மகளிர் உரிமைத் தொகைக்கு அப்ளை பண்ணிட்டீங்களா? 28 லட்சம் பெண்களில் இவங்களுக்கு ரூ.1000 கிடைக்காதாமே!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது களஆய்வு நடந்து வரும் நிலையில் யாருக்கெல்லாம் ரூ 1000 கிடைக்காது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் அரசுத் துறை சேவைகள் மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தை கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த முகாம் தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://cmhelpline.tnega.org/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளில் 15 துறைகளின் 46 சேவைகளும், நகர்ப்புற பகுதியில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன.
மகளிர் உரிமைத் தொகை, குடிநீர் இணைப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ், வருமானம், இருப்பிடச் சான்றிதழ், வீட்டு மனை பட்டா, மின் கட்டண பெயர் மாற்றம், முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்களை பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. இந்த முகாமில் அளிக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த வகையில் ரூ 1000 உரிமைத்தொகை கிடைக்காதவர்கள் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் விண்ணப்பிக்க அரசு அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் தற்போது சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது.
அதில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த கேள்விகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்கையில், "கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் கடந்த 26 மாதங்களாக 1.14 கோடி பெண்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் ஒவ்வொருவருக்கும் இதுவரை தலா ரூ 26 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கூடுதலாக பெண்கள் பயனடைய வேண்டும் என்பதால் சில விதிகளை முதல்வர் ஸ்டாலின் தளர்த்தியுள்ளார்.
உதாரணமாக, அரசு மானியத்தில் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்கள், முதியோர் உதவித்தொகை பெறும் குடும்பங்கள் ஆகியவற்றில், விதிகளை பூர்த்தி செய்யும் பெண்களுக்கும் உரிமைத்தொகை சேர்த்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
"உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள் நவம்பர் 15 ஆம் தேதி வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும். அந்த வகையில் தற்போது அக்டோபர் 15 ஆம் தேதி வரை 9,055 முகாம்கள் நடந்துள்ளது. இதில் உரிமைத் தொகை கேட்டு 28 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்கள் வருவாய் துறை மூலம் களஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பணிகள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடிவடையும். அதற்கு பிறகு தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்" என உதயநிதி கூறியிருந்தார்.
இந்த நிலையில் கள ஆய்வை அரசு தீவிரப்படுத்தியுள்ளதால் குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை மறைத்து விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் அண்மையில் அரசு பணியில் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பித்திருந்தால் அவர்களுக்கு ரூ 1000 கிடைக்காது. விண்ணப்பித்தவர்களின் ரேஷன் கார்டில் சரியான முகவரி இல்லை என்றாலும் ரூ 1000 கிடைக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications