நிலக்கரி ஊழல்னு அமைச்சர் புகார் சொல்றாரே.. இன்னும் ஏன் எஃப்ஐஆர் பதியவில்லை? அறப்போர் இயக்கம் கேள்வி
சென்னை: அதிமுக ஆட்சியில் நிலக்கரி ஊழல் நடந்திருப்பதாக புகார் கூறும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி இதுவரை ஏன் எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை என அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
அது போல் புளியந்தோப்பில் தரமற்ற வீடுகள் கட்டப்பட்ட விவகாரத்திலும் இவர்கள் புகார் கூறுகிறார்களே தவிர எஃப்ஐஆர் போடவில்லையே என்றும் ஜெயராம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:

கே: நத்தம் விஸ்வநாதன் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த போது நடந்த ஊழலே தங்கமணி அமைச்சராக இருந்த போது தொடர்ந்ததாக சொல்லப்படுகிறதே, அது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: நாங்கள் கொடுத்த ஆதாரம் நத்தம் விஸ்வநாதன் அமைச்சராக இருந்த காலகட்டமான 2012 - 2016 ஆம் ஆண்டு வரை நடந்த ஊழலுக்கானது. ஊழல் பணத்தை பயன்படுத்தி நத்தத்தில் மிகப் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அங்கு ஒரு என்ஜீனியரிங் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியால் 100 கோடி அல்லது 200 கோடி செலவழித்து ஒரு ஸ்டேடியத்தை எப்படி கட்ட முடியும் என்பதை முதலில் விசாரிக்க வேண்டும் என்கிறோம். அப்போது அந்த பணம் இந்த ஊழல் பணமா என விசாரித்தால் தெரிந்துவிடும் என்கிறோம். பின்னர் தங்கமணி வந்த பிறகு 2018 ஆம் ஆண்டு எங்கள் புகாரை அடுத்து அதிக விலைக்கு வாங்குவது நிறுத்தப்பட்டதே தவிர தரத்தில் தொடர்ந்து இதே முறைகேடுதான் நடந்துள்ளது. 2012-2016 ஆம் ஆண்டு நடந்த ஊழலின் வெளிப்பாடுதான் இன்று 2.38 லட்சம் டன் நிலக்கரி காணாமல் போயுள்ளது என்கிறோம்.
கே: ஏன் இத்தனை புகார்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை
ப: கடந்த ஆட்சியில் எல்லா துறைகளிலும் ஊழல் நடந்துள்ளது. 13 புகார்களை எங்கள் இயக்கம் சார்பாக கொடுத்துள்ளோம். ஆனால் இது வரை ஒரு எஃப்ஐஆர் கூட போடப்படவில்லை. இப்போது ஆட்சி மாறியுள்ளது, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒவ்வொரு முன்னாள் அமைச்சர்களாக வழக்குப் பதிவு செய்து வருகிறார்கள்.
கே: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக ஆட்சியில் நிலக்கரி ஊழல் நடந்திருக்கவில்லை என எடுத்துக் கொள்ளலாமா?
ப: அப்படியெல்லாம் எடுத்துக் கொள்ள முடியாது. 2011 ஆம் ஆண்டு முதல்தான் இதுபோன்ற நிலக்கரி ஊழல் நடைபெறுகிறது. அதற்கு முன் நிலக்கரியை மிகப் பெரிய அளவில் கொள்முதல் செய்யப்படவில்லை. அதற்காக 2006 - 11 வரை ஊழலே நடக்கவில்லை என சொல்ல முடியாது. அதற்கான ஆதாரங்கள் வெளிவராமல் இருந்திருக்கலாம். இனியும் ஊழல் நடக்காமல் இருக்குமா என்றால் அதுவும் இல்லை. இது போல் ஊழல் நடக்கும் போது அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கிறது.
கே: தன் மீதான குற்றச்சாட்டை மறைப்பதற்காகவே அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது புகார் கூறுவதாக சொல்லப்படுகிறதே
ப: இருக்கலாம். என்ன நம்ம மீதே புகார்களை கூறுகிறார்களே, நாமும் ஒரு புகாரை வெளியே விடலாம் என நினைத்திருக்கலாம். 2.38 லட்சம் டன் நிலக்கரியை காணவில்லை என்றால் செந்தில் பாலாஜி என்ன செய்திருக்க வேண்டும்? முதலில் எஃப்ஐஆர் போட்டிருக்க வேண்டும். அப்போதுதான் விசாரணையை தொடங்க முடியும். நாங்கள் விசாரிக்கிறோம், விசாரிக்கிறோம் என மீடியாவுக்கு முன்னால் மட்டும் சொல்லிவிட்டால் போதுமா? முந்தைய அரசில் ஊழல் நடந்ததாக சொல்வதற்கு மட்டுமே இந்த புகார்கள் பயன்படுத்தப்படுகிறதே தவிர நடவடிக்கை எடுக்க பயன்படுத்தப்படவில்லையே. முன்னாள் அமைச்சர் மீது வழக்கு போடமுடியாது என வைத்துக் கொள்வோம். ஆனால் தலைமை பொறியாளர் மீது வழக்கு போட்டிருக்க வேண்டுமா இல்லையா. புளியந்தோப்பில் கட்டப்பட்ட கட்டடங்களில் தட்டினாலே சுவர்கள் பெயர்ந்து விழுகிறது. அப்படியென்றால் எஃப்ஐஆர் போட்டிருக்க வேண்டுமே, இன்னும் போடாமல்தானே இருக்கிறார்கள். எனவே முந்தைய ஆட்சியின் மீது பழி போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது நன்றாகவே தெரிகிறது.
கே: தமிழகத்தில் நடைபெறும் மின்வெட்டிற்கும் கடந்த காலத்தில் நடந்த ஊழல்தான் காரணம் என்கிறார்களே இது குறித்து சொல்லுங்கள்.
ப: நிலக்கரியின் தரத்தினால் மின்சாரத்தின் அளவு குறையுமா என்றால் கண்டிப்பாக குறையும். கடந்த 2013 -14 ஆம் ஆண்டு தமிழகத்தின் மின்சார தேவை அதிகரித்துவிட்டதாக கூறி அவசர அவசரமாக தனியாரிடம் இருந்து 3000 மெகா வாட்டை ஒரு யூனிட் ரூ 5க்கு வாங்கியதாக கூறுகிறார்கள். இவர்கள் கூறும் 10 தனியார் நிறுவனங்கள் வடமாநிலங்களில் உள்ளன, அங்கிருந்து மின்சாரத்தை கொண்டே வர முடியாது, காரணம் கிரிட் கனெக்டிவிட்டி இல்லை. 2016 இல்தான் அந்த கனெக்டிவிட்டி வரும் என தெரிந்தே இவர்கள் வேண்டுமென்றே ஊழல் செய்ய இது போல் அதிக விலைக்கு வாங்கியுள்ளார்கள். இந்த கிரிட் கனெக்டிவிட்டி இருந்திருந்தால் இந்த மின்சாரத்தை ஒரு யூனிட்டிற்கு ரூ 2.50 க்கு வாங்கியிருக்கலாம். நம் மாநிலத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம், மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் ஆகியவற்றை சேர்த்தாலே தமிழகத்திற்கு தேவையான 16 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கிடைத்துவிடுகிறது. எனவே தனியாரிடம் இருந்து மின்சாரத்தை வாங்க வேண்டிய அவசியமே இல்லை என்றார். அறப்போர் இயக்கம் ஜெயராமனின் பேட்டியை முழுவதும் தெரிந்து கொள்ள இதனுடன் இணைத்துள்ள லிங்கை பார்க்கவும்.












Click it and Unblock the Notifications