Flash Back: 1999-ல் பாஜக- திமுக கூட்டணி எப்படி உருவானது? 4 ஆண்டுகால தேனிலவு 'கசந்தது' ஏன்? - பகுதி 2
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் மறைமுக கூட்டணி அமைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு விமர்சிக்கின்றன. ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் இதனை திட்டவட்டமாக நிராகரிக்கின்றனர். இருந்த போதும் திமுக- பாஜக கூட்டணி குறித்த விவாதம் அனல் பறக்கிறது. இந்த தருணத்தில்தான் 1999-ல் திமுக- பாஜக கூட்டணி முதன் முதலில் அமைந்தது என நாம் பார்த்து வருகிறோம்.
இதற்கு முந்தைய அத்தியாயத்தில் (பகுதி 1ல்) 1989-1999-ம் ஆண்டு
அரசியல் கள நிலவரத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை இந்தப் பகுதியில் காண்போம்.

லோக்சபாவில் பாஜகவை ஆதரித்த திமுக: 1999-ம் ஆண்டு லோக்சபாவில் வாஜ்பாய் அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்வைக்க, திமுகவின் நாடாளுமன்ற குழுத் தஐவர் முரசொலி மாறன் ஆதரிப்பதாக அறிவித்தார். ஆனாலும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் 13 மாத பாஜக ஆட்சி கவிழ்ந்தது. பிரதமராக இருந்த வாஜ்பாய் பதவி விலகினார்.
பாஜக கூட்டணி குறித்து கருணாநிதி விளக்கம்: பாஜகவுக்கு திமுக ஆதரவு அளித்தது குறித்து அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, " மதவாதம் இனிமையானது என்று பொருள் அல்ல. பாம்பை விட மோசம் என்று ஒரு பெண்ணையோ ஆணையோ சொன்னால், பாம்பு நல்லது என்று அர்த்தமா? பாம்புக்கும் விஷம் உண்டு என்றுதான் அர்த்தம்" என்றார் கருணாநிதி.
பாஜக- திமுக கூட்டணி: 1999 ஏப்ரல் மாத ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து 1999-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திமுகவின் பொதுக்குழு நடைபெற்றது. அதில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக நீண்ட விவாதம் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில்தான் திமுக- பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. பிராமணர் பனியாக்களின் கட்சி என திமுகவால் விமர்சிக்கப்பட்ட பாஜகவுடன் அதே திமுக கூட்டணி அமைத்தது.
யார் யார் காரணம்?: 1999-ல் திமுக- பாஜக கூட்டணி அமைய காரணமான இருவர் ஒருவர் 'மறைந்த' பிரமோத் மகாஜன்; மற்றொருவர் கருணாநிதியின் மனசாட்சி 'மறைந்த' முரசொலி மாறன். இவர்கள் இல்லாமல் மற்றொருவரைக் குறிப்பிட வேண்டுமெனில் மறைந்த பாஜகவின் ரங்கராஜன் குமாரமங்கலமும் திமுக- பாஜக கூட்டணிக்குக் காரணமானவர்களில் ஒருவர்.
பாஜக ஆட்சியில் திமுக: 1999-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் முதல் முறையாக திமுக- பாஜக கூட்டணி களம் கண்டது. அத்தேர்தலில் திமுக- பாஜக கூட்டணி மொத்தம் 26 இடங்களைக் கைப்பற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மொத்தம் 303 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்தது. பாஜகவின் இந்த ஆட்சியில் திமுகவின் முரசொலி மாறன், டிஆர் பாலு, ஆ.ராசா ஆகியோர் மத்திய அமைச்சர்களாகவும் பதவி வகித்தனர் என்பது சரித்திரம்.
சட்டசபைக்கும் வாசல் திறந்த திமுக: திமுக- பாஜக கூட்டணி என்பது மிகவும் சுமூகமாகவே இருந்தது. 2001 சட்டசபை தேர்தலிலும் திமுக- பாஜக கூட்டணியாகவே களம் கண்டது. அப்போது பாஜகவுக்கு 21 இடங்களை அள்ளிக் கொடுத்தது திமுக. அந்த தேர்தலில் பாஜக 4 இடங்களைக் கைப்பற்றி தமிழ்நாட்டு சட்டசபையில் 'கெத்தாக'வும் நுழைந்தது.
முரசொலி மாறன்: 2002-ம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோமா நிலையிலும் இலாகா இல்லாத அமைச்சராகவே முரசொலி மாறன் நீடிக்க பாஜக ஒப்புக் கொண்டது. 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் முரசொலி மாறன் மறைந்த போது, பிரதமர் வாஜ்பாய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
பாஜகவுடனான தேனிலவு முறிந்தது: 2002-ம் ஆண்டு குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மதவன்முறைகளில் படுகொலை செய்யப்பட்ட போது பாஜக கூட்டணியில்தான் திமுக இருந்தது. மத்திய பாஜக ஆட்சியில்தான் திமுக இருந்தது. இதனால் கடும் விமர்சனங்களையும் சிறுபான்மையினர் மத்தியில் பெரும் எதிர்ப்பையும் திமுக எதிர்கொண்டிருந்தது. இதனையடுத்து 2003-ம் ஆண்டு டிசம்பர் 20-ந் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2003-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி மத்திய அமைச்சரவையில் இருந்து திமுகவின் டிஆர் பாலுவும் ஆ.ராசாவும் பதவியை ராஜினாமா செய்தனர். அத்துட்ன திமுக- பாஜகவுடனான கூட்டணி அத்தியாயம் முடிவுக்கு வந்தது. ஆம் பாஜக- திமுகவின் தேனிலவு பயணம் நிறைவடைந்தது!












Click it and Unblock the Notifications