நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்.. அதிமுக ஐடி அணிக்கு புது அசைன்மென்ட்.. ஐடியா தரும் செல்லூர் ராஜூ
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
Recommended Video
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியான உடன் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

ஐடி பிரிவு
அதன்படி மதுரையில் அதிமுக கட்சி அலுவலகத்தில் தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், "திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்பதை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க திமுக தகவல் தொழில் நுட்ப அணி தான் உதவியது. நாமும் நமது ஐடி அணியை அப்படி வலுப்படுத்த வேண்டும்

வேட்பாளர்கள்
நாம் 2 மாதத்திற்கு முன்பாகவே தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டோம். பல்வேறு விஷயங்களைக் கருத்தில் கொண்டே வேட்பாளர் தேர்வு நடந்துள்ளது. முடிந்தளவு நல்ல வேட்பாளர்களைத் தேர்வு செய்துள்ளோம். பொதுமக்களிடம் இவர் தான் வேட்பாளர் இவருக்குத் தான் வாக்கு செலுத்த வேண்டும் எனக்கூறாமல் அவர்களின் விருப்பத்தைக் கருத்தில் கொண்டும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தில்லுமுல்லு
அதிமுகவின் முழு வேட்பாளர் பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும். பெரியார் பேருந்து நிலையம் உபயோகமற்றது எனக் குற்றச்சாட்டு தெரிவித்த இன்றைய திமுக அமைச்சர்கள் அதே பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்துள்ளனர். இப்படி திமுக தரப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளன. திமுகவின் தில்லுமுல்லுகளை தகவல்தொழில்நுட்ப அணியினர் கவர் செய்ய வேண்டும்.

இபிஎஸ் - ஓபிஎஸ்
தற்போது மூன்றாவது தலைமுறை வந்துவிட்டது. அடுத்த இந்தக்கட்சியை வழிநடத்தி தலைமை தாங்கி நடத்தப் போவது நீங்கள் தான். நாங்கள் ரிட்டெயர் ஆகிவிடுவோம். இன்னும் எவ்வளவு நாள் இருக்க போகிறோம். எங்களுக்குப் பிறகு நீங்கள் தான் கட்சியை வழி நடத்தப் போகிறீர்கள். பொறுமையின் சின்னமாக உள்ள ஒபிஎஸ்- ஈபிஎஸ் கட்சியில் படிப்படியாக வளர்ந்துள்ளனர். உழைப்பு உழைப்பு உழைப்பின் மூலமே தலைமை பொறுப்புக்கு வந்துள்ளனர்.

பொங்கல் தொகுப்பு
திமுகவை ஏன் ஆட்சியில் அமர வைத்தோம் என மக்கள் தற்போது சிந்திக்கும் அளவுக்கு நாம் பலமான கட்சியாக வளர்ந்து உள்ளோம். அதற்குக் காரணம் ஒபிஎஸ்- ஈபிஎஸ் செயல்பாடு தான். கட்சியில் தலைவரின் மகன் என்பதால் ஸ்டாலினுக்கு மரியாதை கொடுக்கின்றனர். ஸ்டாலின் நிர்வாகத் திறமை இல்லாதவர்.அதனால் தான் பொங்கல் தொகுப்பில் குளறுபடி ஏற்பட்டது. ஆட்சிப் பொறுப்பேற்று முதன்முதலில் கொடுக்கும் பொங்கல் தொகுப்பைச் சிறப்பாகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் முதல்வருக்கு இல்லை.

விடியல் அரசு அல்ல, விளம்பர அரசு
இது விடியல் அரசு அல்ல. விளம்பர அரசு! விளம்பரம், விளம்பரம் என்று அது மட்டுமே அவர்களின் நோக்கம். சட்டமன்றத்தில் தன்னை புகழ வேண்டாம் எனக்கூறிவிட்டு தன் மகனைப் புகழ்வதை விரும்புபவர் ஸ்டாலின். உழைப்பு அனுபவம் மூலம் வரும் பதவியைத் தான் தக்க வைத்துக்கொள்ள முடியும். திமுகவின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் மக்களின் அபிமானத்தைப் பெறலாம். திமுகவினர் மோசமானவர்கள் என்று தொடர்ந்து எடுத்துக்காட்டோடு சொல்ல வேண்டும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications