இது புது பிரச்சனையா இருக்கே.. தமிழக அரசுக்கு வந்தது வேறொரு சிக்கல்.. எப்படி சமாளிக்க போகிறார்களே!
சென்னை: கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு அலட்சியப் படுத்தப்படுவதால் தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புத் தொடர சமூக ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் அரசியல் கட்சிகள், சாதி, மத ரீதியிலான அமைப்புகள் ஆகிவற்றின் கொடிக்கம்பங்களை 12 வாரங்களுக்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது.
சென்னை சேர்ந்த வழக்கறிஞர் ராகேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த பொது நல வழக்கில் ராயபுரம் பகுதியில் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியின் கொடிக்கம்பத்தையும் கல்வெட்டையும் அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே ஆர் ஸ்ரீராம் மற்றும் முகமதுசபீக் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஏற்கனவே மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை 12 வாரங்களில் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும், தனி நீதிபதியின் உத்தரவை நீதிபதி நிஷாபானு தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி அமர்வு வரும் ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் கொடிக்கம்பங்களை அகற்றப்பட வேண்டும். அப்படி அகற்றவில்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடரலாம் எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்..
வழக்கு பின்னணி
இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கிலும் இந்த உத்தரவை கடந்த மாதம் உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அந்த வகையில், ''ஏப்ரல் 21-ந்தேதிக்குள் கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்; சம்மந்தப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகள் தங்களின் கொடி கம்பங்களை அகற்றாவிட்டால், அதனை தமிழக அரசே செய்து விட்டு அதற்குரிய செலவுத் தொகையை சம்மந்தவர்களிடமிருந்து வசூலித்துக்கொள்ளலாம்.
தமிழக அரசும் இதனை செய்யத் தவறினால் நீதிமன்ற அவமதிப்பு தொடரலாம்'' என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், ''மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக திமுகவினர் தங்கள் பகுதியில் நெடுஞ்சாலைகளிலுள்ள கொடிக்கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்; அதனை புகைப்படம் எடுத்து தலைமை கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்'' என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேட்டுக்கொண்டார்.
திமுகவின் இந்த உத்தரவு, திமுகவின் தோழமைக் கட்சிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவு கடந்த 21-ந்தேதியோடு முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், கொடிக்கம்பங்கள் அகற்றும் பணிகள் நடந்ததாகத் தெரியவில்லை. எப்போதும் போல் இருந்த இடத்தில் இருந்தபடியே அரசியல் கட்சிகளின் கொடிகள் பட்டொளிவீசி பறந்து கொண்டிருக்கிறது.
திமுக கொடிக்கம்பங்கள்
துரைமுருகன் உத்தரவை ஏற்று திமுகவினரும் திமுக கொடிக்கம்பங்களை அகற்றிய மாதிரியான சம்பவங்கள் எதுவும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. துரைமுருகன் கேட்டுக்கொண்டது போல கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டு அதனை புகைப்படம் எடுத்து கட்சித் தலைமை யகத்துக்கு உடன்பிறப்புகள் அனுப்பி வைக்கவும் இல்லை. அறிவாலயத் தரப்பில் விசாரிக்கும் போது, உதட்டைப் பிதுக்குக்கின்றனர். இந்த நிலையில், நீதிமன்றத்தின் கெடு முடிந்து 5 நாட்கள் ஆவதால், இது குறித்து நடவடிக்கை எடுக்க அரசு தரப்பிலோ, உள்ளாட்சி அமைப்புகள் தரப்பிலோ அக்கறைக் காட்டப்படவில்லை. இதனால், தமிழக அரசுக்கும் உள்ளாட்சி அமைப்பு களுக்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பைத் தொடர சமூக ஆர்வலர்கள் ஆலோசித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications