மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயர் வைப்பதை விட இதுதான் முக்கியம்.. ஜனாதிபதிக்கு சபரிமாலா கடிதம்
சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் ஆசிரியை சபரிமாலா கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இது மருத்துவ சேர்க்கைக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு. இந்த தேர்வு தேசிய அளவில் நடத்தப்படுவதால் இதை எதிர்கொள்வதில் கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் சிக்கலாக உள்ளது.
இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு என்பது நசுக்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

நீட் தேர்வு
ஆனால் மத்திய அரசு நீட் தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என பிடிவாதம் பிடிக்கிறது. மருத்துவ மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர், ஆசிரியைகளே நீட் தேர்வு எழுதாதவர்கள். அவ்வாறு இருக்கும் போது அதை படிக்கும் மாணவர்கள் மட்டும் எதற்காக நீட் தேர்வு எழுத வேண்டும் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் முன் வைக்கிறார்கள்.

மருத்துவம் பயில முடியாமல் தற்கொலை
இந்த நீட் தேர்வால் மருத்துவம் பயில முடியாமல் அரியலூர் மாணவி அனிதா உள்ளிட்ட 18 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். மாணவர்களின் உயிர்களை குடிக்கும் இந்த தேர்வை நீக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான நீட் தேர்வை எதிர்த்து விழுப்புரம் மாவட்டம் வைராபுரம் அரசு பள்ளி ஆசிரியை சபரிமாலா ஜெயகாந்தன் (34) தனது பணியை கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜினாமா செய்தார்.

சமூக அவலங்கள்
இவர் பெண் விடுதலைக் கட்சி என்ற அமைப்பை தொடங்கி சமூக அவலங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவர் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

நீட் தேர்வு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறிய திமுக ஆட்சிக்கு வந்தும் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்படவுள்ளது. சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி அண்மையில் சட்டசபையில் பேசுகையில் அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயரை வைக்க வேண்டும் என பேசியிருந்தார். இந்த நீட் தேர்வு குறித்து சபரிமாலா குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பத்தே நாள்களில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தனர். மருத்துவக் கல்லூரிக்கு அனிதா பெயர் வைப்பது முதல் கடமை இல்லை.

தேசிய அவமானம்
அனிதா உள்ளிட்ட 18 மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். அதை நாங்கள் நினைவில் வைத்திருக்கிறோம். இது தேசிய அவமானம். இவ்வளவு சாதனைகள் செய்தும், மாணவர்களுக்கான சட்டப் போராட்டம் நடத்த நான்கு ஆண்டுகள் ஆகிறது என்றால் இது மாநில அவமானம். எனவே, நீட் தேர்வை ரத்து செய்வதுதான் முதல் கடமை. அது இந்த ஆட்சியில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications