குஷியில் "இலவு காத்த கிளி".."பச்சை கிளி" ராயப்பேட்டை வருது? மோடி வேற வர்றாரு..திமுக சுதாரிக்கணுமே??
சென்னை: பிரதமர் மோடி, விரைவில் தமிழகம் வர உள்ள நிலையில், கூட்டணி தொடர்பாக சில தகவல்கள் பரபரத்து கொண்டிருக்கின்றன.. வழக்கம்போல், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமும் தொடர்ந்தபடியே உள்ளன..!!
பாஜக - அதிமுக கூட்டணி முறிந்ததை, தமாகா தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கவேயில்லை.. எப்படியாவது 2 கட்சிகளும் ஒன்றிணைந்துவிடுவார்கள் என்றே கருதினார்கள்.. ஒருகட்டத்தில் 2 தரப்பையும் சமாதானப்படுத்தவும் முயன்றார்கள்.

ஆனாலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை யாராலுமே தகர்க்க முடியவில்லை.. அதனால்தான், நிலைமை 2 மாதத்தில் சரியாகிவிடும் என்று நினைத்து, கூட்டணி பற்றி ஜனவரியில் முடிவு செய்வோம் என்று அறிவித்திருந்தார் ஜிகே வாசன்.. இப்போது ஜனவரி முடிந்து பிப்ரவரியே ஆரம்பித்துவிட்டது. ஆனால், "பாஜகவுடன் கூட்டணி கதம், கதம்" என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்து வருகிறார்.
கூட்டணி: எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக,பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைக்கும் முயற்சியில் வாசன் தீவிரமாக இறங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.. பாஜகவை பொறுத்தவரை, ஓபிஎஸ், அமமுக தினகரன், பாரிவேந்தர், டாக்டர் கிருஷ்ணசாமி போன்றோர் ஆதரவை தந்துள்ள நிலையில், மற்ற கட்சியினரையும் பாஜக கூட்டணியில் ஒருங்கிணைக்க முடிவு செய்துள்ளாராம் வாசன்.
இதற்காகவே பாஜக தேசிய தலைவர் நட்டாவையும் கடந்த வாரம் சந்தித்து பேசியிருந்தார் வாசன்.. அப்பேது, கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது என்றெல்லாம் வாசனிடம் நட்டா உறுதி தந்ததாக தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி: இதற்கு பிறகே, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருக்கிறார் வாசன்.. வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமே இருக்கவே, இன்று பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து பேச போகிறார் வாசன்.. இதுபோக, 11-ம்தேதி சென்னை வரும் நட்டாவை மறுபடியும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளாராம்.
எப்படியும், 18-ம் தேதி பிரதமர் தமிழகம் வர உள்ளதால், அதற்குள் கூட்டணி கட்சிகளை சந்தித்து பேசி, நல்ல சேதியை பிரதமருக்கு சொல்வது என முடிவெடுத்துள்ளாராம் மூத்த தலைவர் மூப்பனார் மகன் வாசன்.
பாஜகவின் மூவ் இப்படி இருக்கிறதென்றால், அதிமுகவோ அதற்கு மேல் விழிபிதுங்கி வருகிறது.. காரணம், தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றி பெற கூடாது என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது.. ஆனால், அதிமுக எந்த ஒரு தொகுதியிலுமே மெஜாரிட்டி பெற்றுவிடக்கூடாது என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறதாம்..
வேட்பாளர்கள்: அதனால்தான், "பசையுள்ள" வேட்பாளர்களை களத்தில் இறக்கி, பாஜக மேலேழுந்து வந்துவிடக்கூடாது என்ற முனைப்பில் அதிமுகவும் செயல்பட்டு வருகிறதாம். ஆக மொத்தம், ஒரே கூட்டணிக்குள்ளேயே தாறுமாறான போட்டிகள் நிலவி கொண்டிருக்கிறதாம்.
இப்போதைக்கு திமுக கூட்டணி மட்டுமே பலமாகவே உள்ளது.. கடந்த தேர்தலில் திமுக அபார வெற்றி பெற உதவியது, இதுபோன்ற பலம்வாய்ந்த கூட்டணியே என்பதால், இந்த முறையும் கூட்டணியை வலுப்படுத்தி வைத்திருக்கிறது திமுக..
தொகுதி பங்கீடு: ஆனால், அதிமுகவில் கூட்டணி முடிவாகாமல் உள்ளதால், சில கட்சிகளை திமுக தரப்பிலிருந்து இழுக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்தபடியே உள்ளன. அதனால்தான், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொமதேக போன்ற கட்சிகள் வெளியே சென்றுவிடாமல் இருப்பதற்காக, அவர்களிடம் தொகுதி பங்கீடு பேச்சையும் திமுக ஆரம்பித்துள்ளது. ஆனாலும், திமுக கூட்டணி கட்சிகள் மீது, அதிமுகவின் குறி அழுத்தமாகவே விழுந்து வருகிறதாம்.
ஏற்கனவே, பாமக, தேமுதிகவை அதிமுகவுக்குள் கொண்டுவர எடப்பாடி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியிலிருந்தும் சில கட்சிகளையும் இழுத்து கொண்டு வர, துரித வேலைகள் நடந்து வருகிறதாம்..
அதிமுக கூட்டணி: அந்தவகையில், திமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைக்காத நிலையில், சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன..!!
இப்போதைக்கு எஸ்டிபிஐ, புரட்சி பாரதம் தவிர, வேறு எந்த ஒரு கட்சியும் அதிமுகவுடன் மறைமுக பேச்சுவார்த்தைகூட நடத்தவில்லையாம்.. சரியான கூட்டணி அமையாமல் போனால், குட்டி குட்டி கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, இரட்டை இலையில் போட்டியிடவும் ரெடியாகி வருகிறாராம் எடப்பாடி பழனிசாமி.
புலம்பல்கள்: பாஜகவை பகைத்துக் கொண்டு, அவசரப்பட்டு கூட்டணியில் இருந்து விலகி விட்டோமே என்று அதிமுகவின் 2ம் கட்ட தலைவர்கள் காதுபடவே பேச துவங்கியும், எடப்பாடி பழனிசாமி அசரவில்லை..!!
மத்தியில் மறுபடியும் பாஜக ஆட்சி அமைத்து விட்டால், ஊழல் வழக்குகள் தொடர்பான நடவடிக்கை பாயும் என்ற மாஜிக்கள் அச்சப்பட்டும்கூட, எடப்பாடி பழனிசாமி அசரவில்லை..!!
"நாம எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால்தான், திமுகவை வீழ்த்த முடியும்" என்று ஜிகே வாசன் பலமுறை எடுத்து சொல்லியும், எடப்பாடி பழனிசாமி அசரவில்லை..!!
பிடிவாதம்: இவ்வளவு பிடிவாதமாகவும், உறுதியாகவும், திடமான முடிவில் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில், எந்த மாதிரியான கூட்டணி அதிமுகவுக்கு அமைய போகிறது? திமுகவுக்கு செல்லும் சிறுபான்மையினர் வாக்குகளை, எடப்பாடி பழனிசாமி அள்ளுவாரா? என்பதுதான் தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications