டாக்சிக் மேனேஜரால் வேலையிழந்த ஐடி ஊழியர்.. 2 மாதத்தில் மீண்டும் வேலையில் சேர சொல்லி கெஞ்சும் பிரபல நிறுவனம்
சென்னை: பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்த ஐடி ஊழியர் ஒருவர் தனது மேனேஜரின் மோசமான அணுகுமுறையால் வேலையை இழந்தார். மேனேஜர் மிக மோசமாக நடத்தியதால் இரு மாதங்கள் அவர் பிரேக் எடுத்திருந்தார். இதற்கிடையே மீண்டும் அவரை தொடர்பு கொண்ட அந்த நிறுவனம் வேலைக்குச் சேரும்படி கேட்டுள்ளது. இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள தகவல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இப்போதும் கூட சில இடங்களில் டாக்சிக்கான மேனஜர்கள் இருக்கவே செய்கிறார்கள். இதனால் ஊழியர்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் இங்கு ஒருவருக்கு நடந்துள்ளது. இது தொடர்பாகத் தகவலை அவர் ரெட்டிட் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கை நிறையச் சம்பளம்
முன்பு அவர் ஆண்டுக்கு ₹30 லட்சம் சம்பளத்தில் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். பிறகு அவருக்கு இன்னொரு நிறுவனத்தில் கண்டிராக்ட் வேலை கிடைத்துள்ளது. நல்ல சம்பளம் என்பதால் அவரும் கண்டிராக்ட் வேலையில் சேர்ந்துள்ளார்.
ஐந்து ரவுண்டுகளை முடித்த பிறகே, அவர் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு இந்திய மேனேஜர் ஒருவரின் கீழ் தான் இவர் பணியாற்றியுள்ளார். அந்த மேனேஜருக்கு இவரின் செயல்பாடுகள் மிகுந்த திருப்தியை அளித்துள்ளது. இருவருக்கும் இடையே தொடக்கத்தில் நல்லுறவே இருந்துள்ளது. ஆனால், அந்த நல்லுறவு சில காலமே நீடித்துள்ளது. பிறகு எல்லாமே மொத்தமாக மாறிவிட்டதாம்.
எல்லாம் நன்றாகவே இருந்தது
முக்கியமான ஒரு பிராஜக்ட்டில் தனியாக வேலை செய்து வந்த அந்த நபர், தினசரி 10 மணி நேரமும், வார இறுதி நாட்களிலும் வேலை செய்துள்ளார். ஆனால், முதலில் கூடுதல் நேரத்திற்கு ஓவர்டைம் ஊதியமும் அவருக்கு வழங்கப்பட்டது. இதனால் அவருக்கு எந்தவொரு பிரச்சினையும் ஏற்படவில்லை. மேலும், அவரை ஆன்சைட்டிற்கும் அனுப்பியுள்ளனர். இதெல்லாம் மேனேஜர் உடனான உறவை வலுப்படுத்தியது. அந்த மேனேஜர் இவரின் வேலையைப் பாராட்டியுள்ளார். மேலும், 10% ஊதிய உயர்வுடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.
சட்டென மாறிய சூழல்
ஆனால், அதன் பிறகு இவர்கள் உறவு சீர்குலையத் தொடங்கியது. சிறு சிறு தவறுகளைக் கூட பெரிதாகக் குற்றஞ்சொல்வது.. புதிதாக எதாவது செய்தால் அதைக் கேலி செய்வது... எல்லா விஷயத்திற்கும் சம்பளத்தை வைத்து விமர்சிப்பது எனத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும், ஓவர்டைம் ஊதியம் நிறுத்தப்பட்டது.. விடுமுறை கேட்டாலும் மறுக்கப்பட்டுள்ளது. விடுமுறை கொடுத்தாலும் அதற்குச் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டது. இப்படி மேனேஜரின் நடத்தை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்தது.
அவர் மேலும் கூறுகையில், "திடீரென்று அவரது அணுகுமுறை மாறியது. சிறிய தவறு செய்தால்.. அல்லது புதிதாக எதாவது முயன்றால் என்னைக் கேலி செய்யத் தொடங்கினார். எந்தப் பிரச்சினை என்றாலும் என் சம்பளம் பற்றிப் பேச ஆரம்பித்தார். தினமும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்ன செய்கிறாய் எனக் கேட்டுக் கொண்டே இருந்தார்.. ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் கேள்வி எழுப்பினார்.
டிஸ்மிஸ் நடவடிக்கை
ஆனால், எனக்கு வேலை பிடித்திருந்தது.. சம்பளமும் திருப்திகரமாக இருந்தது. இதனால் மூன்று மாதங்கள் இந்த மோசமான சூழலை அவர் தாங்கிக் கொண்டேன். அப்போது தான் இந்த பிராஜக்ட்டில் வேறு ஒருவரைச் சேர்க்க மேனேஜர் முயன்றார். அவர் என்னைக் காலி செய்யவே இதைச் செய்வது புரிந்தது. இதனால் உயர் அதிகாரிகளுடன் நடந்த ஒரு மீட்டிங்கில்.. அந்த மேனேஜரின் என்னிடம் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டார் என்பது குறித்த ஆதாரங்களைச் சமர்ப்பித்தேன்.
இந்தச் சூழலில் தான் திடீரென ஒரு நாள் பெர்பாமன்ஸ் சரியில்லை எனச் சொல்லித் திடீரென டிஸ்மிஸ் செய்வதாக மெயில் வந்தது. ஆனாலும் நோட்டீஸ் பிரியட்டில் முழுக்க அங்கு வேலை செய்தேன். அந்தக் காலகட்டத்தில் நான் சிறப்பாக வேலை செய்வதாக உயர் அதிகாரிகள் கூட மெயில் அனுப்பினர். ஆனாலும், இந்தச் சம்பவங்கள் என் மனநலத்தைப் பாதித்தது. இதனால் வேலையில் இருந்து நின்றுவிட்டேன்.
மீண்டும் வேலைக்கு சேர கோரிக்கை
புதிய வேலைகளைத் தேட தொடங்கினேன். இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் அதே நிறுவனத்தின் ஹெச்.ஆர் எனக்குக் கால் செய்தார். மீண்டும் வேலைக்குச் சேர முடியுமா என்று கேட்டார். இன்னொரு சீனியர் மேனேஜரும் என்னை போன் செய்து கேட்டார். இந்த முறை ஒர்க் கல்சர் வேறு மாதிரி இருக்கும் என உறுதியளித்தார்" என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்தார்.
அவரது இந்தப் பதிவு இணையத்தில் வேகமாகப் பரவியது. பெரும்பாலானோர் சில நிபந்தனைகளுடன் மீண்டும் பணிக்குச் சேருமாறு பதிவிட்டனர். அதே மேனேஜரிடம் வேலை செய்ய மாட்டேன்.. கூடுதல் ஊதியம்.. மீண்டும் திடீரென வேலையை விட்டு நீக்கினால் 6 மாதச் சம்பளத்தைக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மீண்டும் பணிக்குச் சேரலாம் எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications