1992-ல் தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவால் கூண்டிலேற்றப்பட்ட நான்.. முரசொலி செல்வம் பகிர்ந்த நினைவலைகள்!
சென்னை: 1992-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தாம் உரிமை மீறல் பிரச்சனைக்காக கூண்டிலேற்றப்பட்ட சம்பவங்களை மறைந்த முரசொலி செல்வம், முரசொலி நாளேட்டில் 'நினைவலைகள்' என்ற தலைப்பில் விவரித்திருந்தார். அதில் சட்டசபையில் தாம் ஏன் கூண்டில் ஏற்றப்பட்டேன்? சட்டசபையில் என்னதான் நடந்தது என மிக மிக விரிவாகவே பதிவு செய்திருந்தார் முரசொலி செல்வம்.
தமிழ்நாடு சட்டசபையில் தாம் கூண்டிலேற்றப்பட்டது தொடர்பாக முரசொலி செல்வம் எழுதியதன் தொகுப்பு:

1992 செப்டம்பர் 25 'முரசொலி' ஆசிரியர் என்ற முறையில் என்னால் மறக்க முடியாத நாள்.!
வரலாறு ஒரு சாமானியனுக்கு சில பக்கங்களை ஒதுக்கிய நாள்.!
ஆம்; அன்றுதான் தமிழக சட்டப் பேரவையின் உள்ளே, பேரவை நடக்கும் போதே, அந்தப் பேரவைக்குள் ஒரு கூண்டு அமைத்து அதன் உள்ளே என்னை நிறுத்திய நாள்.!
அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா அந்தக் காட்சியைப் பார்த்து மகிழ்ந்த நாள்.!
தமிழகம் மட்டுமின்றி, அகில இந்திய ஏடுகளில் நான் கூண்டில் நிற்கும் புகைப்படமும், அதனை ஒட்டிய செய்தியும் தலைப்புச் செய்தியாக மறுநாள் வெளிவரக் காரணமாக இருந்த நாள்.!
1991-ஆம் ஆண்டு, பேரவையில், அன்றைய தி.மு.க. உறுப்பினர் பரிதி இளம்வழுதி 09/09/1991 அன்று உரை நிகழ்த்தினார். அந்த உரையின் ஒரு பகுதியை பேரவைத்தலைவர் ஆளும் கட்சியின் கோரிக்கையை ஏற்று, பின்னர் அவைக்குறிப்பிலிருந்து நீக்குகிறார்.!
முற்பகல் சபை நடவடிக்கையின் போது அனுமதிக்கப்பட்டதை பிற்பகல்தான் அவைத் தலைவர் நீக்குகிறார்.!
'முரசொலி'யின் வெளியூர் பதிப்பு பிற்பகல் 2 அல்லது 3 மணிக்கே அச்சிடப்பட்டு அனுப்பப்படும். முரசொலி அச்சிடப்படும் வரை அந்த நிகழ்வு அவைக்குறிப்பில் இடம் பெற்றிருந்ததால் வெளியூர் பதிப்பு அதனை அப்படியே வெளியிட்டிருந்தது.!
பின்னர் அவைக் குறிப்பிலிருந்து மாலை நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் அறிவித்ததை ஒட்டி அதனை சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பதிப்பில் அந்தப் பகுதி நீக்கப்பட்டு விட்டது.! இதுதான் நடந்தது!
இது குறித்து அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட, பரிதி இளம்வழுதியின் பேச்சின் பகுதிகள் 'முரசொலி'யில் வெளி வந்துவிட்டதாகக் குறிப்பிட்டு 'முரசொலி'யின் ஆசிரியர் பொறுப்பிலிருந்த என்மீது ஒரு உரிமைப் பிரச்சினை அவையில் கொண்டு வரப்பட்டது.
அதனை பேரவைத் தலைவர், உரிமைக் குழுவுக்கு நேரடியாக அனுப்பி வைத்தார்.! உரிமைக் குழுவில் இருந்து 'முரசொலி'க்கு விளக்கம் கேட்டு கடிதம் வந்தது உரிய விளக்கம் 'முரசொலி' சார்பில் அனுப்பப்பட்டது.!
அதில் திருப்தி அடையாது உரிமைக்குழுவுக்கு 'முரசொலி' ஆசிரியராக இருந்த நான் வர வேண்டும் என்று கூறப்பட்டது. அதனை ஏற்று உரிமைக் குழுவுக்கு அது அழைத்த நாளன்று நான் சென்றேன்.!
உரிமைக் குழுவின் உறுப்பினர்கள் என்னிடம் கேள்விகள் கேட்டுத் துளைத்தனர் அத்தனைக்கும் விளக்கமளித்தேன். தவறு 'முரசொலி'யின் மீது இல்லை. அவைத்தலைவர் நீக்கிய பகுதி சில மாலை ஏடுகளிலும் வெளி வந்துள்ளது காரணம் அவைத் தலைவர் நீக்கிய அறிவிப்பு உடனடி அறிவிப்பு அல்ல; அது காலம் தாழ்த்தி எடுத்த முடிவானதால் மாலை ஏடுகளிலும், மாலையில் அச்சாகி வெளியூர் செல்லும் ஏடுகளிலும் அது நீக்கப்படாமல் வெளிவந்துவிட்டது.! பின்னர் காலைப் பதிப்பில் அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட பகுதி வெளிவரவில்லை என்பதையும் விளக்கினேன்.!
ஆதாரமாக காலைப் பதிப்பையும் அவர்களுக்குக் காட்டினேன். நீக்கப்பட்ட செய்தி வெளியான மற்ற மாலை ஏடுகளையும் காட்டினேன். என் விளக்கம் ஏற்கப்படவில்லை. மன்னிப்புக் கேட்டால், இதனை இத்தோடு விட்டு விடலாம் என்று அதில் சிலர் கருத்துத் தெரிவித்தனர். தவறு 'முரசொலி' பக்கம் இல்லாத போது, மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லையே என்றேன் திரும்பத் திரும்ப அவர்கள் அதனை வலியுறுத்த என் நிலைப்பாட்டில் நானும் உறுதியாக இருந்தேன். அதன் பின் என்னைப் போகச் சொல்லி விட்டனர். பின்னர், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை 'முரசொலி' அணுகியது.
"முரசொலி ஆசிரியர் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராக இருந்தால், உரிமைமீறல் பிரச்சினையை விட்டு விடும்படி பேரவைத் தலைவரைக் கேட்டுக் கொள்ள முடியும்" - என்று உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்தபோது முரசொலி சார்பில் வாதாடிய வழக்கறிஞர், பிரதி அச்சிடும்வரை அவைத் தலைவர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கிய அந்தக் குறிப்பிட்ட நிகழ்வு நடைபெறாததால் அதனை வெளியிட்டது அவையின் உரிமையை மீறி விட்டதாகக் கூறப்படுவதை ஏற்பதற்கில்லை என்றும், அதனால் மன்னிப்புக் கேட்கும் நிலை எழவில்லை என்று தெரிவித்ததால் என் சார்பிலான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதன் தொடர்ச்சியாக 11/05/1992 அன்று என்னைக் கைது செய்து பேரவைத் தலைவர் அறைக்கு தமிழக போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கே பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா அமர்ந்திருந்தார். முத்தையா என்னை உடனடியாக அமரச்செய்தார். திரு.முத்தையா அவர்கள் சட்டக் கல்லூரியில் படிக்கும் போது அவருடன் தி.மா.மு.க. என்ற முறையில் நெருங்கிப் பழகியவன் நான். அவரும் என் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்.
என்னைப் பார்த்ததும் அவர் சிறிது கலங்கி விட்டார். பின்னர் அருகில் இருந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு, "இந்தச் சந்தர்ப்பத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை, சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்ததே..." என அவர் கூறினார்.!
அன்று அவர் என்னிடம் நடந்து கொண்ட முறை-உரிமை மீறல் பிரச்சினைக்கு அனுமதி, பின்னர் அதைத் தொடர்ந்து நடந்த நடவடிக்கைகள் எல்லாம் அவைத் தலைவர் என்ற முறையில் அவர் எடுத்த முடிவு அல்ல; அந்த முடிவுகளை எடுக்க அவர் பணிக்கப்பட்டுள்ளார் என்பதைத் தெளிவாக்கியது.
பின்னர் வெளியே அனுப்பப்பட்டவர்களை வரவழைத்த அவைத் தலைவர் முத்தையா என்னிடம்,
"அடுத்து சட்டமன்றம் கூடுகிற நாளில் அவையில் நீங்கள் ஆஜராக வேண்டும்" - என்று கூறினார்.!
இதன் தொடர்பாக ஒரு நோட்டீசில் என் கையெழுத்தைப் பெற்றுக் கொண்டு, "நீங்கள் இப்போது செல்லலாம்"
- எனச்சொல்லி அனுப்பி விட்டார்.
இதனைத் தொடர்ந்து 21/09/1992 அன்று அவையின் கண்டனத்தை ஏற்கும் வகையில் சட்டப் பேரவையில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்து ஒரு 'சம்மன்' சட்டமன்றத்திலிருந்து எனக்கு வந்தது.!
இதுகுறித்து என்ன முடிவு எடுப்பது என்று அறிய தலைவர் கலைஞரைச் சந்தித்து கேட்டேன்.
"சென்றுவா... ஆனால் உன் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து செல்"
- என ஆலோசனை கூறினார்கள்.!
குறிப்பிட்ட அந்த நாளன்று நான் கருப்புச்சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து சட்டமன்றத்துக்குச் செல்லத் தயாராகினேன். என்னுடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்க்காட்டார், வீரபாண்டியார், பரிதி இளம்வழுதி மற்றும் இரா.மதிவாணன் ஆயிரம் விளக்கு உசேன், சைதை கிட்டு ஏ.எல். அழகப்பன், சொர்ணம், அமிர்தம் மு.க.தமிழரசு, ராணிப் பேட்டை காந்தி, ராதா கோவிந்தன், சுந்தரம் போன்றோர் உடன் வந்தனர்.
அவைத் தலைவர் அறைக்கு காவல் துறையினர் என்னை அழைத்துச் சென்றனர். அவைத் தலைவர் அங்கில்லை. அவைக்குச் சென்று விட்டதாகக் கூறப்பட்டது. பிறகு காவல் துறையினர் அழைக்க, உடன் சென்றேன்.
அவை கூடியது, அவையில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய வேறு பல கேள்விகளை ஏற்க மறுத்து,
"உரிமை மீறலுக்காக 'முரசொலி' பத்திரிகை ஆசிரியர் செல்வம் கூண்டில் ஏற்றித் தண்டிக்கப்பட வேண்டுமென உரிமைக்குழு முடிவு அவையில் நிறைவேற்றப்பட உள்ளது. அவையின் இறையாண்மையைக் காக்கும் வகையில் அவை உறுப்பினர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்"
- என்று அறிவித்து விட்டு அவை மார்ஷலை அழைத்து,
"முரசொலி செல்வம் ஆஜராகி இருக்கிறாரா?" எனக் கேட்க,
"ஆம்" என அவர் கூறினார்.!
உடனே, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜி.பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் உறுப்பினர் தம்புசாமி, பாமக உறுப்பினர் #பண்ருட்டி_ராமச்சந்திரன், ஜனதா தள உறுப்பினர் டாக்டர் குமாரதாஸ், எம்ஜிஆர் அதிமுக உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் எழுந்து, "இது ஜனநாயக விரோதமானது தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத செயல். ஒரு பத்திரிகை ஆசிரியரைக் கூண்டில் ஏற்றித் தண்டிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" - என்றனர்.!
அவர்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் அவைக் காவலர்கள் சட்டமன்றத்தின் ஒரு வாசல் வழியாக என்னை அவைக்குள் அழைத்துச் சென்றனர். அவைக்குள் நுழைந்ததும் அங்கே ஒரு கூண்டு. நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிற்க அமைக்கப்பட்டிருப்பது போன்ற கூண்டு.! அந்தக் கூண்டுக்கு நேர் எதிரே அவைத் தலைவர் இருக்கை என்னை அவை உள்ளே அழைத்துச் சென்று அந்தக் கூண்டுக்குள் நிறுத்தினர். அவைக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் வணக்கம் தெரிவித்துவிட்டு நின்றேன்.!
முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அமைச்சர்கள் உட்பட மொத்த அவையே என்னை நோக்கியபடியே இருந்தது. பத்திரிகையாளர் மாடத்தில் இருந்தவர்கள் கருப்புச் சின்னம் அணிந்து காட்சியளித்தனர். கருப்புடையுடன் நான்... கருப்புச் சின்னத்தோடு பத்திரிகையாளர்கள்... மொத்தத்தில் பத்திரிகை சுதந்திரத்துக்கு சாவுமணி அடிக்கப்பட்ட அந்த நாள் ஒரு கருப்பு நாள் என்பதைக் காட்டுவது போல அமைந்திருந்தது அந்தக் காட்சி.!
-இவ்வாறு முரசொலி செல்வம் தமது நினைவுகளை பகிர்ந்திருந்தார்.
-
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
காங்கிரஸை நாயுடன் ஒப்பிட்ட நடிகர் போஸ் வெங்கட்! கைநழுவும் அறந்தாங்கி தொகுதி சீட்? டென்ஷன் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல்












Click it and Unblock the Notifications