சென்னையை மூடிய பனி! வானத்திலேயே வட்டமடித்த விமானங்கள்.. விமான சேவை பாதிப்பு! பயணிகள் அவதி
சென்னை: சென்னையில் புயல் பாதிப்பு ஓய்ந்து தற்போதுதான் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது. விமான சேவைகளும் இயல்புக்கு திரும்பியிருக்கிறது. இந்நிலையில் திடீரென எதிர்பாராத பனிப்பொழிவு காரணமாக விமான சேவையில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழை காரணமாக சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டிருக்கின்றன. குறிப்பாக புயல் கரையை கடந்து 3 நாட்கள் ஆகியும் சென்னையில் சில இடங்களில் இன்றுவரை மின்சாரம் இல்லை. குடிநீருக்கும், பாலுக்கும் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. பாதிப்பை சரி செய்ய வேண்டும் என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மழை பாதிப்புக்கு விமான சேவையும் தப்பவில்லை. புயல் ஓய்ந்து 2வது நாளில் பெரும்பாலான விமானங்கள் இயக்கப்பட்டன. இருப்பினும் இன்று சில விமானங்களின் புறப்பாடு மற்றும் வந்து சேரும் நேரம் தாமதமாகியுள்ளது. சென்னையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கடும் பனிப்பொழிவுதான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இன்று அதிகாலை எங்கு பார்த்தாலும் திடீரென அதிக அளவு பனி படர்ந்திருந்தது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டுக்கொண்டேதான் வாகனத்தை இயக்கினர்.
சென்னை விமான நிலையத்தை பொறுத்த அளவில் ஓடுபாதை தெளிவாக தெரியாததால் விமானங்கள் கொஞ்ச நேரம் வரை வானத்திலேயே வட்டமடித்தன. அதேபோல புறப்படும் விமானங்களும் தாமதமாக சென்றன. குறிப்பாக மதுரை, கோவை, கொல்கத்தா புறப்பட வேண்டிய இண்டிகோ விமானங்கள் தாமதமாகவே புறப்பட்டு சென்றன. இதனால் விமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.












Click it and Unblock the Notifications