”அரசு எந்தக் குறையும் வைக்கவில்லை.. என் குழந்தைதான் சார் போயிருச்சு” தழுதழுக்கும் பிரியாவின் தந்தை!
சென்னை: தமிழக அரசு தரப்பில் தங்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை என்றும், மகள் உயிரிழந்தது தான் வருத்தம் என்று உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் தந்தை ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரவிக்குமாரின் மகள் பிரியா. ஏழை குடும்பத்தை சேர்ந்த பிரியா, தனியார் கல்லூரியில் படித்தபடியே கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தவர். இதனிடையே கால்பந்து போட்டியின் போது அண்மையில் பிரியாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகியது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பின், ரத்த ஓட்டம் தடைப்பட்ட நிலையில் பிரியாவின் கால் வீக்கமடைந்து வலி ஏற்பட்டது.

பிரியா உயிரிழப்பு
இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கால் அகற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பிரியா உயிரிழந்தார். பிரியாவின் உயிரிழப்புக்கு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்ததே காரணம் என்று தெரிய வந்த நிலையில், மருத்துவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்தக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

நேரில் சென்ற முதல்வர்
இதனிடையே உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புதிதாக வீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் பிரியாவின் குடும்பத்தினரை சந்தித்தார்.

குடும்பத்தினருக்கு ஆறுதல்
சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் வீட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து இழப்பீடாக ரூ.10 லட்சம் நிதி, அரசு சார்பில் வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பிரியாவின் குடும்பத்தினர் கூறுகையில், எங்கள் தரப்பில் வீட்டில் உள்ள ஒருவருக்கு அரசு பணி மட்டுமே கோரிக்கையாக வைத்தோம். ஆனால் அரசு தரப்பில் இழப்பீடும், வீடு வழங்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு நன்றி
இதற்காக முதலமைச்சர் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தைரியமாக இருங்கள். பெரிய இழப்பு என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. மருத்துவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதேபோல், அப்பா, அம்மாவை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

இது ஒன்றுதான் வருத்தம்
எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன தேவையோ, அதனை குடும்ப உறுப்பினர் போல் உடன்நின்று அரசு செய்து கொடுத்துள்ளது. அது பிரியாவின் கனவை நாங்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார் என்று தெரிவித்தனர். தொடர்ந்து பிரியாவின் தந்தை ரவிக்குமார் கூறுகையில், அரசு தரப்பில் எந்தக் குறையும் எங்களுக்கு வைக்கவில்லை. ஆனால் என் மகள் தான் உயிரிழந்துவிட்டார். அதுதான் வருத்தம் என்று தழுதழுத்த குரலில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications