திமுகவுக்கு ஆதரவான சிறுபான்மையினர் வாக்குகள்.. SIRல் நாங்க களத்தில் நிற்க அதுவே காரணம்.. சேகர்பாபு!
சென்னை: திமுக 234 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்லி இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி 244 தொகுதிகளில் வெல்லும் என்று சொல்லி இருப்பார் என அமைச்சர் சேகர்பாபு கிண்டல் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அரசியல் நாகரீகத்துடன் பேச வேண்டும் என்று கூறிய சேகர்பாபு, அதிமுக கரையான் புற்று போல் கரைந்து வருவதாக கூறியுள்ளார்.
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதிமுக 210 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என்றும், தொண்டர்கள் சுறுசுறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

அதேபோல் தேர்தல் நெருங்கும் போது அனைவரும் எதிர்பார்த்த கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர்கள் பேசினர். அதனை எடப்பாடி பழனிசாமியும் உறுதி செய்தார். இந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், முதல்வர் ஸ்டாலின் "வெல்வோம் 200, படைப்போம் வரலாறு" என்று சொன்னார். அதனால் எடப்பாடி பழனிசாமி 210 தொகுதிகள் என்று சொல்லி வருகிறார்.
ஒருவேளை திமுக 234 தொகுதிகள் என்று சொல்லி இருந்தால், எடப்பாடி பழனிசாமி கூடுதலாக 10 தொகுதிகளை சேர்த்து 244 தொகுதிகளை அதிமுக வெல்லும் என்று சொல்லி இருப்பார். ஏட்டிக்கு பூட்டியாக பேசுவதுதான்.. இன்றைய கள வரலாறு 200 தொகுதிகளை விடவும் அதிக தொகுதிகளில் திமுக வென்று மீண்டும் ஆட்சியில் அமரும்.
நிச்சயமாக திமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் எதிரிகளுக்கு தோல்விகளை பரிசாக கொடுப்பார்கள். அதேபோல் முதல்வர் ஸ்டாலின் சட்டையை கிழித்து கொண்டு நடந்தார் என்பது பற்றிய பேச்சுகள் எல்லாம் அரசியல் நாகரீகமற்றது. எடப்பாடி பழனிசாமியை கூடத்தான் சேலத்தில் வேட்டியை உருவி இருக்கிறார்கள். அதனை நாங்கள் சொல்லலாமா.. அரசியல் நாகரீகத்துடன் பேச வேண்டும்.
அதிமுக கரையான் புற்று போல் கரைந்து கொண்டு இருக்கிறது. அதனால் விரக்தியின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவரும் பழுத்த அரசியல்வாதி தான். வெறுப்பின் உச்சத்தில் இருப்பதால், இதுபோன்ற பேச்சுகளை பேசி வருகிறார். அதேபோல் கள்ளத்தனமாக வெல்லும் சூழல் தமிழ்நாட்டில் இல்லை. SIR மூலமாக சிறுபான்மையினர் வாக்குகளை சூறையாடிவிடக் கூடாது என்பதற்காக திமுக களத்தில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications