“எம்எல்ஏ சீட் வாங்கித் தருகிறோம்”.. தேனி மாவட்ட திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடி செய்த கும்பல்!
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக கூறி திமுக பிரமுகரிடம் ரூ.1.30 கோடி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த நாகலிங்கத்திடம் இந்த மோசடி நடந்துள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதியும், புதுச்சேரிக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த திமுகவினரிடம் மாவட்ட வாரியாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் நேர்காணல் செய்து வருகிறார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் நாகலிங்கம். இவரது மனைவி சுதா திமுக சார்பில் போட்டியிட்டு பெரியகுளம் நகர்மன்ற 14வது வார்டு உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கட்சி தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நாகலிங்கத்தை கடந்த மார்ச் 5 ஆம் தேதியன்று வாட்ஸ்அப் அழைப்பில் தொடர்புகொண்ட நபர் தன்னை தினேஷ் என்று அறிமுகம் செய்து கொண்டுள்ளார்.
மேலும் திமுக தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறிய அந்த நபர், பெரியகுளம் தொகுதி நிலவரங்களை கேட்டறிந்து தனக்கு தலைமை கழக நிர்வாகிகளுடன் தொடர்பிருப்பதால் பணம் கொடுத்தால் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட சீட் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
தனி தொகுதியில் போட்டியிட ரூபாய் மூன்று கோடி பணம் கொடுக்க வேண்டும் என்றும் உங்களால் தர முடியுமா என்றும் கேட்டுள்ளார். அதற்கு நாகலிங்கம் தன்னால் பணத்தை தயார் செய்து தர முடியும் என்று கூறியுள்ளார். மீதமுள்ள பணத்தை வேட்பாளர் பெயர் அறிவிப்புக்கு பின் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
செல்போனில் தொடர்பு கொண்ட தினேஷ் சொன்னது போல் பெரியகுளம் பகுதியில் உள்ள முன்னாள் நகர கூட்டுறவு சங்கத் தலைவரான அபுதாஹீர் என்பவரிடம் கடந்த 15 ஆம் தேதியன்று 1.30 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேர்காணல் நேற்று மார்ச் 18 ஆம் தேதியன்று திமுக சார்பில் நடத்தப்பட்ட நிலையில், நாகலிங்கத்கு அழைப்பு ஏதும் கிடைக்காததால் சந்தேகமடைந்து தன்னிடம் தொடர்பு கொண்ட நபரை அழைத்தும் அவரை தொடர்பு கொள்ள முடியாததால், பணம் பெற்ற அபுதாஹிரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு தன்னிடம் கொடுத்த பணத்தை திமுக தலைமை கழக நிர்வாகிகள் சொன்னது போல பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த திமுக வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர் கார்த்திக் என்பவர் வாங்கிச் சென்றதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த நாகலிங்கம் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், தினேஷ் என்ற பெயரில் நாகலிங்கத்தை தொடர்பு கொண்ட நபர் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஆசீப்ராஜா எனத் தெரியவந்தது. இதையடுத்து ஆசீப்ராஜா, கார்த்திக் ஆகிய இருவரையும் கைது செய்த பெரியகுளம் தென்கரை போலீசார் இதில் வேறு யாருக்கும் தொடர்பிருக்கிறதா என விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக இதில் ரூபாய் 80 லட்சம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications