பிரியா எழுந்திரு.. இந்தா ஜெர்ஸியை பிடி.. விளையாடலாம் வா.. கூப்பிடுறது கேக்குதா.. கதறிய தோழிகள்
சென்னை: ஜெர்ஸியை போட்டுக் கொண்டு வா விளையாடலாம், எழுந்திரு என கால்பந்து வீராங்கனை பிரியாவின் தோழிகள் கதறி அழும் காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பிரியா. 17 வயது மாணவி. இவர் ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் கால்பந்தாட்டத்தில் கற்று தேர்ந்தவர்.
மாவட்ட அளவில் தேசிய அளவில் விளையாடி பல கோப்பைகளை பெற்றவர். படிப்பிலும் கெட்டிக்கார பெண். பள்ளியில் தொடங்கிய கால்பந்தாட்ட பயிற்சி கல்லூரிக்கு சென்ற பிறகு பிரியாவுக்கு தொடர்ந்தது.

காலில் வலி
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் விளையாடிய போது காலில் வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பிரியாவின் காலை பரிசோதித்த மருத்துவர்கள் கால் முட்டியில் ஜவ்வு கிழிந்துவிட்டதாக தெரிவித்தனர். இதற்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் என்றும் தெரிவித்தனர்.

கொளத்தூர் புறநகர் மருத்துவமனை
ஆனால் பிரியாவின் பெற்றோர் தங்களுக்கு கொளத்தூர் புறநகர் மருத்துவமனை பக்கம் என்பதால் அங்கு சிகிச்சைக்கு பார்த்து கொள்வதாகவும் அதற்கு எழுதி கொடுக்குமாறும் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து பிரியாவை கொளத்தூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு மூட்டு பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உதிர போக்கு
இந்த நிலையில் காலில் அதிக அளவு உதிர போக்கு இருந்ததால் காலில் இறுக்கமாக கட்டு போடப்பட்டது. அறுவை சிகிச்சை செய்த பிறகு பிரியா வலியால் துடிப்பதும் அவருக்கு மயக்க ஊசியை மருத்துவர்கள் போடுவதுமாக இருந்ததாக அவரது அத்தை தெரிவித்திருந்தார். ஒரு கட்டத்தில் காலில் அதிக அளவு வீக்கம் ஏற்பட்டது.

கொளத்தூர் அரசு மருத்துவமனை
இதனால் கொளத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரியாவை ராஜீவ் காந்தி அரது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கட்டை பிரித்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது காலில் நீர் கசிய தொடங்கியது, சிறுநீரில் ரத்தமும் வெளியானது. மேலும் கட்டு கட்டிய இடத்தில் தசைகள் அழுகிவிட்டன, ரத்தமும் உறைந்துவிட்டது. காலில் அதிக தொற்று ஏற்பட்டுவிட்டதால் காலை அகற்றினால்தான் மற்ற பகுதிகளை காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறினர்.

கால் அறுவை சிகிச்சை
அதன்பேரில் அவரது கால் அறுவை சிகிச்சை மூலம் முட்டிக்கு மேற்பகுதி வரை நீக்கப்பட்டது. இதையடுத்து பிரியாவுக்கு இன்று உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து உறுப்புகள் செயலிழக்க தொடங்கிய நிலையில் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அறுவை சிகிச்சையை சரியாக செய்துவிட்டு காலில் இறுக்கி கட்டு போட்டு அலட்சியமாக நடந்து கொண்ட இரு மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பிரியாவின் தோழி
எனினும் இருவரையும் கைது செய்யும் வரை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சடலத்தை வாங்க மாட்டோம் என பிரியாவின் தோழிகள், உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பிரியாவின் உடல் அவருடைய வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரியா
அங்கு பிரியாவின் உடலுக்கு அவருடைய கல்லூரி தோழிகள், பள்ளி தோழிகள், சக கால்பந்து வீராங்கனைகள், உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது பிரியாவின் தோழிகள் அவர் கால்பந்து விளையாட பயன்படுத்தும் ஜெர்சியை காட்டி பிரியா எழுந்துவாடி, இந்தாடி ஜெர்சியை போடு, எழுந்திரு விளையாட போகலாம் என கதறி அழுதனர். ஒரு கட்டத்தில் பிரியாவின் தாயிடம் அம்மா அவளை எழுந்து வர சொல்லுங்கம்மா என கதறி அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது.












Click it and Unblock the Notifications