சென்னை அரசு மகப்பேறு மருத்துவமனை தீ விபத்து:47 குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் சேகர் பாபு
சென்னை: சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 47 குழந்தைகள் பாதுகாப்பாக மீடகப்பட்டுள்ளனர்; புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவனையில் (கோஷா மருத்துவமனை அல்லது கஸ்தூரிபாய் மருத்துவமனை) இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உடனடியாக தீ அணைக்கப்பட்டது. தீ விபத்து நிகழ்ந்த இந்த மருத்துவமனையில் அமைச்சர் சேகர்பாபு, தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

சேகர்பாபு விளக்கம்
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: மருத்துவமனையின் 2-வது தளத்தில் மருத்துவர்கள் தங்கியிருக்கும் அறையின் குளிர்சாதன பெட்டியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் புகை மூட்டம் பரவியது.

47 குழந்தைகள் பாதுகாப்பாக உள்ளனர்
இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 குழந்தைகளும் பாதுகாப்பாக வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். தற்போது புகை மூட்டத்தால் அவதிப்படும் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் வர விருப்பம்
தீ விபத்து தகவல் அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக்கு வருகை தர இருந்தார். கொரோனா தொற்று காலம் என்பதால் மக்கள் கூட்டம் கூடுவர்; அதனால் தவிர்த்துவிடுமாறு நாங்கள் கேட்டுக் கொண்டதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட வரவில்லை.

உரிய நடவடிக்கை
இந்த மருத்துவமனையில் அனைத்து பகுதிகளும் உடனடியாக ஆய்வு செய்யப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நிகழாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications