இந்தியாவை இந்திய ஐக்கிய நாடுகள்- United States of India என மாற்றுக- ராஜ்யசபாவில் அன்றே கர்ஜித்த வைகோ
சென்னை: நாட்டின் பெயரான "இந்தியா" என்பதை "பாரத்" அல்லது "பாரதம்' என மத்தியில் ஆளும் பாஜக அரசு மாற்ற முயற்சிப்பதால் பெரும் விவாதங்கள் கிளம்பி உள்ளன.
நாட்டின் பெயரை "இந்திய ஐக்கிய நாடுகள்" (United States of India) என மாற்ற வேண்டும் என ராஜ்யசபாவில் பல ஆண்டுகளுக்கு முன்னரே தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

2019-ம் ஆண்டு ராஜ்யசபாவுக்குள் 25 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக நுழைந்த வைகோ, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் கன்னி உரையாற்றினார். வைகோவின் அந்த மிக நீண்ட உரையின் இறுதியிலும் இந்தியாவின் பெயர் "இந்திய ஐக்கிய நாடுகள்" என மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
வைகோவின் 2019-ம் ஆண்டு ராஜ்யசபா உரையின் சில பகுதி: மிசா, தடா, பொடா மற்றும் இந்தச் சட்டவிரோதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் எப்படி ஒருவர் பாதிக்கப்படுகின்றார் என்பதற்கு நானே எடுத்துக்காட்டாக நிற்கின்றேன். மூன்று காரணங்களுக்காக இந்தச் சட்டத் திருத்தத்தை நான் எதிர்க்கின்றேன். 1. இந்தச் சட்டம் தனி நபர்களைக் குறி வைக்கின்றது. அவர்களைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகின்றது. நான்காவது அட்டவணையில் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று சேர்ப்பதற்கு முன்பாக, அவர்கள் தரப்பில் எந்த விளக்கமும் அளிப்பதற்கு இந்தச் சட்டம் இடம்தரவில்லை.
மாறாக இந்தச் சட்டம் எந்த ஒரு தனி நபரையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்துவதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. இந்திய அரசியல் சட்டம் வழங்கி இருக்கின்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. 2. காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர்தான் ஒருவரை விசாரிக்க முடியும் என்ற நிலையை மாற்றி, தேசிய புலனாய்வு முகமையின் ஆய்வாளரே எவரையும் விசாரிக்க முடியும் என்று இந்தச் சட்டத் திருத்தம் கூறுகின்றது. 3. இந்தச் சட்டம் சாதாரண மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது.
இந்தச் சட்டத்தின் வாயிலாக மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கின்றது. இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டு அமைப்புதான். ஆனால், 'இந்தியா ஒரே நாடு' என்ற கருத்தை இந்த அரசு திணிக்க முற்படுகின்றது. அது இந்திய ஒற்றுமைக்குக் கேடானது.
உண்மையில் இந்த நாடு, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல 'இந்திய ஐக்கிய நாடுகள்' என்றே அழைக்கப்பட வேண்டும். ஏற்கனவே போதிய சட்டங்கள் இருக்கின்ற நிலையில், கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தம் தேவையற்றது. இந்திய மக்கள் அன்பானவர்கள். வன்முறையை விரும்பாதவர்கள். தங்கள் கருத்துகளை தேர்தல் வாக்குப் பதிவின் மூலமே வெளிப்படுத்த விரும்புகின்றவர்கள். ஐ.நா. மன்றத்தின் சிறப்பு அதிகாரி மார்ட்டின் செயினன் அவர்கள், "பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் பொழுது, மனித உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்" என்பதை வலியுறுத்துகின்றார்.
"பயங்கரவாதத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில், அடக்குமுறை ஆட்சியாளர்கள் தங்களுடைய அரசியல் எதிரிகளை முடக்குவதற்காக, ஒழித்துக்கட்டுவதற்காக அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திவிடுகின்றார்கள்" என்கிறார். எனவே இந்தக் கடுமையான, அடக்குமுறையான, சட்டவிரோத நடவடிக்கைகள் திருத்த மசோதாவை முற்றிலும் நிராகரித்து ஒதுக்கித் தள்ள வேண்டும் என இந்த அவையை வேண்டுகிறேன். தவறினால் எதிர்கால இந்திய வரலாற்றில் மக்களால் இந்தச் சட்டம் குப்பைக் கூடையில் தூக்கி எறியப்படும். இவ்வாறு வைகோ பேசியிருந்தார்.












Click it and Unblock the Notifications