காலை பெரிதாக கிழித்து.. நரம்பை அறுத்துள்ளனர்.. கால்பந்து வீராங்கனை பிரியா தந்தை குற்றச்சாட்டு
சென்னை: காலில் பெரியதாக கிழித்து, நரம்பை அறுத்துவிட்டனர் என கால்பந்து வீராங்கனை பிரியாவின் தந்தை ரவிக்குமார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ரவியின் மகள் பிரியா இவருக்கு 17 வயதாகிறது. இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் படித்து வந்தார். கால்பந்தாட்ட போட்டிகளில் மாவட்டம் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இவருக்கு ஒரு நாள் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்த போது மூட்டு வலி அதிகமாக இருந்தது. இதனால் கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

பிரியா உறவினர்கள்
அப்போது பிரியாவை சோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு மூட்டு பகுதியில் ஜவ்வு விலகியுள்ளதாக கூறினர். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். ஒரு வாரமாக அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரியாவுக்கு மருத்துவர்கள் இருவர் அறுவை சிகிச்சை செய்தனர்.

பிரியாவின் காலில் வீக்கம்
இதையடுத்து பிரியாவின் காலில் வீக்கம் ஏற்படத் தொடங்கியது. இதனால் அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பிரியாவின் கால்களில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இறுக்கமாக கட்டு கட்டப்பட்டிருந்ததால் அவரது காலில் உள்ள தசைகள் அழுகிவிட்டன. ரத்தம் கட்டியாகிவிட்டது. இதனால் காலை அறுவை சிகிச்சை செய்து நீக்க வேண்டும் என தெரிவித்தனராம்.

பிரியாவுக்கு அறுவை சிகிச்சை
இதையடுத்து பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை இன்று காலை மிகவும் மோசமடைந்தது. பின்னர் சிறிது நேரத்தில் பிரியா உயிரிழந்துவிட்டார். இந்த மரணம் குறித்து அவரது தந்தை ரவிக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், எனது மகளை பெரியார் நகர் மருத்துவமனையில் 10 நாட்கள் வைத்திருந்தனர்.

காப்பீடு திட்டம்
ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு திட்டம் வர வேண்டும் என்றார்கள். பின்னர் ஸ்கேன் செய்து அவரது காலை நீளமாக கிழித்துவிட்டனர். இதனால் நரம்புகள் துண்டிக்கப்பட்டது. அப்போது பிரியாவின் காலில் இருந்து ரத்தம் வடிந்ததால் அஞ்சிய மருத்துவர்கள் ரத்த போக்கை நிறுத்த முட்டியிலிருந்து கெண்டைக்கால் வரை துணி வைத்து இறுக்கமாக கட்டி விட்டனர்.

கால் வீக்கம்
திடீரென கால் வீங்கியதால் பிரியாவை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தான் மருத்துவர்கள் இது போல் கட்டு கட்டியதால்தான் ரத்த ஓட்டம் பாயாமல் தசைகள் அழுகிவிட்டது. தொற்று பரவிவிட்டது. ரத்தமும் உறைந்துவிட்டது. எனவே அவருக்கு முழங்காலுக்கு மேல் வரை நீக்க வேண்டும் என மருத்துவர்கள் சொன்னார்கள்.

கால் அகற்ற அறுவை சிகிச்சை
அதன்படி அறுவை சிகிச்சை நடந்தது. எனது மகள் ஒரு மணி நேரத்தில் நன்றாக ஆகிவிடுவார் என்றார்கள். ஆனால் சடலமாகத்தான் வந்தாள். பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த இரு மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் அப்போதே பிரியாவை பெரிய மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறினோம். ஆனால் மருத்துவர்கள்தான் இது சின்ன காயம்தான், இங்கேயே அறுவை சிகிச்சை செய்யலாம் என்றார்.












Click it and Unblock the Notifications