இதோ வந்துட்டேன்.. கடைசியாக கையெழுத்து போட்ட அருண்ராஜ் ஐஆர்எஸ்! இனி தான் தவெகவில் இருக்கு கச்சேரி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு மறைமுக ஆலோசகராக பணியாற்றி வந்த அருண்ராஜ் ஐஆர்எஸ் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். விரைவில் அவர் தமிழக வெற்றிக்கழகத்தில் இணையப் போகிறார் என்ற தகவல் பரவி வந்த நிலையில் தற்போது தனது பொறுப்புகள் அனைத்தையும் முறைப்படி ஒப்படைத்துவிட்டு, பணியிலிருந்து விலகியதாக அதிகாரப்பூர்வமாக கூறியிருக்கிறார். மேலும் இனி புதிய தொடக்கம் இருக்கும் எனவும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அதிமுக, திமுக கூட்டணி தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் தானும் அக்கட்சிகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பது விஜய்யின் எண்ணம்.

இதற்காக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு, பல்வேறு கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகளை வளைத்து போடவும் திட்டமிட்டு வருகிறார். மேலும் சர்க்கார் படத்தில் வந்தது போல தமிழகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளை கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற எண்ணமும் விஜய்க்கு இருக்கிறது.

Arunraj Vijay Tamilaga Vetri Kazhagam

அந்த வகையில் தான் பிரபல பேச்சாளரான ராஜ்மோகன், விசிகவில் இருந்து நீக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா, பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு சென்று பின் அக்கட்சியில் இருந்து விலகிய சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியம் ஆகினர். ஏற்கனவே கட்சியில் ஜான் ஆரோக்கியசாமி ஆலோசகராக இருக்கும் நிலையில் அருண்ராஜும் ரகசியமாக ஆலோசனையாளராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. ஐஆர்எஸ் அதிகாரியான அவர் இந்திய வருமான வரித்துறையில் பணியாற்றியவர். தமிழகத்தில் பணியாற்றிய அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாருக்கு தூக்கி அடிக்கப்பட்டார்.

அடிப்படையில் மருத்துவரான இவர் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஆர்எஸ் அதிகாரி ஆனார். 2009 ஆம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரியாக சென்னையில் பணியாற்றினார். தொடர்ந்து பீகாருக்கு தூக்கி அடிக்கப்பட்டார். பாட்னாவில் வருவாய்த்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என திட்டமிட்டு இருந்தார். ஆனால் நேரடியாக அல்லாமல் ஜான் ஆரோக்கியசாமி, மூலம் விஜய்க்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் அருண்ராஜ். இதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பிய நிலையில் அந்த ராஜினாமா மத்திய அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைய இருப்பதாகவும் இணை பொது செயலாளர், துணை பொது செயலாளர் ஆகிய பதவிகள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே விஜயின் ரசிகர் மன்றம் தொடங்கி பல வகைகளில் அவருக்கு ஆதரவாக நின்ற அருண்ராஜின் வரவு விஜய்க்கு பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் வகித்து வந்த பொறுப்புகளை முறையாக ஒப்படைத்து விட்டதாக கூறி இருக்கிறார் அருண்ராஜ். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," இன்று அதிகாரப்பூர்வமாக எனது பொறுப்புகளை ஒப்படைத்து விட்டேன். கொஞ்சம் உணர்ச்சிவசமாக உணர்கிறேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவ அதிகாரியாக 5 ஆண்டுகள் பணியாற்றி. பின்னர் 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசு பணியின் அற்புதமான பயணம் அது. பின்னர் 15 ஆண்டுகள் ஐஆர்எஸ் அதிகாரியாக பணியாற்றினேன்.

கடவுள் எனக்கு மிகவும் கருணை காட்டியுள்ளார். நல்ல பணிகளை செய்யும் வாய்ப்புகளை தந்தார். அதை நான் என்றும் என் இதயத்திற்கு நெருக்கமாக வைத்திருப்பேன். இதுவரை எனக்கு ஆதரவளித்த மூத்த அதிகாரிகள், சக ஊழியர்கள், நண்பர்களுக்கு எனது நன்றிகள். எனது தாயையும் வணங்குகிறேன். அவருடைய ஆசீர்வாதம் மட்டுமே என்னை இப்போது இந்த நிலைக்கு கொண்டு வந்தது. எனது மனைவிக்கும் நன்றியை சொல்லிக் கொள்கிறேன். எனது வாழ்க்கையின் நோக்கத்தை தொடர, அன்பான நினைவுகளுடன் ஐஆர்எஸ் பணியை விட்டு வெளியேறுகிறேன். இன்னும் நான் செல்ல வேண்டி உள்ளது" என பதிவிட்டு இருக்கிறார்.

தொடர்ந்து அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில் விரைவில் அவர் அதிகாரப்பூர்வமாக விஜயை சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் எனக் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+