நெருங்கும் பண்டிகைகள்.. பயணிகளுக்கு 'ஷாக்' தரும் ஆம்னி பஸ் நிறுவனங்கள்.. ப்பா இவ்வளவு கட்டணமா?
சென்னை: பண்டிகை தினங்கள் நெருங்குவதால் ஆம்னி பஸ்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் பயணிகளை தலைசுற்ற வைப்பதாக உள்ளது.
விமானக் கட்டணத்துக்கு நிகராக உயர்த்தப்பட்டுள்ள இந்தக் கட்டணத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதில் அரசு தலையிட்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல ரூ.4 ஆயிரம் வரை வசூலித்தால் ஏழை, நடுத்தர மக்களால் எவ்வாறு சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் எனவும் அவர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

ஆம்னி பஸ்களுக்கே கொண்டாட்டம்
பண்டிகை தினங்கள் வந்தால் யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ, ஆம்னி பஸ் நிறுவனங்களுக்கு வேற லெவல் கொண்டாட்டமாக இருக்கும். பேருந்துக் கட்டணத்தை இஷ்டம் போல உயர்த்தி வசூல் வேட்டையில் ஈடுபட, பண்டிகை தினங்களே அவற்றுக்கு உதவி வருகிறது. ரயில்களில் முன்னதாகவே இருக்கைகள் நிரம்பிவிடுவதால், மக்களின் ஒரே ஆப்ஷனாக இருப்பது பஸ்கள் மட்டுமே. இதனை தெரிந்துகொண்ட ஆம்னி பஸ் நிறுவனங்கள், மக்களின் இந்த இக்கட்டான சூழலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன.

வரிசையாக வரும் விடுமுறை
இந்நிலையில், தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகள் நெருங்குவதால் ஆம்னி நிறுவனங்கள் தங்களின் வழக்கான கட்டணக் கொள்ளையில் இறங்கியுள்ளன. பண்டிகைகள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகளும் நாளையுடன் முடிவடையவுள்ளன. வரும் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் இன்றும், நாளையும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள்.

அதிரடி வசூலில் இறங்கிய ஆம்னி நிறுவனங்கள்
வழக்கம் போல ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டதால், மக்கள் ஆம்னி பஸ்களையே நம்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்ல ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். உதாரணமாக, சாதாரண நாட்களில் சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு செல்ல ஏசி இல்லாத பஸ்களில் ரூ.1,000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், அதே ஊர்களுக்கு தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,300 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஏசி இல்லாத பஸ்களிலேயே இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விமானக் கட்டணத்திற்கு நிகராக..
அதே ஊர்களுக்கு ஏசி செமி ஸ்லீப்பர் பஸ்களில் ரூ.2,200 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது. ஏசி படுக்கை வசதி கொண்ட பஸ்களில் ரூ.3,000 முதல் ரூ.4,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட விமானக் கட்டணத்துக்கு நிகராக ஆம்னி பஸ்களில் பணம் வசூலிக்கப்படுகிறது. ஒருசில பஸ்களில், ரூ.3,500, ரூ.4000 எனவும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications