சமாளிக்க முடியாதவர்களால் வைக்கக் கூடிய இத்துபோனக் குற்றச்சாட்டு.
திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதுவரை ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார்களா? பாஜகவுடன் இருப்பவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள் தான். உச்சநீதிமன்றம் வரை சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தான் அதிமுக. கூட்டணியில் இல்லாத சமயத்தில் அதிமுக மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தீர்கள். இப்போது உங்கள் வாஷிங் மெஷினில் அவர்களை எல்லாம் வெளுத்துவிட்டீர்களா? திமுகவை இந்து விரோத கட்சி என்று கூறுவார்கள்" என்று பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications