அக்கா தேவயானியுடன் சண்டையா? தோல்விகள் கொடுத்த அடி! கண் கலங்கிய நகுல்!
சென்னை: தான் சினிமாவுக்கு நடிக்க வருவேன் என்று ஒருநாளும் ஆசைப்பட்டதே இல்லை என்றும், 'பாய்ஸ்' படத்திற்காக ஷங்கரிடமிருந்த வந்த அழைப்பை முதலில் நிராகரித்ததாகவும் நடிகர் நகுல் மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற 'வாஸ்கோடகாமா' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தனது தம்பி நகுலைப் பற்றி நடிகை தேவயானி மிக உருக்கமாகப் பேசிய பேச்சு பலரது கவனத்தைப் பெற்றிருந்தது. குறிப்பாக அவர், 'இதுவரை அவனது படங்களுக்கான விழாக்களில் நான் பங்கேற்றதே இல்லை. இதுதான் முதல் தடவை' என்றார்.

தொடர்ந்து பேசிய தேவயானி, 'அவன் என் தம்பி இல்லை. நான் அவனுக்கு அக்காவாக இருந்ததே இல்லை. அவனுடன் விளையாடியது இல்லை. நகுலுக்கு நான் ஒரு அம்மா மாதிரிதான். ஏனென்றால் அவன் குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் நான் நடிக்க தொடங்கிவிட்டேன். அவனுடன் இருப்பதற்கு நேரமே கிடைக்கவில்லை. நகுல் ஒரு பன்முக திறமைசாலி.
நடிகர், பாடகர், இசையமைப்பாளர் எனப் பல திறமை கொண்டவன். அவனுக்கு நல்ல திரைக்கதை அமைய வேண்டும். 'பாய்ஸ்' படத்திலிருந்து அவன் 'காதலில் விழுந்தேன்' நடிக்கும்போது மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுத்தான்' என்று உருக்கமாகப் பேசி பார்வையாளர்களை நெகிழச் செய்திருந்தார்.
சில ஆண்டுகளாகவே நகுலுக்கும் தேவயானிக்கும் உறவுமுறை நல்லவிதமாக இல்லை என்று கிசுகிசுக்கள் உலாவந்தன. அதற்கு ஏற்ப இவர்கள் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பங்கேற்காமலிருந்தனர். இந்நிலையில்தான் தேவயானியின் பேச்சு சில உண்மைகளை உடைத்துள்ளது.
அக்காவின் பேச்சு குறித்து நடிகர் நகுல் மனம் திறந்து பல விசயங்களைப் போட்டு உடைத்துள்ளார். அவர் தனது அக்கா தேவயானி உறவு பற்றி பேசும் போது, "சினிமாவுக்கு வந்து 21 வருடங்கள் ஆகிவிட்டன என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. அதேநேரம் வாழ்க்கை என்பது எப்போதும் சிறப்பாக மேல்நோக்கி செல்லும் என நம்பிக் கொண்டிருப்போம்.
ஆனால், அப்படி வாழ்க்கை சீராக அமைவதில்லை என்பதைப் புரிந்துகொண்டுள்ளேன். அது மேடு பள்ளங்கள் நிறைந்தது என்பதையும் உணர்ந்து கொண்டுள்ளேன். 21 வருட சினிமா வாழ்க்கையில் சில ஆண்டுகள் மோசமாக இருந்துள்ளன. அந்த மோசமான ஆண்டை மட்டும் வெட்டி வீசிவிட முடியாது. அதையும் உள்ளடக்கியதுதான் வாழ்க்கை.
அந்த மோசமான அனுபவங்கள்தான் என்னைச் செழுமைப்படுத்தி இருக்கின்றன. அது கிடைக்கவில்லை என்றால், ஒரு பகுதி வாழ்க்கையை என்னால் தெரிந்து கொள்ள முடியாமல் போய் இருக்கும். அது ஒரு பக்குவத்தை எனக்குக் கொடுத்துள்ளது. என் படம் வெளிவந்து சில வருடங்களாகிவிட்டன.
இப்போது 'வாஸ்கோடகாமா' படத்தின் விழாவுக்கு அக்காவை வர சொல்லி அழைப்பிதழ் கொடுக்கப் போனேன். அவர், 'அன்றைக்கு ஷூட்டிங் உள்ளது. முடிந்தால் வருகிறேன்' என்றார். கொஞ்சம் மனதிற்குச் சங்கடமாக இருந்தது. பின் அவர் நிலைமையைப் புரிந்துகொண்டேன். ஒருநாள் இரவு போன் செய்து 'ஷூட்டிங் இரவுக்கு தள்ளி வைத்துவிட்டார்கள். ஆகவே வருகிறேன்' என்றார். உடனே மகிழ்ச்சியாகி விட்டேன்.

அக்காவை நான் சின்ன வயதிலிருந்தே நடிகையாகத்தான் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் அவர் வீட்டிலிருந்ததே இல்லை. நான் பள்ளியில் படிக்கும்போது அவர் நடிகையாகிவிட்டார். அவரைப் பார்த்துத்தான் சினிமாவுக்கு வந்தேன். அவர் எனது தம்பிதானே என்று பாராட்டியது இல்லை. முதன்முறையாக அவர் 'வாஸ்கோடகாமா' விழாவில் பேசியது நானே எதிர்பார்க்காதது. மனம் திறந்து பாராட்டினார். எங்கள் குடும்பத்தில் முகத்திற்கு நேராகப் பாராட்டும் பழக்கம் இருந்ததில்லை. உண்மையாகச் சொன்னால் My Family is Brutal Family. முகத்துக்கு நேராக விமர்சனத்தைக் கடுமையாகச் சொல்லிவிடுவார்கள்.
அக்காவுக்கும் எனக்குக் கூட சில மனஸ்தாபங்கள் இருந்ததாகப் பலரும் எழுதினார்கள். சின்ன வயதில் எனக்கு உறவுகளில் முக்கியத்துவம் தெரியவில்லை. எனக்குக் குழந்தைகள் வந்த பிறகுதான் உறவு என்றால் என்ன என்பது புரிந்தது. முன்பு ஏதாவது சண்டை என்றால், தூக்கி எறிந்துவிட்டுப் போய் விடலாம்? இவர்கள் எதற்கு என்று தோன்றும். இப்போது உறவுகள் என்பதன் அர்த்தம் புரிகிறது. அப்பா, அம்மா இப்போது இல்லை. அக்கா, அண்ணா தான் இருக்கிறார்கள். அவர்கள் உறவு தேவை என்று நினைக்கிறேன்.
அக்கா சினிமாவில் இருக்கிறார் என்று அவரிடம் நான் சிபாரிசு செய்யச் சொன்னதே இல்லை. அவரும் அதைச் செய்தது இல்லை. மக்கள் நினைக்கலாம் தேவயானி இருப்பதால் நான் வந்துவிட்டேன் என்று. அப்படி இருந்ததே இல்லை. அக்காவிடம் நான் என்னை நிரூபிக்க வேண்டும் என்றால் நானே சுயமாகத்தான் அதைச் செய்ய வேண்டும். அவரது உதவியை வைத்து அதைச் செய்யக் கூடாது. அதற்கு ஒரு வேல்யூ இருக்காது.
நான் சினிமாவுக்கு வருவேன் என்று நினைத்ததே இல்லை. மியூசிக் மீதுதான் எனக்கு விருப்பம் இருந்தது. நண்பர்கள் சேர்ந்து இசைதான் கற்று வந்தோம். அம்மாவுக்கு அண்ணனை நடிகராக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவர் என்னைவிட அழகாக இருப்பார். அம்மாதான் ஷங்கருக்கு குடும்ப படத்தை அனுப்பி வைத்தார். அவர் அதைப் பார்த்துவிட்டு அழைத்தார். அம்மா, 'போய் ஷங்கரை பார்' என்ற போது நான் 'போகமாட்டேன். எனக்கு நடிப்பதில் இஷ்டம் இல்லை' என்றுதான் சொன்னேன். அவரது நிர்ப்பந்தத்தால் போய் ஆடிஷன் பண்ணேன். தேர்வு செய்ய மாட்டார்கள் என நம்பினேன். திடீரென்று 'பாய்ஸ்' படத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் என் வாழ்க்கையில் எதையும் திட்டமிட்டுச் செய்யவில்லை. அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications